வலைபின்னலினை தொடர்ச்சியாக வாசித்து சாதனை செய்யும் ஆர்வமுள்ள அன்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கான பதிலினை இங்கு கூறுகிறோம்.
இங்கு இரண்டு கேள்விகளை கேட்டுள்ளீர்கள்,
முதலாவது; மந்திரங்களை வாய் விட்டு சொல்வது மனதிற்குள்ளே சொல்வது எது சிறந்தது?
இரண்டாவது காயத்ரி மந்திரம் ஜெபிக்கும்போது மனதில் ஏதேனும் நினைக்க வேண்டுமா அல்லது கவனிக்க வேண்டுமா?
முதலாவது கேள்வியிற்கான பதிலினை இந்த பதிவில் பார்ப்போம்!
முதலில் மந்திரங்கள் என்றால் என்ன? என்று பார்ப்போம், மந்திரங்கள் பிரபஞ்சத்தில் உள்ள தெய்வ சக்தியின் அதிர்வலை குறியீடுகள், ஒவ்வொரு வகை தெய்வ சக்தியிற்கு ஒவ்வொரு அதிர்வலைகள் உண்டு, உதாரணமாக ரேடியோ வில் எப்.எம் மீற்றரில் சூரியன் எப்.எம் இற்கு ஒரு அதிர்வு, மற்றைய வானொலிகளிற்கு இன்னொரு அதிர்வு இருப்பது போல் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அதீத ஆற்றல் அல்லது தெய்வ சக்திக்கும் ஒவ்வொரு அதிர்வு உண்டு. இயல்பாக பிரபஞ்ச அலைகள் மூலமும், நவகோள்கள் (இவை சட்டலைட்) மூலமும் பூமியில் வந்து எமது சுவாசத்தினூடாக சூஷ்ம உடலில் சேர்ந்து பின் ஸ்தூல உடலில் செயல்கொள்கிறது. இவை ஒவ்வோருவரும் செய்யும் நன்மை தீமை கர்மங்களுக்கு ஏற்ப உடலில் கூடிக்குறையும், இவை அதிகமாக இருக்கும் போது வாழ்வின் நல்ல பகுதிகளான ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் செல்வம் என்பன இருக்கும். இந்த நிலை வானொலியில் தெளிவாக பாட்டினை கேட்பது போன்றது. குறையும் போது துன்பம், குறைபாடுகள் ஏற்படும், வானொலியில் தடங்கல் ஏற்படுவது போன்றது இது. இந்துமதத்தில் பல தெய்வ வழிபாடு இருப்பதன் காரணம் இதுதான், மனிதனுக்கு தேவையான அமிசங்கள் என்ன என்று ஆராய்ந்து அவை பிரபஞ்ச்சதின் எந்த சக்தி மூலம் பூமிக்கு வருகிறது, அதன் அதிர்வு அளவு (frequency) என்ன? அதனை மனித மனது மூலம் எப்படி ஈர்த்து சேமித்து மனிதன் நன்மை அடைவது? என்று ரிஷிகள் வகுத்து வைத்த வழியே மந்திர சாதனை.
இயற்பியலில்(Physics) உள்ள பரிவு நிலை (resonance frequency) பற்றி அறிந்திருப்பீர்கள், ஒரு தொகுதியின் இயற்கை அதிர்வுடன் அதே அளவான அதிர்வுகள் பரிவுறும் போது சக்தி கடத்தப்படும், இதே கோட்பாடுதான் மந்திர சாதனையில் நிகழ்கிறது, குறித்த மந்திரம் பிரபஞ்ச சக்தியின் இயற்கை அதிவினை ஒத்த அதிர்வுனை மனித மனதில் உருவாக்கி சக்தியினை பெற்றுக்கொள்ளும்.
சக்தி பாய்ச்சலிற்கு குறித்த அதிர்வில் மனம் இருக்க வேண்டும் என்று பார்த்தோம், இதனை குறிப்பதே மந்திரங்களை வாய்விட்டு சொல்வதா? மனதிற்குள் சொல்வதா சிறந்தது என்ற உங்கள் கேள்வியுடன் தொடர்புடையது. நீங்கள் குறிப்பிட்ட இரு முறைகள் தவிர்ந்து மூன்றாவது ஒரு முறையும் உள்ளது, அவற்றின் விளக்கத்தினை சரியான மந்திர சாஸ்திர சொற்பிரயோகத்துடன் பார்ப்போம். இந்த மூன்று முறைகளளும் பரிவுறும் தன்மையில் உள்ள வித்தியாசத்தினை ஏற்படுத்தும் செய்முறைகளாகும், அதாவது இவற்றின் இந்த மூன்று மூறைகளாலும் மந்திரத்தினை சொல்வதால் பிரபஞ்சத்தின் வெவ்வேறு பகுதிகளை பரிவுற வைத்து தெய்வ சக்தியினை விழிப்பிக்கலாம். அவற்றைப்பற்றி விரிவாக கீழே பார்ப்போம்.
முதலாவது வாசிகம் (Vaachik) - இது தெளிவான உச்சரிப்புடன் மற்றையோருக்கு கேட்கும் படி மந்திரத்தினை கூறுவது, இது வளிமண்டலத்தில் குறித்த தெய்வசக்தியினை ஆகர்ஷிக்கும் முறை, ஆனால் எதிர்தடங்கல்கள் அதிகம், இதனால் ஜெபிப்பவர் பெறும் சக்தி குறைவு, ஆனால் சூழலில் தெய்வ சக்தியினை விழிப்படையச் செய்யலாம், பொதுவாக கோயிலில் பிராமணர்கள் பூஜை செய்யும் போது இந்த முறையினையே பின்பற்றுகின்றனர்.
இரண்டாவது மானசீகம் - இதுவே நீங்கள் மனதிற்குள் சொல்லும் முறை எனக்கூறுகிறீர்கள், இது உதடு அசையாது, மன எண்ண அலைகள் மட்டுமே மந்திர சப்தமாக உருவாகிக்கொண்டிருக்கும். இதில் புற உலகில் தெய்வ சக்தியினை விழிப்பிக்க முடியாது, ஆனால் மானச உலகில் (இது பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறோம் அல்லது மானச யோகம் படித்து விளங்கி கொள்ளவும்) செயற்படுத்தலாம்.
உபாம்சு - இந்த முறையில் உதடுகள் அசையும் ஆனால் அருகிலுள்ளோரும் கேட்க முடியாதபடி ஜெபித்தல், சாதகரின் காதில் மட்டும் அவர் ஜெபிப்பது கேட்கும். இது மேற்கூறிய இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் செயற்படுவது, இப்படி மந்திரம் ஜெபிப்பதே சிறந்தது, இது ஏன் என விளக்கமாக பார்ப்போம்.
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்பது சித்தர்களின் அடிப்படை தத்துவம், இதன்படி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்திகளும் மனித (ஸ்தூல - சூஷ்ம) உடல்களில் உள்ளது. இதனை பெறுவதற்கு அவன் அவற்றை சரியான முறையில் மனதின் மூலம் பாவனை செய்யது தியானத்தின் மூலம் அடைய வேண்டும். வாசிக ஜெபத்தில் உடலிற்கு வெளியில் உள்ள தெய்வ சக்தியினையே பரிவின் (resonance) மூலம் விழிப்பிக்க முடியும், மானசீக ஜெபமுறைமூலம் உடலிற்கு உள்ளே உள்ள தெய்வசக்தியினை மட்டுமே விழிப்பிக்க முடியும்.
ஆனால் உபாம்சு முறை இரண்டுக்கும் இடைப்பட்டது, இது அகப்பிரபஞ்சத்திலுள்ள தெய்வ சக்தியினையும் புறபிரபஞ்சத்திலுள்ள தெய்வ சக்தியினையும் ஒரே நேரத்தில் விழிப்பிக்கும் தன்மை உடையது. ஒரு மந்திரம் சித்தியாவதற்கு புறப்பிரபஞ்சத்திற்கும் (அண்டத்திற்கும்) அகப்பிரபஞ்சத்திற்கும் (பிண்டத்திற்கும்) தொடர்பு ஏற்பட வேண்டும். இதனையும் ஒரு உதாரணம் மூலம் விளங்கிகொள்வோம். உங்கள் வீட்டில் தண்ணீர் தொட்டி (Water tank) இருக்கிறது, இது உங்களது அகப்பிரபஞ்சத்தில் உள்ள தெய்வ சக்தி போன்றது, இதனை உங்களது உள்வீட்டு தேவைகளுக்கு மட்டும் தான் பயன் படுத்த முடியும், மற்றைய வீட்டிற்கு பயன் படுத்த முடியாது, இதுபோல் மானசீக ஜெபத்தில் விழிப்பிக்கும் தெய்வ சக்தி ஒருவர் தனது ஆன்ம முன்னேற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தமுடியும், இது முதலாவது விடயம்! தண்ணீரினை பெறுவதற்கு நீங்க்கள் வீட்டிற்கு வெளியே கிணறு வெட்டுகிறீர்கள், இப்போது தண்ணீர் தாராளமாக உள்ளது! ஆனால் உங்கள் வீட்டு தொட்டியிற்கு வரவில்லை! கிணற்றை சுற்ற்றியுள்ள வாளியும் கையிறும் உள்ளவர்கள் தமக்கு தேவையான அளவு அள்ளிக்கொள்வார்கள், இது வாசிக ஜெபத்தின் மூலம் விழிப்பித்த சக்தி போன்றது. இதையே கோயிலில் உள்ள பிராமணர்கள் செய்கிறார்கள், அவர்கள் உரக்க கூறும் மந்திர ஒலிகள் மூலம் கோயில் தெய்வ சக்தி விழிப்படைய அங்கு வரும் பக்த்தர்கள் தமது பிரார்த்தனைமூலம் ஏற்று பயனடைகிறார்கள்! ஆனால் அவற்றை ஜெபித்து விழிப்படைய வைப்பவர்கள் ஏதும் பலன் பெறுவதில்லை.
இனி உபாம்சு முறைக்கு வருவோம், இதன்படி மந்திரத்தினை ஜெபிப்பவர்கள் கிணற்றையும் தோண்டி, தமது வீட்டு தொட்டிக்கும் குழாய் மூலம் தொடர்பினை ஏற்படுத்தி வைத்துக்கொண்டது போன்ற நிலை, தமது வீட்டு தொட்டியிலும் தண்ணீர் எப்போதும் இருக்கும் அதே வேளை அவர்களை சுற்றியுள்ளவர்களும் தண்ணீரினை பெறுவர், இதுபோல் மந்திர சாதனையிலும் உபாம்சு ஜெபத்தால் அவர்களது அகப்பிரபஞ்சத்திலும் தெய்வசக்தி விழிப்படைந்து முன்னேற்றம் ஏற்படும் அதேவேளை புறப்பிரபஞ்சத்திலும் தெய்வ சக்தி செயற்படும். இதனால் ஜெபிப்பவரும் பயன்பெறுவார், அவரை சுற்றியுள்ளவர்களும் பயன்பெறுவர். இது பொதுவாக புறப்பிரபஞ்சத்துடனும் அகப்பிரபஞ்சத்துடன் தொடர்பான பல சித்திகளை கொடுக்கும். உதாரணமாக தொலைவினுணர்தல்,(clairvoyance) டெலிபதி (telepathy) போன்ற சித்திகளை கொடுக்கும்.
இனி உங்கள் கேள்வியிற்கு வருவோம்! எந்த முறை சிறந்தது?
எல்லா முறைகளுமே சிறந்தவைதாம்!
உங்கள் நோக்கம் என்ன என்ற அடிப்படையில் அவற்றை தேர்வு செய்ய வேண்டும், நீங்கள் உலக பற்று அனைத்தினையும் துறந்து (ரமணர், இராமகிருஷ்ண பரமஹம்சர் போல்)முக்திமட்டுமே நோக்கம் எனில் மானசீக ஜெபம் சிறந்தது.
உங்களை நாடி வருபவர்களூக்கு காரியம் கைகூடவேண்டும், பயன் பெறவேண்டும், பொதுப்பூஜை செய்கிறீர்கள் என்றால் வாசிக ஜெப முறை சிறந்தது.
உலக கடமைகளையும் செய்துகொண்டு அகத்தில் ஆன்மீக முன்னேற்றத்தினை பெற்று புறத்திலும் நன்மையினை பெற்று போகத்தினையும் யோகத்தினையும் தடையற பெறவேண்டும் என்றால் உபாம்சு முறை சிறந்தது.
ஆக நீங்கள் உபாம்சு முறையிலேயே ஜெபம் செய்யவே விரும்புவீர்கள் எனக்கருதி குருநாதர் எமக்கு தந்த ஞானத்தினை எதுவித மறைப்பும் இன்றி நீங்களும் இவற்றை பார்வையிடும் மற்றைய அன்பர்களுடமும் இந்த மந்திர சாஸ்திர உண்மையினை உணர்ந்து ஜெபசாதனை செய்து சித்திபெற குருதேவரை பிரார்த்திக்கிறோம்.
எமது அறிவுக்கு எட்டியவரை இலகுவாக விளக்க முயற்சித்துள்ளோம், இதனுள் மேலதிக கேள்விகள் இருப்பின் பின்னூட்டமிடவும். இரண்டாவது கேள்விக்கான பதிலினை அடுத்த பதிவில் தருகிறோம்.
ஸத்குருபாதம் போற்றி!
அய்யா, அருமையான தவகள்கள். தங்கள் பணி தொடர என் பணிவான வாழ்த்துக்கள்.
ReplyDelete- ரவி
Thanks-I was confused in this area. You have explained it very well. Thanks for sharing this with us.
ReplyDeletevery good explanation
ReplyDeleteI will follow this type. Thank you.
ReplyDeleteநன்றிநன்றிநன்றிநன்றிநன்றி
ReplyDeleteஅருமையான விளக்கம்! நன்றி.
ReplyDelete