இது நல்ல சுவாரசியமான ஒரு கருத்துரையாடலுக்கான வாய்ப்பு!
இன்றைய பதிவில் நான் நண்பர் JaiGanesh S Nadar ஐ நாடாரே என்று விளிக்க தம்பி Mynthan Shiva "நாடார்’களையும் ‘மேனன்’களையும் தேவர்களையும் கவுண்டர்களையும் ஹலைட் பண்ணிக்காம இருக்கலாம்ல. பெயர் எதுக்கு இருக்கு" என்று கேட்க,
அது எனது சிந்தனையைத் தூண்ட, சில நாட்களுக்கு முன்னர் அண்ணன் அமைச்சர் Mano Ganesan ஜாதி சங்க மண்டபத்தைத் திறக்கச் சென்று நெட்டிசங்களின் கண்டத்திற்காக "எவ்வளவு நல்லது செய்தாலும் எமது மக்களிற்கு குறையே தெரிகிறது" என்று நொந்து கொள்ள,
இது பற்றி என் கருத்து என்ன என்பதே இந்தப்பதிவு!
அண்மையில் வாசித்த யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் நூல் இது பற்றி விரிவாக உரையடுகிறது.
அறிவுள்ள மனிதனின் (Homo sapiens) இனது பலமே ஒற்றுமை!
எப்படி உடல் வலிமை குறைந்த விலங்கான மனிதன் வலிமையான விலங்குகளை எல்லாம் கட்டி இந்த பூமியை ஆள்கிறான் என்றால் மனிதன் தனது சிக்கலான மூளையினை கூட்டாகச் சேர்ந்து பயன்படுத்தத் தெரிந்திருப்பதால், வலிமையானவன் என்பதை அவன் அறிந்திருப்பதால்! மனிதன் தனியொருவனாக எதையும் சாதிக்க முடியாதவன்!
சந்திரயான்- 2 திட்டத்தை நடைமுறைப்படுத்த 16500 மனிதர்களின் அறிவு தேவைப்படுகிறது. நாம் இந்த Facebook தளத்தைப் பயன்படுத்த 35,587 மனிதர்கள் தமது உழைப்பைச் செலவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆகவே மனிதனின் பலம் ஒற்றுமை! பல மூளைகளும், மனமும் ஒருங்கிணைத்து ஒரு இலக்கில் செலுத்தப்பட வேண்டும்!
அந்த பலத்திற்காக ஏற்பட்டவை தான் சமூகக் குழுக்கள்! ஒரு பொது அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு அனைவருமாக குறித்த இலக்கிற்குப் பாடுபட்டால் இந்த உலகில் பலமுடையவர்களாக இருக்கலாம் என்பதே குழு நடத்தையின் (Group Behavior) அடிப்படை! அரசியல் கட்சிகள், ஜாதிக்கூட்டங்கள், மதக்கூட்டங்கள் எல்லாம் இப்படி கூட்டமாக பலமாக இருப்பது எப்படி என்ற தந்திரோபாயத்திற்காகவே உருவாக்கப்படுகிறது.
இப்படி தமது உணவுத்தேவைக்கும், பாதுகாப்பிற்கும் கற்காலத்தில் உருவாகிய மனிதக் குழுக்கள், படிப்படியாக பூமியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபின்னர், வேறு வேலை இல்லாமல் ( ) காலப்போக்கில் தமக்குள்ளேயே யார் பலமானவை என்ற போட்டிக்குள் இறங்கியதால், மற்றவிலங்குகளுடன் போட்டி போடுவதை விட்டு விட்டு தமக்குள்ளேயே போட்டி போடத் தொடங்கியது! இதன் வடிவங்கள்தான் ஜாதிச் சண்டைகள், மதம், இனம், கறுப்பு வெள்ளை, அதிகார, அரசுச் சண்டைகள்!
ஒற்றுமைக்காக ஏற்படுத்தப்பட்ட இன, மத, ஜாதி அடையாளங்கள் மனிதனின் மனதிற்குள் இருக்கும் ஆணவம் - Ego செயற்பட, புத்தி நிலை குலைய பிளவிற்கான காரணிகளாயின! வர்க்க பேதங்கள் உண்டாயிற்று! மனித குழுக்களுக்கிடையிலான மோதல் வளங்களுக்கான போட்டியால் உருவான ஒன்று என்று கூறப்படுவது என்னைப் பொறுத்த வரையில் தவறானது! மனிதனது அடிப்படைத் தேவைகள் சொற்பமானவை! தானாக உருவாக்கிக்கொண்ட ஆசைகள், பேராசைகள் அதிகமானவை. ஆகவே அவனது சிக்கலான மூளையும், சலனிக்கும் மனமும் ஏற்படுத்தும் சிக்கல்களே இந்த உலகின் பெரும் பிரச்சனைகள்! மனிதன் அடிப்படைத் தேவைகளை விட கற்பனைத்தேவைகளுக்கு அதிகமாக உழைப்பவன்!
ஆக குழுக்களின் அடையாளங்களை களைவதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை! மனப்பாங்கு செம்மையாகவேண்டும்! அனைத்து மனிதரும் ஒற்றுமையாகச் செயற்பட்டாலே நாம் பலமாக வாழலாம் என்ற அறிவியல் உண்மை தெளிவிக்கப்பட வேண்டும்.
ஆக எல்லோரும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் உதவி, வாழ எந்தவொரு அடையாளமும் துணைபுரியுமானால் அது நல்லதே!
மனிதரைப் பிரித்து கூட்டு வலிமையைக் குன்றச் செய்யும் எதுவும் தவிர்க்கப்பட வேண்டியவை!
ஆகவே ஜாதி, மதம் போன்ற வெளி அடையாளத்தினைத் தூக்கி எறிவதால் நன்மை உருவாகும் என்று மேலோட்டமாக எண்ணுவதைவிட மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைய என்ன மனப்பாங்கினை உருவாக்க வேண்டும் என்பதே நாம் உரையாட வேண்டும் என்றே நினைக்கிறேன்!
ஏனென்றால் இந்தப் பிரபஞ்சம் ஒற்றுமையையும் ஒத்திசைவையும் (Harmony) நோக்கியே அசைகிறது, அதற்கு எதிரானவை எல்லாம் வலிமை இழக்கச் செய்யப்படுகிறது என்றே நான் கருதுகிறேன்!