14) சமுத்திர அலைகளின் தர்க்கம் (ஸமுத்திர தரங்க நியாயம்)
**********************************************************
சமுத்திரத்தில் எண்ணற்ற அலைகள் எழுந்து மறைந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு அலையையும் பற்றி நாம் கற்கவேண்டும், அறிய வேண்டும் என்றால் அவற்றைத் தனியாகப் பார்க்க வேண்டும். ஆனால் அவை அனைத்தும் நீரின் இயக்கமே, சமுத்திரத்திலிருந்து பிரிந்த தனி இயக்கம் அல்ல! சமுத்திரம் என்ற ஒரு உண்மையின் பலவித இயக்கங்களே அலைகள்.
இப்படித்தான் இயற்கையும், பிராணனும் இயங்குகிறது! சூரியனில் இருந்து வெளிப்படும் ஏழு வர்ண அலைகளில் சில அலைகளை தாவரம் ஈர்ப்பதால் அது தாவரத்தில் உணவாக்கப்படுகிறது. சமுத்திர தரங்க நியாயம் புரிந்தவனுக்கு தான் உண்ணும் உணவு சூரிய சக்தியின் அலைவரிசை மாற்றிய உருவம் என்ற உண்மை புரியும். இப்படி ஸ்தூலத்தில் சமுத்திர தரங்க நியாயம் புரிந்தவனுக்கு இந்த பிரபஞ்சமே இறைசக்தியின் கதிர்ப்பு என்ற நியாயம் புரியும்.
15) ஸ்படிக வர்ண நியாயம் - சார்ந்ததன் வண்ணம் இயங்குதல்.
***************************************************
தூய ஸ்படிகம் எந்த நிறமும் அற்றது! ஆனால் நிறமுடைய பொருளுக்கு அருகில் செல்லும் போது அந்த நிறத்தைப் பிரதிபலிக்கும்.
இதைப்போல் மனம் தூய நிலையில் எந்தக் களங்கமும் அற்ற ஆன்மாவின் சொருபம். அது ஆன்மாவையும் இறையையும் சார்ந்திருந்தால் ஸ்படிகம் தூய்மையுடன் இருக்கும் நிலை. அது புலன்கள் வழி சார்ந்திருந்தால் வண்ணங்கள் நிறைந்த - அசுத்தமான நிலை.
பலரும் தினசரி கண்களாலும், காதாலும், நாக்காலும் தீயவற்றை மனதிற்கு கொடுத்துவிட்டு மனம் கவலையாக இருக்கிறது, துன்பமுறுகிறது என்பது இந்தத்தர்க்கம் புரியாததால்.
மனதின் இயக்கம் புரிய வேண்டியவன் ஸ்படிக வர்ண நியாயம் புரிந்திருக்க வேண்டும்.
16) பத்ம பத்ர நியாயம் - தாமரை இலைத் தண்ணீர்
************************************************************
பத்மம் என்றால் தாமரை
பத்ரம் என்றால் இலை என்று பொருள்
தாமரை நீரில் நிலை கொண்டாலும் அதன் இலை நீரிற்கு மேல் மிதக்கும். அதன் இலை நீருடன் ஒட்டாது. நீர் அதை அழுக வைக்க முடியாது. மற்றத் தாவரங்களின் இலை நீரில் போட்டால் அழுகி விடும்.
இந்த நியாயம் புரிந்தால் உடல், மனம் என்ற சேற்றிற்குள் தான் ஒட்டாமல் ஆன்மா அல்லது சிவம் உள்ளிருக்கிறது என்ற அறிவு கிடைக்கும்.
ஆன்மாவின் இயக்கம் புரிய, உலகில் எல்லாச் செயல்களையும் செய்து கொண்டு கர்ம யோகியாக வாழ பத்ம பத்ர நியாயம் தெரியவேண்டும்.
17) வாத கந்த நியாயம்
**********************************
வாதம் என்றால் காற்று; கந்தம் என்றால் மணம் என்று பொருள்.
இது ஸ்படிக வர்ண நியாயம் போன்றது; காற்று நல்ல மணமோ, கெட்ட மணமோ தான் கலப்பதை எல்லாம் பரப்பும். இதுபோல் எமது மனம் புலன்களூடாக கலக்கும் அனைத்தையும் எடுத்துக்கொண்டு காவும் என்பது மனதை அறிய விரும்புவனுக்கு தெரியவேண்டிய நியாயம்.
அதுபோல் பிரம்மம் அல்லது சிவம் இந்த பிரபஞ்சப் பொருட்கள் அனைத்திலும் கலந்து இருக்கிறது. அதற்கு நல்லது, கெட்டது என்ற பாகுபாடு இல்லை என்பது இந்த நியாயம் புரிந்தவனுக்குத் தெரியும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.