சுற்றுச் சூழல் தினம் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்குரிய தினமல்ல! சிந்தனை செய்வதற்குரிய தினம்!
ஒரு சூழலியல் விஞ்ஞானம் பயின்ற சிந்தனையாளன் என்ற அடிப்படையில் கருத்துப் பகிர்வது கட்டாயமாகிறது!
இன்று சூழலைப் பாதுகாக்க மரம் நடவேண்டும், அரசிற்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும் என்பது trend ஆக இருக்கும் காலத்தில் எது சூழலியல் பாதுகாப்பு என்ற கேள்வி எழுகிறது.
நுகர்வுக் கலாச்சாரத்தினால் மனம் போதை ஏற்றப்பட்டிருக்கும் வரை உண்மையான சூழலியல் பிரச்சனைகள் தீர்க்கப்படமாட்டாது என்பது தான் உண்மை!
மனிதன் தனது அடிப்படைத் தேவைகள் என்பதைத் தாண்டி சுகபோகத் தேவைகள் என்னும் நிலைக்கும் உற்பத்தியை பெருக்க விளையும் போது இயற்கை வளத்தை கொள்ளையடிப்பது அவசியமாகிறது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் காரை நகரிற்கு சென்றிருந்தேன். அங்கு எமக்கு வேண்டப்பட்ட ஒரு பெரியவர் முன்னர் மண்ணியல் விஞ்ஞானியாக (Soil Scientist) ஆக இருந்த அறிவியலாளர். அவருடன் காரைநகரின் மண்ணியல் அமைப்பைப் பற்றி உரையாடினோம். காரைநகர் கடல் சூழ்ந்த மணல் பாங்கான மண்ணை உடையது. இந்த வகை மண்ணில் மழை நீர் உடனடியாக கீழே சென்று நன்னீர் தேக்கத்தை உருவாக்கி ஒரு அழுத்தத்தை கடல் நீரிற்கு எதிராக உருவாக்கி கடல் நீர் உள்ளே வராமல் தடுத்துக் கொண்டிருக்கும், (படம் பார்க்க)
இந்த அழுத்தத்தை சரியாக வைத்திருந்தால் மட்டும் தான் அந்த இடத்தின் நன்னீர் வளம் சரியாக இருக்கும்.
ஆனால் ஊரிலுள்ள எல்லோருக்கும் சொந்தமாக கிணறு வேண்டும் என்றும், நிலத்தடி நீரின் நுகர்வு அதிகரிக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த ஊரினதும் நீர்வளம் போய்விடும்! நீர்வளம் போவது மட்டுமல்ல, தொடர்ச்சியாக தாவரங்கள் அழிந்து பாலைவனமாகும் நிலைக்கு சூழல் தள்ளப்படும்.
ஆகவே சூழலியலில் செயலிற்கு முன்னர் புரிதல் அவசியம்! இப்படியான கடற்கரையோரங்களில் மக்களை முன்னேற்றுகிறோம் என்று வீட்டிற்கு ஒரு கிணறு கொடுக்க வேண்டும் என்ற திட்டம் தவறானது. கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் திட்டங்கள் பொருத்தமானவை!
ஆகவே சூழலியல் பிரச்சனைகள் சிக்கலும் ஆழமான பார்வையும் கொண்டு அணுகப்பட வேண்டியவை.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.