இந்த தொடர்பதிவுகளில் மந்திர யோகம் பற்றிய அடிப்படைகளை விளக்கலாம் என்று எண்ணி உள்ளோம்.
தமிழர்கள் மந்திரம் சொல்லலாமா? சமஸ்கிருதம் தெரிய வேண்டுமல்லவா? அது வடமொழி தெரிந்தவர்கள் தானே சொல்லலாம்!
மேற்கூறிய கருத்துக்கள் அண்மையில் ஒரு நண்பர் ஆதங்கத்துடன் எம்மிடம் வினாவினார், அதற்கு விளக்கமாக எமது மனதில் எழுந்த கருத்துகளை தொகுத்த வடிவமே இந்த கட்டுரை தொடர்!
இதற்கு முதலாவது பதில் "அடேயப்பா அப்படியென்றால் தமிழர்கள் தண்ணீர் குடிக்கலாமா? காற்றினை சுவாசிக்கலாமா? என்று கேட்பது போலல்லவா இது இருக்கிறது?" மந்திரம் மனித மனதையும், உணர்வையும்,ஆன்மாவினையும்,உடலினையும் ஒன்றிணைக்கும் சாதனமல்லவா? அவற்றை பயன்படுத்துவது மனிதனின் அடிப்படை உரிமை! அதனை அறியாமையினால் காரணமே தெரியாத ஒன்றால் மறுக்கின்றோம் என்றால் அது எமது மடமை என்பதனை அறிந்து கொள்ளவேண்டும் நண்பா!
அடுத்து எமக்கு ஒருவிடயத்தினை பற்றி தெரியவில்லை என்றால் அதனை குதர்க்க புத்தியுடன் அணுகாமல் அவை பற்றி அறிந்தவர்களிடமோ அல்லது நல்ல நூற்களை கற்றோ தெரிந்து கொள்ள வேண்டும், பொறுமையாக சீர்தூக்கி ஆராய வேண்டும், இப்படி அணூகுவீர்களானால் உண்மை விளங்கும். அதற்கான எமக்கு தெரிந்த விடயங்களை இங்கு பதிவிடுகிறோம், உங்களை போல் சந்தேகம் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் சகோதரர்கள் இதனால் பலனடைவர் என்று எண்ணி குருதேவரை பணிந்து விடயத்தினுள் புகுவோம்.
முதலாவதாக மந்திரம் என்ற சொல்லின் விளக்கத்தை பார்ப்போம். இதற்கு ஆதி தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் சுருக்கமான ஆனால் ஆழமான பொருள் பொதிந்த சூத்திரத்தினை வரைவிலக்கணமாக தரும். அது "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழிதானே மந்திரம் என்ப” (தொல்காப்பியம், சொல்லதிகாரம், 480). இதற்கு பலவாறாக தமிழறிஞர்களால் பொருள் கொள்ளப்பட்டாலும் இதன் மந்திர சாத்திர பொருள் முக்கியமான ஒன்றாகும். அத்துடன் இது மந்திரம் எப்படி உருவாகிறது, யார் உருவாக்குகின்றார்கள் என்ற விளக்கத்தினையும் தருகிறது. இனி இந்த தொல்காப்பிய சூத்திரத்தின் பொருளினை சுருக்கமாக பார்ப்போம்.
நிறை மொழி என்றால் இன்று பொருள் கொள்ளூம் அறிஞர்கள் நன்றாக மொழியினை அறிந்தவர்கள் எனப்பொருள் கொள்கிறார்கள், அது சரியாக இருப்பினும் வெறும் மேலோட்டமான பொருள்தான் அது. அப்படியானால் இன்றைய தமிழ் அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அனைவரது வார்த்தைகள் அனைத்துமே மந்திரமாகி விடுமல்லவா? அதன் சூஷ்ம அர்த்தம் வேறு!
தொல்காப்பியம் மந்திரத்தின் உற்பத்தி, அதன் சித்தி, அது பயிற்சி செய்யவேண்டிய முறை ஆகியவற்றை ஒரே சொல்லால் சொல்லிவிடுகிறது, அதுதான் " நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த" வரியில் வரும் நிறைமொழி மாந்தர் எனும் சொல். நிறை மொழி மாந்தர் என்பவர் தனியே மொழி அறிந்தவர மட்டுமல்ல, சொல்லினால் வரும் ஒலி, அண்ட ஒலி சூஷ்ம உடலில் உருவாகும் இடம், உருவாக்கி பிரபஞசத்தில், மனித உடலில் செயல் கொள்ளும் தன்மை அறிந்தவர்கள்தான் நிறை மொழி மாந்தர் எனப்படுவர். அதாவது சைவ சித்தாந்த வார்த்தையில் சொல்வதானால் சிவத்துடன் இரண்டறக்கலந்தவர்கள், வேதாந்த மொழியில் சொல்வதானால் பிரம்மத்துடன் கலந்தவர்கள் இவர்களே நிறைமொழி மாந்தர் எனப்படுவர். இவர்கள் சொல்லும் மொழி எல்லாம் மந்திரங்கள் எனப்படும். இதன் படி வேதங்கள் கூறும் ரிஷிகள், சித்தர்கள், நாயன்மார்கள் கூறிய பாடல்கள், தோத்திரங்கள் எல்லாம் மந்திரம் என்ற வரைவிலக்கணத்திற்குள் வரும்.
இவை மட்டுமல்ல மந்திரங்கள் யார் ஆத்மா சித்தி பெற்றவர்களோ அவர்களது வார்த்தைகளும் மந்திரங்களே! இவ்வாறு கோரக்கர் போன்ற சித்தர்களால் உருவாக்கப்பட்ட சபர் மந்திர பத்ததிகள் பற்றி பின்னொரு தடவை பார்ப்போம்,
மந்திர என்ற வடமொழி சொல்லிற்கு மனனம்+திரயதே என்று பிரிக்கலாம். மனனம் என்றால் நினைப்பது, ஜெபிப்பது, உச்சரிப்பது எனப் பொருள் கொள்ளலாம். திரயதே என்றால் காப்பாற்றுதல் என்று பொருள். ஆக ஜெபிப்பவரை உச்சரிப் பவரை காப்பாற்றுவது என்று பொருள்.
இவை பற்றி அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.
ஆக உங்கள் மந்திரம் தமிழர்கள் சொல்லலாமா? என்ற கேள்விக்கு சரியான விடை கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறோம், மந்திரம் என்ற சொல்லிற்கு முழுமையான பொருளை அறிந்தவர்கள் தமிழர்கள் தாம், சமஸ்கிருதத்தில் மந்த்ர என்றால் நினைப்பவரை காப்பது என்றுதான் பொருள் ஆனால் தமிழில் அதற்கான வரைவிலக்கணம் அதன், உற்பத்தி, செயல்முறை, இருப்பு என முழுமையாக கூறி நிற்கும். ஆகவே தமிழர்கள் தான் மந்திரத்தின் செயற்பாட்டை அறிந்த மெய்ஞாநிகழ என்ற பெருமையுடன் தாராளமாக மந்திரங்களை கூறலாம் என்பதில் உறுதி கூறுகிரோம்.
ஆனால் எந்தவொரு செயலையும் செய்வதற்கு ஒரு ஒழுங்கு முறையிருக்கிறது அதன் படி செயல்புரிந்தால் மட்டுமே பலனளிக்கும்,அது மந்திர யோகத்தின் மூலம் பயனடைய விரும்புபவர்களுக்கும் நிச்சயம் பொருந்தும். அவற்றை படிப்படியாக மற்றைய பதிவிகளில் பார்ப்போம்.
வளரும்.....
ஸத்குரு பாதம் போற்றி!
ss
ReplyDeleteஅன்புள்ள சுமணன்
ReplyDeleteஉங்கள் பதிவு தினமும் வந்தால் ஆன்மிக முன்னேற்ற திற்கு ரொம்ப உதவியாய் இருக்கும்
உங்கள் செந்தில்
நன்றி
ReplyDelete