ஆதி காண்டம்
முதற்சர்க்கம்
சங்கேத வைகறை
கீழ்வரும் ஸாவித்ரியின் வரிகள் அருமையானவை, எனக்கு மிகவும் பிடித்தமானவை. நாம் ஒரு செயலை எப்படிச் செய்கிறோம்? துன்பங்களில் இருக்கும் போது திடீரென ஏதாவது ஒரு எண்ணம் தோன்றி அந்த துன்பத்திலிருந்து விழித்தெழுந்து செயல்பட்டு நன்மை செய்ய எது துணைபுரிகிறது இவற்றையெல்லாம் விளக்கி நிற்கிறது.
அசையாப் பொருளாய் இறுகி நிற்க
அந்தக் கணந்தனில் மர்ம மானதோர்
இருட்குகை தன்னில் ஏதோ வொன்று
உயிர்த்தது; பெயரிலா இயக்கமாய், எண்ணாக்
கருத்தாய், விடாப்பிடியாய்த் திருப்தியு
மின்றி யாதோர் இலக்கு மின்றி
எதோ வொன்று இச்சையுற்றது – எனினும்
அதன்படி நிற்க வகையறியாமல்
அஞ் ஞானத்தின் துயிலினைக் கலைத்திட
அசேத னத்தினைத் தீண்டியதாமே
நாம் இருளில், எந்த முயற்சியும் இல்லாமல் துன்பமுறும் போது திடீரனெ ஒரு சலனம், உயிர்ப்புத் தோன்றி ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு திருப்தியற்ற நிலை மனதில் ஏற்பட்டு எமது முயற்சியை ஆரம்பிக்கிறோம். இப்படியான ரஜோ குணத்துடன் கூடிய முயற்சியே அஞ்ஞானத் துயிலினைக் கலைக்கும் சக்தி!
இந்த வரிகள் துன்பமுற்று இருளில் நிற்கும் போது எமக்குள் ஏற்படும் அகத் தூண்டலை ஏற்று செயல்புரியவேண்டும் என்ற நுண்மையையும் கூறி நிற்கிறது. அதுவே எமது படைப்புக்கு மூலம் என்பதை விளக்குகிறது.
வாழ்வின் இருளான நேரம் எமது ஒளி மிகுந்த வாழ்க்கைக்கு முன்னரான வைகறைப் பொழுது என்ற உண்மையையும் இந்த வரிகளில் ஸ்ரீ அரவிந்தர் கூறி நிற்கிறார்.
நாம் துன்பமுற்றுக் கலங்கி நிற்கிறோம், எங்கிருந்தோ ஒருவர் வருகிறார், எம்முடன் உரையாடுகிறார், நாம் எமது துன்பத்தைக் கூறுகிறோம், அதற்கு அவர் வழிகாட்டுகிறார். அந்த வழிகாட்டல் இறை சக்தி எம்மக்கு ஏற்படுத்தும் உயிர்ப்பு!
"அந்தக் கணந்தனில் மர்ம மானதோர்
இருட்குகை தன்னில் ஏதோ வொன்று
உயிர்த்தது;" என்ற வரிகளின் சந்தர்ப்பம்!
அதை பிடித்துக் கொண்டு எமது செயலை தீவிரமாக செய்ய ஆரம்பிக்க ஆரம்ப நிலை இலக்கு அற்றதாகவும், ஆனால் எமது இச்சையினால் அந்த செயல் நடைபெறுவதாகவும் இருக்கும்!
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போது பலரும் அதை எதிர்க்கத்தொடங்குவர், தூற்றுவர்! மனதை நோகடிப்பார்கள்! இவை எல்லாம் எமது செயலுக்கு நல்ல உரமாக்கக் கூடிய இருளின் வலிமைகள்! அவற்றை தூண்டலாக எடுத்துக் கொண்டு முன்னேறுவதே இறைவனின் தூண்டலை நம்மில் செயல்படுத்தும் வழி!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.