கிழ்வரும் பதிவுகளை வாசித்துவிட்டு இந்த பதிவினை வாசிக்கவும்.
*********************************************************************************************************************
கடந்த பதிவில் நியாச முறை பற்றிப் பார்த்தோம். இந்தப் பதிவில் எங்கும் நிறைந்த பராசக்தியான காயத்ரி தேவியை நாம் வணங்கும் தேவியின் படத்திலோ அல்லது விளக்கொளியிலோ ஆவாஹனம் செய்து ஸ்தாபிக்கும் முறையினைப் பார்ப்போம். தெய்வ சக்தி எங்கும் நிறைந்திருந்தாலும் எமது மனதால் ஆகர்ஷிக்ககூடிய வண்ணம் ஒரிடத்தில் குவித்து அதன் மூலம் பயன் பெறும் செய்முறையே பூஜை என்பது. இதனை விரிவாக செய்வதற்கு பலமுறைகள் இருக்கின்றன, அவற்றை எல்லாராலும் செய்யமுடியாதென்பதால் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் அழகுதமிழில் தேவியின் பூஜைமுறையினை வகுத்து தந்துள்ளனர். இந்த தமிழ் பத்ததி கடந்த நாற்பது வருடங்களாக காயத்ரி சித்தர் முருகேசு ஸ்வாமிகளால் இலங்கை நுவரெலியா காயத்ரி பீடத்தில் இன்று வரை பூஜை முறையாக இருந்து வருகிறது. இதன் மூலம் சமஸ்கிருதம் அறியாதவர்களும் இலகுவாக தேவியின் அருளை பெற்றிருக்கிறார்கள்.
இந்த பூஜை பத்ததி ஆவாஹனம், ஸ்தாபனம், சந்தனம், குங்குமம், புஷ்பம், அஷதை, தாம்பூலம், பழம், தூபம், தீபம், நைவேத்யம், கர்ப்பூரம், பிரார்த்தனை, அர்ச்சனை, தியானம், ஜெபம், ஹோமம் என்ற 17 அங்க்கங்களுடைய பத்ததியாகும். இவற்றை முழுமையாக செய்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வரை ஆகும். இதனை தனிப்பட ஜெபசாதனை செய்துகொள்ள விரும்புபவர்கள் செய்துகொள்ளக்கூடிய வகையில் சுருக்கி இங்கு தருகிறோம். முழுமையாக காயத்ரி பூஜா பத்ததி தமிழில் கற்று பூஜை புரிய விரும்புபவர்களுக்குரிய விபரம் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சுருக்கமாக பூஜை முறை வருமாறு; முதலாவது ஆவாஹனம்,
ஆவாஹனம்: கீழ்வரும் மந்திரத்தினை பக்தியுடன் கூறி, படத்தில், விளக்கு ஒளியில் காயத்ரியினை அழைப்பதாக பாவிக்கவும்
அந்தமும ஆதியில்லா, அருட்பெருஞ் ஜோதி மாயே, வந்திடாய் வந்திடாய், நீ வந்தெங்கள் பூஜையேற்பாய்,
ஸ்தாபனம்: அழைத்த காயத்ரி தேவியை படத்தில், விளக்கொளியில் உறைவதாக பாவிக்கவும்.
வந்தனை வந்தனை நீ வரதே வான்முகிலேயம்மா, சிந்தனை களித்துயிங்கே சிறப்புடன் வீற்றிருப்பாய்.
இதன் பின்னர் மேற்குறிப்பிட்ட உபசாரங்களை (சந்தனம், குங்குமம், புஷ்பம், அஷதை, தாம்பூலம், பழம், தூபம், தீபம், நைவேத்யம், கர்ப்பூரம், பிரார்த்தனை, அர்ச்சனை) விரும்பின் செய்யலாம். அல்லது நேரடியாக தியான ஸ்லோகத்தினை கூறி தேவியை மனத்திரையில் உருவகப்படுத்தலாம்.
தியானம்: கீழ்வரும் தியான ஸ்லோகத்தினை பக்தியுடன் மெல்லிய குரலில் கூறவும்.
முக்த வித்ரும ஹேம நீல தவளச் சாயைர் முகைஸ் த்ரீஷ்ணைர் யுக்தா மிந்து நிபத்த ரத்ன முகுடாம் தத்வார்த வர்ணாத்மிகாம், காய்த்ரீம் வரதா பயாங்குச கஸா பாஸம் கபாலம் குணம் ஸங்கம் சக்ர மதார விந்தயுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே
இதன் பொருள் சுருக்கமாக வருமாறு: முத்து, பவளம், பொன், நீலம், வெண்மை ஆகிய நிறங்களுடைய ஐந்து முகங்களுடனும், முக்கண்கள், சந்திரகலை பொருந்திய கிரீடம், தத்துவார்த்தத்தை விளக்கும் எழுத்துக்களின் வடிவாகவும், வர முத்திரை, அபய முத்திரை, அங்குசம், கசை, வெள்ளைக் கபாலம் (இது தற்போது வரும் காயத்ரி படங்களில் காணப்படுவதில்லை, அவற்றில் பாத்திரம் ஒன்று இருப்பதாகவே வரைகின்றனர்) பாசக்கையிறு, சங்கு, சக்ரம், இரண்டு தாமரைப்பூக்கள் ஆகியவற்றை கைகளில் தாங்குபவளான காயத்ரி தேவியினை வணங்குகிறேன்.
இதன் தத்வார்த்த விளக்கம் உயர்சாதனைகள் செய்ய விரும்புபவர்களுக்குரியது, அவற்றை வேறொரு பதிவில் தேவை வேண்டிவிளக்குவோம்.
இப்படி தேவியை மனத்திரையில் பிரத்யட்சமாக உண்மையில் இருப்பதாக பாவித்து அவளது வரம் தரும் கைகளில் இருந்து ஒளிவடிவாக அவளது அருட்கிரகணங்கள் உங்களில் வந்து சேர்வதாக பாவிக்கவும். இப்படி பாவித்தபடி ஜெபமாலையினை கையில் எடுத்து அதே பாவனையில் மந்திர ஜெபத்தினை தொடரவும். ஆரம்பத்தில் 09 முறை ஜெபத்தினை தொடங்கி வாரத்திற்கு ஒன்பது ஒன்பதாக கூட்டி வந்து அதாவது முதல் வாரம் 09. இரண்டாவது வாரம் 18, மூன்றாவது வாரம் 27 என்றவாறு 108 ஆக்கி தினசரி 108 செய்யும் படி பழகிக்கொள்ளுங்கள். இந்த பாவத்தில் ஜெபத்தினை முடித்தபின்னர் கடைசியில் கீழ்வரும் பிரார்தனையினை செய்யவும்.
பிரார்த்தனை:
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா;
ஆயுள் ஆரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!
என பணிந்து தேவியிடமிருந்து வரமாக இவற்றை பெற்றுக்கொள்வதாக பாவிக்கவும்.
இதன் பின்னர் சிறிதளவு தீர்க்க சுவாசம் (ஆழமான மெதுவான மூச்சு) அல்லது நாடி சுத்திப்பிரணாயாமம் செய்துகொள்ளவும்.
இதன் பின்னர் தீர்த்தப்பாத்திரத்தில் உள்ள உத்தரணியில் நீரை வலது கையில் எடுத்து தேவியின் பாதத்தில் " எனது உபாசனையில் ஏதும் குறைகள் இருந்தால், ஜெகன்மாதாவான நீ சிறுபிள்ளையாகிய எனது பிழைகளை பொருத்தருளி எனது பிரார்த்தனையினை நிறைவேற்று தாயே' என மானசீகமாக பிரார்த்திது நீரை கீழே விடவும். இந்த செயன்முறை கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும்.
இதுவரை ஐந்து பதிவுகளாக காயத்ரி உபாசனையினை எளிய முறையில் செய்யக்கூடிய முறையினை விளக்கியுள்ளோம். இதனை வாசித்தவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்றாலும் நேரடியாக கற்காமல் எப்படிச் செய்வது என்ற மனத்தடங்கல் இருப்பதை நாம் உணர்ந்துள்ளோம். இதனை தீர்ப்பதற்கு இரண்டு வழிகளில் நாம் உங்களுக்கு உதவ முன்வந்துள்ளோம்.
முதலாவது: நீங்கள் இலங்கையில் வசிப்பவராக இருந்தால் மாதாந்தம் பௌர்ணமி தினங்களிலும், வாரந்தம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நுவரெலியா காயத்ரி பீடத்தில் இந்தப்பூஜை முறையின் முழுமையான பத்ததி தமிழில் நடாத்தப்படுகிறது. ஒருமுறை சென்று நேரில் பங்கு பெற்றி கற்றுக்கொள்ளலாம். அங்கு காயத்ரி தேவியின் விரிவான தமிழ் பூஜைப் பத்ததி அச்சிட்டும், காயத்ரி சித்தரின் குரலிலும் சீ.டீக்களாக தருவார்கள். அவற்றை வாங்கி பலமுறை கேட்டு நீங்களே கற்றுக்கொள்ளலாம். பூஜையில் வத்த காயத்ரி படம் ஒன்றினை வாங்கிவந்து உங்கள் உபாசனையினை தொடரலாம்.
இரண்டாவது: நீங்கள் வெளி நாடுகளில் வசிப்பவராக இருந்தால் காயத்ரி பீடத்தினை தொடர்பு கொண்டு காயத்ரி உபாசனா பத்ததி நூலையும், காயத்ரி சித்தரின் குரலில் உள்ள பூஜை சீ.டி ஒன்றினையும் அனுப்பும்படி கேட்டுக்கொண்டால் அனுப்பி வைப்பார்கள், அவற்றை பெற்று உங்கள் உபாசனையினை தொடரலாம்.
மேற்கூறிய தொடர்புகளுக்கு,
திரு. ச, சந்திரமோகன்
நிர்வாக அறங்காவலர்
ஸ்ரீ காயத்ரி பீடம் இண்டர் நஷனல் ட்ரஸ்ட்
82, லேடி மக்கலம்ஸ் ட்ரைவ்
நுவரெலியா.
தொலைபேசி:+94-52-2222609
அலைபேசி: +94-773249554
ஈமெயில்: srigayathripeetam@gmail.com
முக்கிய குறிப்பு: எமக்கும் காயத்ரி பீடத்திற்கும் நிர்வாக ரீதியாக, சட்ட ரீதியாக எதுவித தொடர்பும் இல்லை. காயத்ரி உபாசனையினை தமிழில் செய்வதற்குரிய வளங்களை, முறைகளை, தகவல்களை வாசகர்களுக்கு அடையாளம் காட்டுவதே இந்த தகவலின் நோக்கம்,
இந்த தகவல்களால் ஆர்வமுடைய யாராவது பயன் பெறுவார்கள் என உறுதியாக நம்புகிறோம்.
ஸத் குருபாதம் போற்றி!