ஆதி காண்டம்
முதற்சர்க்கம்
சங்கேத வைகறை - முதல் 23 - 35 வரிகள்
கீழ்வரும் வரிகள் படைப்பின் முதல் சலனத்தின் இயல்பு பற்றிக்குறிப்பிடுகிறார். இதில் தற்போதைய நவீன இயற்பியலின் Chaos Theory இன் கூறுகள் காணப்படுகிறது.
Athwart the vain enormous trance of Space,
Its formless stupor without mind or life,
A shadow spinning through a soulless Void,
Thrown back once more into unthinking dreams,
Earth wheeled abandoned in the hollow gulfs
Forgetful of her spirit and her fate.
The impassive skies were neutral, empty, still.
Then something in the inscrutable darkness stirred;
A nameless movement, an unthought Idea
Insistent, dissatisfied, without an aim,
Something that wished but knew not how to be,
Teased the Inconscient to wake Ignorance.
(விஜயா சங்கர நாராயணன் மொழிபெயர்ப்பு)
பிராணனு மில்லா மனது மில்லா
வடிவமற்ற மயக்க முடைய
விண்வெளி யதனின் பயனிலா அகண்ட
சமாதியதினில், உயிரிலாச் சூனிய
வெளியில் ஒருநிழ லாகத் தன்னைத்
தானே சுற்றிய வண்ணம் மீண்டும்
ஒருமுறை நினைத்தல் இல்லாக் கனவுகளில்
எறியப் பட்டு, கைவிடப்பட்டு
நிலமாம் அன்னை அதலக் குழியில்
தன் விதி தனையும் தன்னிலை யதனையும்
முற்றும் மறந்து வலம்வந் தனளாம்.
சலனமற்ற வான வெளியும்
வெறுமை பூண்டு நடு நிலை கொண்டு
அசையாப் பொருளாய் இறுகி நிற்க
அந்தக் கணந்தனில் மர்ம மானதோர்
இருட்குகை தன்னில் ஏதோ வொன்று
உயிர்த்தது; பெயரிலா இயக்கமாய், எண்ணாக்
கருத்தாய், விடாப்பிடியாய்த் திருப்தியு
மின்றி யாதோர் இலக்கு மின்றி
எதோ வொன்று இச்சையுற்றது – எனினும்
அதன்படி நிற்க வகையறியாமல்
அஞ் ஞானத்தின் துயிலினைக் கலைத்திட
அசேதனத்தினைத் தீண்டியதாமே
படைப்புக்கும் முந்திய நிலை “Its formless stupor without mind or life”, மனமோ, பிராணனோ, வடிவமோ இல்லாத ஒரு சமாதி நிலையில் ஆகாய பூதம் இருக்கிறது. இன்னும் படைப்பு நிகழவில்லை!
அன்னை பராசக்தி ஸாவித்ரியாக மனிதகுலத்தின் நன்மை வேண்டி கீழிறங்கி வரவேண்டும். ஆனால் இன்னும் படைப்பு நிகழ்வதற்குரிய முதல் சலனங்களான மனமும், பிராணனும் செயற்படவில்லை. ஆழ்ந்த சலனமற்ற சூன்ய நிலை ஒன்றே இருக்கிறது. இந்த உயிரில்லாச் சூனிய நிலையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு கரு நிழலாக அன்னை இருக்கிறாள், தன்னையும், தனது ஆற்றலையும் வெளிப்படுத்தும் படி இந்த பிரபஞ்சம் பக்குவப்படவில்லை! ஆகவே அன்னை ஒரு கருங்குழியாக Forgetful of her spirit and her fate என்ற நிலையில் தனது ஆற்றல் அனைத்தையும் மறந்து உறை நிலையில் இருக்கிறாள். அவள் வரவேண்டிய பூமியோ கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. நிலத்தை வளப்படுத்தும் வானவெளியோ சலனமற்று இறுகி நிற்கிறது. எந்த இயக்கமும் நடக்கவில்லை. இப்படி இருக்கும்போது ஒரு கணத்தில் மர்மமான ஒரு இருள் நிறைந்த குகையில் திடீரெனெ ஏதோ ஒரு உயிர்ப்பு நிகழ்கிறது. இதற்கு என்ன காரணம் என்று எவருக்கும் தெரியாது, இந்த சலனம் பற்றி Sri Aurobindo ஐந்து இயல்புகளைக் குறிப்பிடுகிறார்
1. nameless movement – பெயரில்லா இயக்கம்
2. an unthought Idea – எண்ணமில்லாக் கருத்து
3. Insistent - விடாப்படியான
4. dissatisfied - திருப்தியற்ற
5. without an aim – இலக்கற்ற
அதாவது படைப்பின் முதல் சலனத்தின் இலக்கணம் இந்த ஐந்து இயல்புகளைக் கொண்டிருக்கும். அந்த முதல் இயக்கம் இது தான் என்று எம்மால் குறிப்பிட்டு உறுதியாகச் சொல்ல முடியாது. ஆகவே பெயரில்லா இயக்கம் – nameless movement, அந்த இயக்கம் இப்படித் தான் இருந்தது என்று கருத்தோ எண்ணமோ சொல்ல முடியாது ஆகவே எண்ணமில்லாக் கருத்து – unthoouth idea, ஆனால் அந்த இயக்கம் தொடங்கியது முதல் இன்றுவரை நிற்காமல் விடாப்பிடியாக இருக்கிறது. இந்த இயக்கம் நிற்காது ஏனெனில் அதற்கு தனது படைப்பில் எப்போதும் திருப்தி இருப்பதில்லை! அது திருப்தியற்று இருப்பதாலேயே விடாப்பிடியாகவும், எண்ணமில்லாக் கருத்தாகவும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. கடைசியாக இந்த இயக்கத்திற்கு எந்த இலக்கும் இருக்கவில்லை! இப்படித் தான் பிரபஞ்ச இயக்கம் ஆரம்பமாகியது.
ஸ்ரீ அரவிந்தர் இந்த வரிகளில் அழகாக Chaos Theory இனை விளங்கப்படுத்துகிறார். சலனமற்று இருக்கும் ஒரு தொகுதி திடீரென என்ன இலக்கு எது என்று தெரியாமல் அதிர ஆரம்பிக்கிறது, அந்த அதிர்வு தொடர்ச்சியாக விடாப்பிடியாக இருக்க அந்த தொகுதி சிக்கல் தன்மை பெறுகிறது. இந்தக் கோட்பாடு 1961 இல் வானியல் இயற்பியலில் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் ஸ்ரீ அரவிந்தர் தனது ஸாவித்ரி காவியத்தில் பிரபஞ்ச தோற்றத்தில் இதைப்பற்றிக் கூறுகிறார்.
இப்படி சலனித்த அந்தச் சலனம் நிற்க முடியாது. அதனால் அசேதனமாகத் தீண்டியது. அப்படித் தீண்டியதால் அசேதனத்தின் அஞ்ஞானம் அகலவேண்டி வந்தது.
இந்த வரிகள் அருமையானவை. உயிர்ப் பற்ற இருளிற்குள் ஒரு சலனமாக அன்னை பராசக்தி – ஸாவித்ரி இருக்கிறாள். அது சலனிக்க ஆரம்பிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை, இலக்கும் இல்லை, இந்த சலனத்தை நிறுத்தவும் முடியாது, அதனால் வேறு வழியில்லாமல் அசேதனம் என்ற உயிர்ப்பற்ற பொருளைத் தீண்டுகிறது என்று கூறுகிறார்.
ஞானம் பெறுதல், ஒளியை நோக்கி நடத்தல் என்பதன் விதியை அழகாகச் சொல்கிறார். இன்று நான் ஞானம் பெறப் போகிறேன் என்று இலக்கு வைத்துக் கொண்டு பெரும்பாலானோர் யோகம் செய்கிறார்கள், அவை வெறும் ஜட முயற்சி! ஆனால் உண்மையில் அனைத்தும் அந்த மூல சலனம் எம்மைத் தீண்டுவதால் தான் ஞான விழிப்பு வருகிறது என்பதை நாம் அறிகிறோம் இல்லை! அது எம்மைத் தீண்டுவதற்கு எந்த இலக்கோ, விரும்பமோ, எண்ணமோ இருப்பதில்லை! தற்செயலான ஒன்றுதான்! அந்த தீண்டுதல் நிகழந்தால் உயிர் ஞானத்தில் வழியில் செல்லத் தொடங்குகிறது.
குறிப்பு:
ஸாவித்ரி மகா காவியம் ஸ்ரீ அரவிந்தரின் பரந்த ஆழ்ந்த யோகானுபவ விளக்கம். இதற்கு ஒருவர் முழுமையாக விளக்கம் அளிக்க ஸ்ரீ அரவிந்தர் பெற்ற அனுபவம் சாத்தியமாக வேண்டும். இங்கு நாம் எடுத்திருக்கும் முயற்சி இந்த யோககாவியத்தை ஒரு யோகமாணவனாக, சாதகனாக கற்றல், ஆகவே இங்கு நாம் கூறும் விளக்கம் ஒரு முதல் முயற்சி, காலமாற்றத்தில் எமது அனுபவத்தில் நாம் கண்ட பொருளில் ஏதும் தவறு இருப்பின் திருத்தம் ஏற்படும். ஆகவே இது சரி, இது பிழை, இது தான் அறுதி உண்மை போன்ற கடின மனத்துடன் (rigid mindset) உடன் அணுகாதீர்கள்.