ந்யாய சாஸ்திரம் என்பது ஒருவன் தனது அந்தக்கரணங்கள் {மனம், புத்தி, சித்தம், ஆங்காரம்} நான்கிலும் மனம், புத்தி ஆகிய இரண்டையும் சரியான முறையில் தர்க்க ரீதியில் பயிற்றுவிப்பது என்பதைக் கூறும் ஒரு அறிவு!
மனதைச் செம்மைப்படுத்துவதில் நியாய சாஸ்திரம் கற்பது அவசியமானது! இல்லையென்றால் சாஸ்த்திரங்களை மனம் போன போக்கில் அர்த்தப்படுத்திக் கெடுத்து விடுவோம்.
இது சிந்தனைக்கான சில உருவகங்களைத் (metaphor) தருகிறது.
1) ஆட்டுப் பால் மடி தர்க்கம்: (அஜ கல ஸ்தான நியாய)
**********************************
ஆட்டின் மடியிலிருந்தே பால் கறக்கப்படுகிறது என்பதற்காக ஆட்டின் மடியிலேயே பால் உற்பத்தியாகிறது என்று நம்பும் அறியாமை.
பலர் வேலைத்தளத்தில் தமது முகாமையாளர்தான் தனக்கு சம்பளம் தரும் முதலாளி என்று நம்பிக்கொண்டு முட்டாள்களுக்கு அடிமையாகி, விரக்தியடையும் நபர்கள் இப்படியான தர்க்கம் உடையவர்கள்.
2) அந்தகனும் முடவனும் தர்க்கம் (அந்தக கன்ஜ நியாய)
***************************************
ஓரிடத்தில் குருடனும், முடவனும் இருந்தால் குருடன் தோளில் முடவன் ஏறி இருந்து வழிகாட்ட, குருடன் முடவன் கூறுவதைக் கேட்டு அவன் கூறும் வழியில் செல்ல வேண்டும். அப்படியில்லாமல் குருடன் முடவன் தோளில் ஏறி அமர்ந்து அவனை நடக்கச் சொன்னால் எதுவும் நடக்காது.
இதைப் போல் வேலைத்தளத்தில் சில அறிவில்லாத சோம்பேறிகள் மற்றவர்களை முதுகில் ஏறி சவாரிசெய்யும் முட்டாள்தனத்தை விளங்க இந்தத் தர்க்கம் உதவும்.
3) வாத்து அண்ட தர்க்கம்
(பகண்ட நியாயம்)
*****************************
வாத்துகள் தமக்கு முன்னே செல்லும் காளைமாட்டின் குறிகளை (testicles) பார்த்து தமக்கு பெரிய முட்டைகள் விருந்தாகக் கிடைத்திருக்கிறது என்ற மிதப்பில் அலையுமாம். இறுதியில் காளை மாடு ஒரு உதை கொடுத்தால் ஓடிவிடும்.
இதுபோல் பலரும் தமக்கு ஒவ்வாத கற்பனையை வளர்த்துக்கொண்டு, தேவையற்றவற்றிற்கு பின்னால் ஓடிக்கொண்டு கடைசியில் ஏமாந்து போகும் முட்டாள்த்தனத்தை இது குறிக்கும்.
4) சுப்தோதித நியாயம்
****************************
ஒருவன் தூக்கத்தில் கனவை அனுபவித்து விட்டு எழுந்தவுடன் அது உண்மை அல்ல என்று தனது தினசரிக் கடமைகளைச் செய்வதைப் போன்றதே எமது பிறப்பு, இறப்பு என்ற அறிவினை விளக்குவது இந்தத்தர்க்கம்.
5) நிர்வாணக் குழந்தை தர்க்கம் (நக்ன மாத்ரிக நியாயம்)
************************************
ஒரு குழந்தை பிறக்கும் போது நிர்வாணமாகப் பிறந்தது என்பதற்காக வாழ்க்கை பூராகவும் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் முட்டாள்த்தனம்.
இன்று சோதிடத்தை நம்பும் பலரும் இத்தகைய முட்டாள்தனத்தைத் தான் செய்கிறார்கள். ஒருவன் பிறக்கும் போது இருக்கும் கிரகப் பிரபாவம் தான் ஒருவனுடைய ஜனன ஜாதகம்; அவன் பிறந்த பின் ஒவ்வொரு கணமும் கிரகமும் மாறுகிறது; அவனும் புதிய கர்மங்களைச் செய்கிறான். ஆனால் தான் பிறந்த போது இருந்த கிரக பலம் தான் தனது துன்பம் முழுமைக்கும் காரணம் என்று நம்புகிறான். ஆனால் அறிவு பலத்தால் தனது வாழ்க்கையை மாற்றமுடியும் என்பதை உணராமல் இருக்கும் முட்டாள்தனத்தை உணர இந்தத் தர்க்கம் உபயோகமாக இருக்கிறது.
தொடரும்...
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.