இன்று ஒரு சாதகருக்கு காயத்ரி சாதனை என்றால் என்ன என்று விளக்கிய படம்.
எமது ரிஷிகள் உணர்ந்த படி ஆரம்பத்தில் பிரபஞ்சம் ஒரு புள்ளியைப்போன்று பிந்து அல்லது விந்தாக இருந்து பின்னர் அக்னியின் ஆற்றலால் இரண்டு அதிர்வாக பிளந்தது. இந்த அதிர்வினை ஸ்பந்தம் என்பார்கள் ரிஷிகள். இந்த அக்னியே படைப்புக் கடவுளான பிரம்மா.
இந்த ஸ்பந்தத்தின் ஒரு புறம் ஜடப்பிரபஞ்சத்தை ஐம்பூதங்களாக உருவாக்கியது.
மற்றொரு அதிர்வு - ஸ்பந்தம் சைதன்யம் அல்லது உயிர்ப்பினை உண்டாக்கியது. அந்த உயிர்ப்பு மேலும் பிளவுபடக்கூடிய் ஆற்றலுள்ள அறிவாக பிரபஞ்சத்தின் ஜடசக்தியான பஞ்சபூதங்களை மேலும் அதிர்வுகளை உருவாக்கி பிரபஞ்சத்தை விரிவித்துக்கொண்டு செல்கிறது. இப்படி பிரபஞ்ச அறிவு சக்தி ஜடப்பிரபஞ்சத்தை பிளந்து விரிவிக்க அக்னித்தன்மை தேவை. ஆகவே அந்த அக்னியை மணம் முடித்துக்கொண்டது. இதுவே பிரம்மா ஸாவித்ரியைப் படைத்து அவரே மணம் முடித்துக்கொண்டார் என்பதன் அர்த்தம்.
இந்த பிரபஞ்ச அறிவு சக்தியின் பெயர் ஸாவித்ரி! இந்த ஆற்றலை மனிதன் கவரக்கூடிய வகையில் சொற்கட்டுக்குள் கொண்டு வந்தவர் விஸ்வாமித்ர ரிஷி!
பின்னர் இந்த அறிவு படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றையும் ஒரு சுழற்சியாக செய்து கொண்டு இந்த பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறது.
இந்த உயிர்ப்பு சக்திக்கு மூன்று குணம் உள்ளது;
1) ஆசை அல்லது காமம்
2) விழிப்புணர்வு
3) தன்முனைப்பு
இந்த மூன்றுமே அறிவு செயற்படுவதற்கான, உயிர்த்தன்மை இருப்பதற்கான அறிகுறிகள். சைதன்யம் அல்லது உயிர்த்தன்மையால் பிராணமய கோசம் உருவாகிறது. மேற்கூறிய ஆசை, விழிப்புணர்வு, தன்முனைப்பு மூன்றாலும் பிராணன் அசைவுறும். இந்த அசைவால் மனம் தோற்றம் பெறுகிறது.
மனம் என்பது எண்ணம், சங்கல்பம், விகல்பம் என்ற மூன்று நிலைகளில் இயங்கும். எண்ணமாக இருக்கும் போது செயலற்று வெறுமனே சோம்பியிருக்கும். இதனால் தாமச குணம் உருவாகும்.
விகல்பத்தால் அதிக எண்ணங்கள் சங்கிலிக் கோர்வையாக ஏற்படுத்த அது ராஜஸ குணமாக மாறும்.
சங்கல்பத்தில் ஒரு இலக்கில் சீராக மனம் பாய சத்துவம் குணம் உண்டாகும்.
இப்படி மனிதன் ஜடப் பிரக்ருதியான ஸ்தூல உடலையும், சைதன்ய சக்தியான சூக்ஷம உடலையும், பரம்பொருளின் அமிசமான அக்னிமய காரணசரீரத்தையும் பெறுகிறான்.
ஸ்தூல சரீரத்திலிருந்து சூக்ஷ்ம சரீரம் சென்று காரண சரீரம் அடைதலே யோகத்தின் முதல் இலக்கு!
இந்த ஒளி பெருகி மகாகாரண சரீர நிலை அடைந்தவர்களையே நாம் பிரபஞ்சத்தில் நிலையாக இருந்து மனிதகுலத்திற்கு வழிகாட்டும் மெய்ஞான குருவாகக் கொள்கிறோம்.
இதைச் சாதிக்க படைப்பின் ஆரம்பத்திலிருந்து அந்த ஸவிதாவின் பேரொளியான பிரபஞ்ச அறிவுடன் எமது அறிவினை இணைக்க வேண்டும்.
இதற்கு துணைபுரிவதே காயத்ரி சாதனை!
இதை விளக்கும் படமே இங்கு இணைக்கப்பட்டுள்ளது!
இதற்குமேல் உள்ள விஷயங்கள் ஆர்வமுள்ளவர்களின் தகுந்த கேள்வி பதிலூடாக உரையாடலாம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.