இன்று எனது குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகீஷ்வரரின் ஜெனன திகதி!
திதிப்படி பார்த்தால் வைகாசிப் பௌர்ணமி! இன்னும் நாள் இருக்கிறது!
தனது மாணவர்களுக்கு 70 வருடங்களுக்கு முன்னர் 03 - 04 கார்பன் வைத்து கையெழுத்தில் பாடங்கள் எழுதி நேர்முக யோகப்பயிற்சி கொடுத்த பெருந்தகை!
தமிழ் சமஸ்கிருத பண்டிதர்; படிக்க வசதியில்லாத நிலையில் பச்சையப்பா கல்லூரி பண்டிதரின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கம்பராமாயண வகுப்புகளை செவிமடுத்து தனது ஞாபக சக்தியால் பாடல்களையும் அதன் பொருளையும் ஒப்புவித்து அவரின் அன்பைப் பெற்று பண்டிதர் பரீட்சை எழுதி சித்திபெற்றார்.
அவர் எழுதிய ஆத்ம யோக ஞான எழுத்துக்களை அவரது மாணவர்களான எனது குருநாதர் ஆர். கே. முருகேசு சுவாமிகளும், சென்னை ராஜயோகி ராஜமோகன் ஐயா அவர்களுமாக பதிப்பித்துள்ளார்கள்! இவர்கள் இருவரும் ஸ்ரீ கண்ணைய யோகியராலேயே தனது பணியை முன்னெடுத்துச் செல்ல பணிக்கப்பட்ட அவரது முதன்மை மாணவர்கள்!
அவரது கைப்பட எழுதிய பாடங்களை படியெடுத்துப் படிக்கும் பாக்கியம் பெற்றவன் என்ற வகையில் நான் புண்ணியசாலி!
அகத்தியமகரிஷியால் தமிழ் பேசும் மக்கள் தற்கால நிலைக்குத் தகுந்தவாறு உபாசனை ரகசியங்களை எளிமைப்படுத்தி கற்பிக்கும் படியும், அன்னை காயத்ரியின் உபாசனையை தமிழ் பத்ததி (பூஜை முறை) செய்யும்படியும் பணிக்கப்பட்டு அதற்காக அனேக விஷயங்களை எழுதி வைத்துச் சென்றுள்ளார்.
ரிஷி தயானந்தரின் சத்தியர்த்த பிரகாசம் நூலை 1935 இல் தமிழில் மொழிபெயர்த்தவர்!
இலங்கைக்கு 1963 இல் சேர். பொன். அருணாச்சலம் அவர்களின் மகன் சிவானந்தம் தம்பையா அவர்களின் அழைப்பில் விஜயம் செய்தார். கொச்சிக்கடை தம்பையா சத்திரத்தில் உள்ள அனந்த பத்மநாதர் கண்ணைய யோகியார் பிரதிஷ்டை செய்தது.
இலங்கையில் 1961ம் ஆண்டு ஆத்ம யோக ஞான சபாவினை திருமதி தம்பையாவை தலைவராகவும், ஆர். கே. முருகேசு சுவாமிகளை செயலாளராகவும் கொண்டு ஸ்தாபித்து, ஆத்ம ஜோதி இதழில் பல ஆன்மீக கட்டுரைகள் ஸ்ரீ கண்ணைய யோகியாரால் எழுதப்பட்டது. பின்னர் ஆத்ம யோக ஞான சபை நுவரெலியா காயத்ரி பீடமாக சுவாமிகளால் தனது குருநாதரின் ஆசியும் விரிவும் பெற்றது.
ஸ்ரீ கண்ணைய யோகியார் தான் வாழும் காலத்தில் வெறுமனே ஒரு ஜோதிடராக அறியப்பட்டவர். ஒரு சிறிய மாணவர் குழுவிற்கு மாத்திரமே குருநாதரின் ஆணையின்படி யோகவித்தையை கற்பித்தவர். தனது மாணவனாக இருப்பதற்கு தகுதி என்னவென்பதை வரையறுத்தவர்;
இன்றைய நாளில் ஒருவன் யோகசாதனையில் தனது மாணவனாக இருக்க வேண்டும் என்றால் என்ன தகுதி இருக்க வேண்டும் என்று அவர் கூறியதை இங்கு பகிர்கிறேன்;
*******************************************************************
என் மாணவன்
1) நான் இன்ன சாதி என்று நினையாதவன்.
2) மனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன்.
3)ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்.
4) கோபதாபம் உடையவன் போல் கருதப்பட்டும் அவைகளை அடக்கியவன்.
5) பண்டிகை, விரதம், நோன்பு என்ற பெயரில் பணத்தைச் செலவழிக்காதவன்.
6) எதைச் செய்தாலும் அதை ஏன் செய்கிறோமென்று யோசித்து செய்பவன்.
7) தனக்கு இன்பம் தரும் காரியங்களில் மட்டும் ஈடுபடாமல் தனக்கு நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவன்.
மாமன், மைத்துனன், தங்கை, அண்ணன் என்ற உறவுகளுக்கு உதவி செய்வதற்காகத் தன் இறை சாதனையினை விட்டுக்கொடுக்காதவன்.
9) வாழ்க்கையில் மற்றைய எல்லா காரியங்களை விடச் சாதனை மிக முக்கியமானது எனக்கருதி எக்காரணத்தாலும் சாதனையினைத் தவற விடாதவன்.
10) கண்ட புத்தகங்களைப் படித்து மனதைக் குழப்பிக்கொள்ளாதவன்.
11) எத்தொழிலைச் செய்தாலும் தன் செயல்களின் மறைவில் ஓர் சக்தி இருக்கிறது என்பதனை உணர முயற்சி செய்த வண்ணமிருப்பவன்.
12) சமயச் சழக்கெனும் (மதம் எனும்) சேற்றிலிருந்து துணிகரமாக மீள முயற்சிப்பவன்.
13) ரிஷி மரபின் உண்மைகளைத் தெரிந்து அதன் வழி நடப்பவன்.
அவனே என் மாணவன். அவனுக்குத்தான் என்னில் பொதிந்து கிடக்கும் ஆன்மீக ரத்தினங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
- யோகி கண்ணையா -
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.