சென்ற பகுதிகளில் முறையே அறிமுகம், குருவணக்கத்தின் முக்கியத்துவமும் செயன்முறையும், பிரணாயாமத்தின் முக்கியத்துவம் ஆகியன பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்தப் பதிவில் காயத்ரி மந்திரத்தின் நியாச முறையும் அதன் அவசியம் பற்றியும் பார்ப்போம்.
முந்தைய பதிவுகளைப் பார்க்க கீழே அழுத்தவும்;
நியாசம் என்றால் வைத்தல் எனப் பொருள் படும். அதாவது ஒரு பொருளை/சக்தியை குறித்த இடத்தில் வைக்கும் செயன்முறையே நியாசம் எனப்படும். மந்திர சாதனையில் நியாசம் முதன்மையான ஒன்றாகும். ஒரு மந்திரத்திற்கு ரிஷி, சந்தஸ், தேவதா, பீஜம், சக்தி, கீலகம், நியாசம் என ஏழுபாகங்கள் காணப்படும். இவற்றைப்பற்றி விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இங்கு நியாசத்தின் அடிப்படை பற்றிப் பார்ப்போம். நியாசம் என்பது தெய்வ சக்திகளை உடலில் வைக்கும் செயன்முறையாகும். அதாவது ஜெபிக்கப்படும் மந்திரத்தினை ஆறு பகுதிகளாக பகுத்து அதனை உடலில் ஒவ்வொரு இடத்தில் வைக்கும் செயல் முறையே நியாசம் எனப்படும். நியாசங்கள் பலவகை உண்டு. மந்திர சாதனை செய்பவர்களுக்கு அதன் விபரங்கள் நன் கு அறிவர். இங்கு குறிப்பாக மூன்று நியாசங்களை கூறுவோம்.
முதலாவது: ரிஷ்யாதி நியாசம், இது மந்திரத்தின ரிஷி, தேவதை, அளவு என்பவற்றினை உடலில் பதித்து சாதனையின் நோக்கத்தினை உடல் முழுவதும் பதிப்பிக்கும் செயன்முறையாகும்.
இரண்டாவது: கர நியாசம், அதாவது கைகளில் தெய்வ சக்தியினை இருத்தி விழிப்பித்தல் எனப்பொருள்படும். இது இருகரங்களிலும் உள்ள ஐந்து விரல்களும் உள்ளங்கையும் சேர்த்த ஆறு அங்கங்க்களில் செய்யப்படும். இதனால் குறித்த மந்திரத்தின் தெய்வ சக்தி கைகளில் விழிப்படைந்து உடலில் ஆகர்ஷிக்கத்தொடங்கும். அக்யுபிரஷர், வர்மம் தெரிந்தவர்கள் உடலில் பிராண ஓட்ட செயன்முறையினை அறிவர். கைகளில் அனைத்து அங்கங்க்களுக்குமான பிராண சக்தி செலுத்தும் புள்ளிகள் உள்ளன. அவற்றில் தெய்வசக்தியினை விழிப்பிக்க உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பிராண சக்தியினூடு தெய்வ சக்தி செலுத்தப்படும்.
அடுத்தது: ஹ்ருதயாதி நியாசம், இது ஹ்ருதயம், தலை உச்சி, பிடரி, தோற்பட்டைகள் இரண்டும், மூன்று கண்கள் (வலது, இடது, நெற்றிக்கண்), உடலைச் சூழ கவசமாக என செய்யவேண்டும். இந்த இடங்கள் சூஷ்ம சரீரத்தின் முக்கியமான சக்கரங்களை இணைக்கும் இடங்களாகும். இவை முறையே அநாகதம், சகஸ்ராரம், பிடரிச் சக்கரம் (பிராண அலைவேகத்தினை கட்டுப்படுத்தி பரிணாமத்தினை துரிதப்படுத்தும் சக்கரம் அமைந்துள்ளது) விசுத்தி சக்கரம், ஆக்ஞா சக்கரம் ஆகிய உயர் பரிணாமச் சக்கரங்களில் உள்ள இடங்களாகும், இந்த இடங்களில் தெய்வ சக்தியினை பதிப்பிப்பதால் மனிதனது பரிணாமம் தெய்வ பரிணாமத்தினை நோக்கி முன்னேறும்.
முதலாவது கர நியாசம் ஸ்தூல உடல் அங்கங்களுக்கு தெய்வ சக்தியினையும் ஹ்ருதயாதி நியாசங்கள் சூஷ்ம உடல் சக்கரங்களிலும் தெய்வ சக்தி பதிப்பிக்கும் செயன்முறையாகும். அன்பர்களே இப்போது உங்களுக்கு இவற்றினை செய்யவேண்டிய அவசியம் பற்றி விரிவாக விளங்க்கியிருக்கும். இது பற்றி விரிவாக விளக்க வேண்டுமானால் பல பக்கங்கள் எழுதவேண்டி இருக்கும், அவற்றை வாசித்து தெரிந்துகொள்வதை விட அனுபவத்தில் தெரிந்துகொள்வதே சிறந்த வழி ஆதலால் விளக்கங்களை இத்துடன் நிறுத்தி செயன்முறைக்குச் செல்கிறோம்.
இந்த செயன்முறைக்குரிய மந்திரங்கள் வருமாறு:
ஆசமனம்: வலது உள்ளங்க்கையில் நீர் விட்டு ஒவ்வொரு மந்திரமும் சொல்லும் போது உறிஞ்சிக் குடிக்கவும். விரல்களைப்பிரித்து ஆட்காட்டி விரலை உயர்த்தி மற்றைய விரலை தாழ்த்தி வைக்கவும்.
- ஓம் ஸ்ரீ ஜகன் மாத்ரே நமஹ
- ஓம் ஸ்ரீ பராம்பிகாயை நமஹ
- ஓம் ஸ்ரீ பராஸக்த்யை நமஹ
சங்கல்பம் அல்லது வினியோகம்: ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு காரிய சித்தி வேண்டி செய்யப்படுவதாக இருக்கும், அதனை ரிஷி, சந்தஸ், தேவதா, பீஜம், சக்தி, கீலகம் ஆகியவற்றுடன் இணைத்து கூறும் பகுதி விநியோகம் எனப்படும். காயத்ரி மந்திரத்தின் விநியோக பகுதி கீழ்வருமாறு;
தீர்த்தப்பாத்திரத்தில் உள்ள உத்தரணியில் நீரை எடுத்து வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு கீழ்வரும் மந்திரத்தினைச் சொல்லி கீழே விட்டுவிடவும்.
ஓம் அஸ்யஸ்ரீ காயத்ரி மஹா மந்திரஸ்ய விஸ்வாமித்திர ரிஷிஹி தேவி காயத்ரி சந்த; ஸவிதா தேவதா ஜபோபாஸனே வினியோக
ரிஷியாதி நியாசம்: வலது கைவிரல்களை நீரில் தொட்டுவிட்டும் கிழே உள்ள மந்திரங்களை சொல்லி அந்தந்த அங்க்கங்களுக்கு நடுவிரல் மோதிரவிரல் சேர்த்து தொடவும்
- ஓம் விஸ்வாமித்திர ரிஷியே நம - தலை
- ஓம் காயத்ரீ சந்தஸே நம - முகம்
- ஓம் ஸவிது தேவதாய நம - இருதயம்
- ஓம் ஜபோபாஸனே விநியோகாய நம - உடல் முழுவதும்.
கர நியாசம்:
- ஓம் தத்ஸவிதுர் ப்ரஹ்மனே - அங்குஷாடாப்யாம் நம - இரு கை ஆள்காட்டி விரல்களால் பெருவிரலின் அடியிலிருந்து முனைவரை தடவவும்
- ஓம் வரேண்யம் விஷ்ணவே - தர்ஜனீப்யாம் நம - இருகை பெருவிரலையும் ஆட்காட்டி விரல்களில் அடியிலிருந்து நுனிவரை தடவவும்.
- ஓம் பர்கோதேவஸ்ய ருத்ராய - மத்யமாப்யாம் நம = இரு கை பெருவிரலையும் நடு விரல்களின் அடியிலிருந்து நுனிவரை தடவவும்
- ஓம் தீமஹி ஈஸ்வராய - அநாமிகாப்யாம் நம - பெருவிரல்களால் மோதிரவிரல் அடியிலிருந்து நுனிவரை
- ஓம் தியோ யோன - ஸதாஸிவாய - கனிஷ்டிகாப்யாம் நம - பெருவிரல்களால் அடியிலிருந்து நுனிவரை
- ஓம் ப்ரசோதயாத் - ஸர்வாத்மனே - கரதல கரப்ருஷ்டாப்யாம் நம - இரு உள்ளங்கைகளையும் சேர்த்து தேய்த்து இரு புறங்கைகளையும் சேர்த்து தேய்க்கவும்.
ஷடங்க நியாசம்
- ஓம் தத்ஸவிதுர் ப்ரஹ்மனே - ஹ்ருதயாய நம - வலது கைவிரல்களால் இருதயத்தை தொடவும்
- ஓம் வரேண்யம் விஷ்ணவே - ஸிரசே ஸ்வாஹா - வலதுகைவிரல்களை மடக்கி முன் தலையினை தொடவும்.
- ஓம் பர்கோதேவஸ்ய ருத்ராய - ஸிகாய வஷட் - மேலே மடக்கிய முட்டியின் பெருவிரலை நீட்டி உச்சந்தலையினை தொடவும்.
- ஓம் தீமஹி ஈஸ்வராய - கவசாய ஹும் - வலது கையால் இடது தோளையும் இடது கையால் வலது தோளையும் தொடவும்.
- ஓம் தியோ யோன ஸதாஸிவாய - நேத்திரத்ராய வௌஷட் - வலது கை பெருவிரலால் வலது கண்ணையும் நடுவிரலால் இடது கண்ணையும், ஆட்காட்டி விரலால் நெற்றிக்கண்ணையும் தொடவும்.
- ஓம் ப்ரசோதயாத் ஸர்வாத்மனே - அஸ்திரய பட் - இரு உள்ளங்க்கைகளாலும் தாளம் போடுவது போல் தட்டவும்.
இதுவே காயத்ரி மந்திரத்திற்கான நியாச முறை, மேலே கூறிய விளக்கங்களை நன் கு மனதில் பதிவித்துக்கொண்டு மந்திரங்களை மனனம் செய்து, குறித்த பாவனையில் செய்துவர உங்கள் சூஷ்ம உடலிலும், ஸ்தூல உடலிலும் காயத்ரி மந்திர சக்தி விழிப்படைய ஆரம்பிக்கும்.
அடுத்த பகுதியில் தேவியை ஆவாஹனம் செய்யும் மந்திரத்தினை தமிழிலும், தியான மந்திரத்தின் விளக்கத்தினைப்பற்றியும் பார்ப்போம்.
ஸத்குரு பாதம் போற்றி!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.