{எவரும் படத்தைப் பார்த்துவிட்டு நான் மருந்து கண்டுபிடித்திருக்கிறேன் என்று கற்பனை செய்துகொள்ளக்கூடாது. இணைக்கப்பட்ட படத்திற்குரிய விமர்சனமே இந்தப்பதிவு, முழுமையாகப் படிக்காமல் படத்தைப் பார்த்துவிட்டு உடனடியாக முன் துணிவிற்கு வரவேண்டாம்}
இன்று ஒரு நண்பர் சித்தர்கள் கொரோனாவைப் பற்றிக் கூறியுள்ளார்கள் கொரோனாக்கு மருந்து கூறியுள்ளார்களாமே என்று என்னிடம் கேள்வி அனுப்பியிருக்கிறார்.
சித்தர்கள் எந்த வியாதிக்கும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றேன், இதெல்லாம் வீண் வெட்டி ஜம்பம், தமிழனா இருந்தா share பண்ணு போன்றவொரு வீண் வெட்டி ஜம்பப் பேச்சுத்தான் என்றேன்.
உடனே அவர் அப்படியே பிரமித்துப்போய் நீங்கள் இப்படிப் பேசலாமா? என்றார்.
அதிலென்ன தவறு என்று நான் கேட்டேன்?
சித்தர்களைக் குறைத்து மதிப்பிடுவது போல் சொல்கிறீர்களே என்றார்?
நான் எங்கே குறைத்துச் சொல்கிறேன், சித்தர்களின் மருத்துவத்தின் தத்துவத்தை ஒழுங்காகப் பயிலாமல் மேற்கத்தேய மருத்துவம் தான் நம்பகமான மருத்துவம் என்று உள்ளூர நம்புபவர்களின் அறியாமைப் பேச்சுதான் இது என்றேன்.
அவர் குழம்பி விட்டு இன்னும் விரிவாகச் சொல்லுங்கள் என்றார்.
சித்த மருத்துவம் குறித்த தத்துவ அடிப்படையைப் பின்பற்றுகிறது. இதன்படி மனிதன் 96 தத்துவங்களால் ஆனவன். இந்த 96 தத்துவங்களில் நோய் என்பது திரிதோஷம் சம நிலை இழத்தலும், சப்த தாதுக்கள் கெடுதலும். உடலை ஒரு இயந்திரமாக எடுத்தால் இந்த திரிதோஷமும், சப்த தாதுக்களுமே main switch. இவற்றை சரி செய்வதே வைத்தியம் எனப்படுகிறது. இந்த இரண்டையும் சரி செய்பவையே மருந்துகள் எனப்படுகிறது. திரிதோஷத்தையும் சப்த தாதுக்களையும் சரிசெய்தால் நோய் குணமாகும்.
இந்த இரண்டும் சரி செய்யப்பட்டால் பின்னர் உடல் எனும் கோட்டையின் வாயில்களான ஐம்புலன்களையும், அந்தக்கரணங்களையும், பிராணனையும் சரியாக வைத்திருந்தால் ஆரோக்கியம் வாய்க்கும் என்கிறது.
ஆகவே சித்த ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை; நீ வலுவாக உனது திரிதோஷம், சப்த தாதுக்களை வைத்துக்கொள்! வெளியில் இருந்த எதுவந்தாலும் அவை பார்த்துக்கொள்ளும், உனது கோட்டையை தினாச்சாரத்தால், நோயணுகா விதியால் சுத்தம் செய்து கொள் என்பதாகும்.
இந்த மருத்துவமுறை பிரபஞ்ச ஒழுங்கினை மதித்து நடக்கும் போது மாத்திரம் தான் நன்மை செய்யும்!
பிரபஞ்ச ஒழுங்கினை மதிக்காத குழப்பும் குள்ள நரித்தனப் புத்திசாலி மனிதன் உருவாகிய பின்னர், உனக்குள் இருக்கும் திரிதோஷ சம நிலையும், சப்த தாதுக்கள் என்று எதுவும் இல்லை, நீ உனது நிர்ப்பீடனத்தை நம்பாமல் நான் தரும் மருந்து உனக்கு வரும் நோயின் காரணியை அழித்துதான் நோயை வெற்றி பெறும் என்ற கோட்பாட்டினை சிகிச்சை என்று கொண்டுவந்து, உனது எதிரியை அழிக்கும் போது உனது படையும் சாகும் என்று பக்கவிளைவையும் இயல்பான ஒன்று என்று ஏற்றுக்கொண்டு மருந்துகளைக் கண்டுபிடிக்கிறோம்; நோய்களைக் கண்டுபிடிக்கிறோம் என்ற நிலைதான் இன்றைய நவீன மருத்துவம்.
ஆக பிரபஞ்ச ஒழுங்கை மதித்து ஒழுகுபவர்களுக்கு சித்த ஆயுர்வேத மருத்துவம் பலன் தரும்.
ஆகவே சித்த ஆயுர் வேத மருத்துவத்தில் நோய்களுக்கு மருந்தினைக் கண்டுபிடிப்பதில்லை. வரும் குணங்குறிகளால் எந்த தோஷமும், எந்த தாதுவும் கெட்டிருக்கிறது என்பதைக் கவனித்து அவற்றைச் சீர் செய்யும் குண, வீரிய, விபாகத்தினை சரி விகிதத்தில் உடலுக்குள் தந்தால் நோய் உடலை விட்டுப்போகும். ஆனால் இது பலனளிக்க அனுபானம், பத்தியம், துணை மருந்து, தினாச்சாரம் என்பவை அவசியம். இவை எல்லாம் கடைப்பிடிக்க முடியாத குழம்பிய சமூகத்தில் சித்த ஆயுர்வேத மருத்துவம் சரியான பலனை தராது என்ற போது நவீன மருத்துவமே சரியான ஒற்றைத்தீர்வாக காட்சியளிக்கிறது.
யாராவது சித்த மருத்துவத்தில் வைரசுக்கு, பற்றீரியாவுக்கு மருந்து கண்டுபிடிக்கிறேன் என்றால் அவர் சித்த மருத்துவ தத்துவம் தெரியாத மேற்கத்தேயத்தைப் பார்த்து வியந்து அதுதான் இதுதான் அது என்று குழம்பிப்போனவர் என்றுதான் அர்த்தம்!
இப்படி சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் வீணான வேலை பார்த்து புகழ் சம்பாதிக்கும் நோக்கம் சித்த மருத்துவத்திற்கு எந்தப் புகழையும் தரப்போவதில்லை.
உண்மையில் சித்த மருத்துவத்தை வளர்க்கும் ஆர்வம், அர்ப்பணிப்பு இருந்தால் ஒரு சித்த மருத்துவ மூல நூலையாவது திரும்பத்திரும்பக் கற்று, ஆராய்ந்து, தெளிந்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து சித்த ஆயுர்வேத மருத்துவ முறை பலனளிக்கக்கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப பாடுபடுங்கள்!
இரண்டு மருத்துவ முறைகளும் வெவ்வேறான தத்துவ அடிப்படையுடையவை, ஒன்றுக்கொன்று Complement ஆக இருக்கக்கூடியவை; ஆனால் இன்றைய அறியாமை மிகுந்தவர்களால் ஒருவர் மேல் இன்னொருவர் பழியும், ஏளனமும் செய்து குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.