இன்று துணுக்காய் பிரதேச செயலகத்தில் அரச உத்தியோகர்களுக்கு கொழும்பு அஷ்டாங்க யோக மந்திரினால் நடாத்தப்பட்ட யோகப்பயிற்சி வகுப்பின் இடையில் இயற்கை விவசாயமும் விவசாயத்தினூடாக பிரதேச பொருளாதாரத்திற்கு நாம் என்ன செய்கிறோம் என்று ஒரு சிறிய உரை!
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Friday, January 31, 2020
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
மரங்கள் குளிர்மையின் ஆதாரம்! 20 - 25 வருடங்களுக்கு முன்னர் தம்புள்ளை கண்டி வீதியில் இருமருங்கிலும் பத்து அடிக்கு ஒன்று எனும் கணக்கில் பெரும் வாகை மரங்கள் இருமருங்கிலும் சூழ்ந்து சூரிய ஒளி புகாத அடர்ந்த வனமாக காட்சியளிக்கும்! மலையகத்திற்குள் புகுகின்றோம்! குளிர் தேசத்திற்குள் நுழைகின்றோம் என்ற உணர்வை, அனுபவத்தைத் தரும்.
மாத்தளைக் கண்டி வீதியிலும் ஐந்தாறு நபர்கள் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் அளவிற்கு பெரிய அளவுடைய இத்தகைய வாகை மரங்கள் நிறைந்து பகலிலும் இருளும் காட்டுச் சூழலும் குளிரும் இருந்தது!
இப்போது வீதி அபிவிருத்தியால் (??) அழிந்துவிட்ட சின்னங்களாக ஆங்காங்கே நாவுலப் பகுதியில் இருக்கும் சில மரங்கள் மாத்திரம்!
அப்படியான நூறாண்டு பழமையான ஒரு மரத்துடன்!
Wednesday, January 29, 2020
தலாய்லாமா மந்திரமும் நோய் தீரலும்
தலாய்லாமா கூறிய மந்திரத்தின் சரியான உச்சரிப்பு
"ஓம் தாரே துத்தாரே துரே ஸோஅஹா"
இது வஜ்ராயன பௌத்தத்தில் வரும் தாரா தேவி மந்திரம். திபேத்திய மொழியில் உள்ளது. இதன் அர்த்தம் மிகுந்த பொருளுடையது.
தாரே என்றால் சம்ஸார துன்பத்திலிருந்து விடுதலை அளிப்பவள் என்று பொருள்!
துத்தாரே என்றால் எண்வகை துன்பத்திலிருந்து விடுவிப்பவள் என்று பொருள். எண்வகைத் துன்பங்களும் அறியாமை, பற்று, கோபம், தற்பெருமை, பொறாமை, அதியாசை, சந்தேகம், தவறான பார்வை இந்த எட்டினாலும் ஒருவன் தன்னை துன்பத்தில் இட்டுச் செல்கிறான். அதை நீக்குபவள் துத்தாரே என்ற தாராதேவி!
துரே என்றால் உடலிலுள்ள நோயை நீக்குபவள் என்று அர்த்தம்,
ஸோஅஹா என்றால் சரணடைகிறேன் என்று அர்த்தம்!
ஆக இந்த மந்திரம் என்னை சம்ஸார துன்பத்திலிருந்து விடுவிப்பவளே, எண்வகைத் துன்பத்திலிருந்து விடுவிப்பவளே, உடலிலுள்ள நோயை நீக்குபவளே உன்னை நான் சரணடைகிறேன் என்று பொருள்!
ஆக தலாய்லாமா சொன்ன மந்திரத்தில் சந்தர்ப்பத்திற்கேற்றால் போல் நோய் நீக்கும் பிரார்த்தனையும் இருக்கிறது என்பது சிறப்பமிசம்!
கொரொனா வைரசும் தலாய்லாமா மந்திரமும்
கொரொனா வைரசிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தலாய்லாமா மந்திரம் சொல்லியிருக்கிறார் என்று தமிழ் வலைத்தள ஊடகங்கள் மனம் போனபோக்கிற்கு வாயில் நுழையாத உச்சரிப்பை போட்டு நம்பிக்கை கொடுத்து வருகின்றன.
மந்திரம் சொன்னால் நோய் வராதா? சும்மா கட்டுக்கதை என்று நினைப்பவர்களுக்கும் பதில் இருக்கிறது.
நோய் வருவதற்குரிய முதற்காரணி முத்தோஷ சம நிலையின்மை என்கிறது சித்தாயுர்வேதம். நவீன மருத்துவத்தில் நிர்ப்பீடனம் (immunity) குறைதல் என்பதனை இதற்கு ஒப்பீடாக எடுத்துக்கொள்ளலாம்.
உடலின் சக்தியை உறிஞ்சும் மிகப்பெரிய உறுப்பு மூளை. மூளை சமநிலையாக அதிக பதட்டமடையாமல் சக்தியை உறிஞ்சாமல் இருந்தால் உடலானது, உடலில் மற்றைய பகுதிகளைத் தேவையான ஆற்றலுடன் இயக்கி உடலிற்குள் வரும் நோய்க்காரணிகளை போரிட்டு வெல்லும்.
இப்படி மூளையைப் பதட்டமடையாமல் ஓய்வாக வைத்துக்கொள்வதற்கு மந்திரம் உதவும். ஆக தலாய்லாமா சொன்னது அவர்களது சம்பிரதாயத்தில் அவர்கள் பயன்படுத்தும் தாராதேவி மந்திரம், உடனே அதை breaking news ஆக்கி ஏதோ மாயா ஜாலம் நடக்கப்போகிறது என்ற பிரமையை ஏற்படுத்தாமல் மனதை ஓய்வாக வைத்து உடலின் அகவலிமையைக் கூட்டும் மன அமைதியைப் பெறும் வழியைக் கைக்கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணரவேண்டும்.
உங்கள் நம்பிக்கைக்கு தகுந்த மனதை சந்தோஷமாக, நம்பிக்கை தரும், ஓய்வு தரும் எந்த தோத்திரமும், மந்திரமும் இந்தப்பலனைத் தரும்.
Tuesday, January 28, 2020
தலைப்பு இல்லை
நாம் எண்வித பாசங்களால் கட்டப்பட்டிருக்கிறோம்.
1. வெறுப்பு
2. சந்தேகம்
3. பயம்
4. வெட்கம்
5. மற்றவர்களின் கண்டனம்
6. ஜாதிப் பெருமை
7. நிறம்
8. நடத்தை
இந்த எட்டும் சேர்ந்து எமது ஆங்காரத்தை ஆக்குகிறது. நாம் தேவியிடம் எம்மை சரணடைய வைப்பதன் மூலம் எமது ஆங்காரத்தை வென்று ஆன்ம முன்னேற்றத்தின் தடையினை நீக்குகிறோம். இதன் பயனாக நாம் விளையாட்டுத்தனமும் பொறுமையும் உள்ள சமூகமாக எல்லாவித துயரங்களையும் வென்றவர்களாக வாழ்க்கையை வாழமுடியும்.
ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதர்
தேவிபுரம்
கொரோனா வைரசு
வைரசு என்ற பெயர் விஷ என்ற அடிச்சொல்லில் இருந்து வந்தது! வைரசு உலகின் உயிரியல் சனத்தொகையை கட்டுப்படுத்தும் உலகத்தோற்றத்தின் ஆரம்பத்திலிருந்து பயணிக்கும் மனிதனுக்கு முந்தைய ஜடத்திற்கும் உயிரிற்கும் இடைப்பட்ட ஒன்று!
இருப்பில் ஜடமாக இருக்கும், செயலில் உயிரைக் கொல்லும்!
வைரஸ் உடலில் புகுந்தால் உடல் தனது இயற்கை எதிர்ப்புசக்தியால் மாத்திரமே எதிர்த்து வெல்லமுடியும். பொதுவாக நோய் கொல்வதை விட நோயின் பயம் கொல்லும் மனிதர்கள் அதிகம்! பயம் உடலின் நிர்ப்பீடன சக்தியைக் குறைக்கும்!
ஆக மொத்தத்தில் கொரனா வைரசு எத்தனை பேரைக் கொல்கிறது! பேஸ்புக், breaking news, twitter, YouTube தரும் பயம் எத்தனை பேரைக் கொல்லப்போகிறது என்ற ஆய்வு வெகுவிரைவில் முன்னெடுக்க வேண்டும்.
Monday, January 27, 2020
தலைப்பு இல்லை
தம்பி ஆதித்தன் (முதுதத்துவமானி (MPhil) மாணவன், மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளுக்கான பட்ட மேற்படிப்பு நிறுவகம், பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை) எமது அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலை ஆராய்ந்து ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.
இன்னும் பல ஆய்வுகளும் எழுத்துக்களும் வெளிப்பட்டு நல்லறிஞன் ஆகிட வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்!
{ஆய்வுச்சுருக்கம்:
சித்தர்நெறி நுணுக்கங்களை விளக்குவதும் முதன்மைச் சித்தரான அகத்தியரின் பெயரிலமைந்ததுமான ‘அகத்தியர் ஞானம் முப்பது| இலக்கியத்தில், குரு தத்துவம் குறித்த கருத்துகளை வெளிக்கொணர்வது ஆய்வின் நோக்கமாகும். யோக நெறி நின்று ஞானம் பெற விளையும் மாணவன், செல்ல வேண்டிய பாதையையும் அதன் சிக்கல் நிலைகளையும், சிக்கல்களைக் கடந்து முன்னேறிச் செல்வதற்கு வேண்டிய யோக நுணுக்கங்களையும், அவ்வாறு யோக நெறியில் முன்னேறுகையில் கிட்டும் இடைநிலை அடைவுகளையும் அவற்றின் தன்மைகளையும், இறுதி இலக்கான முழுமையான ஞான நிலையையும் குறித்து சுருக்கமாகக் கூறும் பணியை அகத்தியர் ஞானம் முப்பது புரிகின்றது. பரிபாசைச் சொற்கள் நிறைந்த இந்த இலக்கியத்தினை, அதன் யோகப் பாரம்பரிய விளக்கநூலான ‘அகத்தியர் யோகஞானத் திறவுகோல்| ஊடாக, இந்தக் கற்கை ஆராய்கின்றது. குருவின் தன்மை, மாணவனுக்கு குருவிடமிருந்து கிடைப்பவை, குருவின் திருவடிச் சிறப்பும் குருவழிபாட்டின் அவசியமும், மாணவன் குருவிடம் கற்க வேண்டிய முறை ஆகியவற்றை, விபரண ஆய்வு முறையூடாக இந்த ஆய்வு வெளிப்படுத்தும்.}
https://www.aranejournal.com/article/5872
Sunday, January 26, 2020
தலைப்பு இல்லை
இந்த நூல் அனைத்து மருத்துவர்களும் படிக்க வேண்டிய நூல்!
குறிப்பாக சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் படிக்க வேண்டிய நூல்!
இதை எழுதியவர் மேற்கத்தேய மருத்துவ விஞ்ஞானி!
கீழைத்தேய மருத்துவ முறைகளின் அடிப்படைகளை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ள இந்த நூல் மிகவும் உபயோகமானது!
எதையும் மிகைப்படுத்தாமல் அறிவியலிலிருந்து வழுவாமல் உண்மையை எடுத்துரைக்கிறது.
மருத்துவர்கள் தினமும் படிக்கக் கடமைப்பட்டவர்கள்!
தலைப்பு இல்லை
இன்று பாகொட ஆனந்த தேரர் மற்றும் பண்டைய இந்திய அறிவியல் ஆய்வாளர் சதீஷ் ஆப்தே அவர்களுடன் தியோஸபிகள் ஸொசைட்டியில் சந்திப்பு.
Monday, January 20, 2020
தலைப்பு இல்லை
இன்றைய பொழுது இரண்டு அறிவியல் ஆய்வறிஞர்களுடன்!
கலாநிதி விஜயமோகன், இலங்கையில் இருக்கும் தமிழ் அறிவியலாளர்களில் பெரிதும் அறியப்படாத ஆய்வு அறிஞர். யானைகளைப்பற்றியும் அதன் நடத்தைகள் பற்றியும் உரையாடுவது நாமிருவரும் சந்திக்கும் போது இயல்பாக நடைபெறுவது. அடுத்த சில மாதங்களில் IUCN இன் ஆய்வு மாநாட்டில், Oxford பல்கலைக்கழகத்தில் அவரது யானைகளைக் கட்டுப்படுத்தும் எளிய மின்சார வேலி கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வுக்கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டு உரையாற்ற இருப்பதைப் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய எமது சந்திப்பும் யானை - மனித முரண்பாட்டுச் சமூகப்பிரச்சனை தொடர்பானதுதான்!
கலாநிதி (இன்னும் சில நாட்களில்) நிசாந்தன் 2019ம் ஆண்டின் இலங்கையின் தலைசிறந்த 10 இளம் விஞ்ஞானிகளில் ஒருவர்! உலகத்தரம் வாய்ந்த high impact journal களில் தனது ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
Thursday, January 16, 2020
தலைப்பு இல்லை
இன்று எமது இயற்கை விவசாயப் பண்ணையின் பொங்கலும் சாகம்பரா பிள்ளையாருக்கு சக்கரைப் பொங்கல் படையலும்!
தை பிறந்தால் வழிபிறக்கும்!
ஆம் மார்கழி பூராக மழையால் வேளாண்மை செய்யமுடியாமல் முடங்கிக் கிடந்த விவசாயி நிலம் உழுது வேலை செய்ய வழி தரும் மாதம்!
கடந்த வருட ஆய்வுத்திட்டமாக தொடங்கிய பண்ணை இந்தத் தையுடன் அனேக மரக்கறிகளைத் தரும் பண்ணையாக உற்பத்தி செய்யும் திட்டம் ஆரம்பமாகியது!
தோள் கொடுக்கும் தம்பிமாருக்கு நன்றிகள் பல!
Wednesday, January 15, 2020
பரியங்க யோகம்
திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரம், பத்தொன்பதாம் அத்தியாயம் பரியங்க யோகம்! இருபது பாடலில் கூறுகிறார்!
பரியங்கம் என்றால் கட்டில் என்ற பொருள் கொண்டு பண்டிதர்கள் அனைவரும் ஆளுக்கு ஆள் பொருள் கூறி எழுதி வைத்திருக்கிறார்கள்!
இந்த விளக்கங்கள் எல்லாம் படித்தால் தலையைப் பிய்த்து கொள்ளும்படியாக இருக்கிறது! எவராவது இவற்றைப் பயிற்சிக்கு என்று எடுத்துக்கொண்டால் மறைகழன்று விபரீதமாவது உறுதி!
திருமந்திரம் கற்றவர்கள் எவராவது இருந்தால் உரையாடலாமே!
சந்தேகபுத்தியும் விபரீத புத்தியும்
என் மேல் சந்தேகப்படுகிறாயா? என்று பலரும் கேட்பதையும், சந்தேகப்படுதல் தவறு என்ற தொனியில் கேட்பதையும் நாம் காண்கிறோம்!
என்னைப்பொறுத்தவரையில் சந்தேகம் என்பது எம்மைப் பாதுகாத்துக்கொள்ள, புத்தியை தீட்ட மனம் வைத்திருக்கும் பொறிமுறை!
இது ஏன்? எப்படி? எதனால்? என்று கேட்கும் மனதின் ஆற்றல் சந்தேகம்!
உண்மையில் சந்தேகம் எமது வாழ்க்கையில் அறிவுத்தெளிவை உண்டாக்கும். ஆய்வு மனதிற்கு அடிப்படையே சந்தேகபுத்திதான்!
ஆனால் நாம் உண்மையில் சந்தேக புத்தியை போற்றாமல் தவறாக அது எம்மை ஆட்டிப்படைக்கும் ஒன்றாக கலங்கிப் போய்விடுகிறோம்.
இதற்குக் காரணம் விபரீத புத்தி! விபரீத புத்திக்கு, விபரீத புத்தி எவை என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாததே காரணம்.
ஒருவன் நல்லவனா? கெட்டவனா? என்ற சந்தேகம் எப்போதும் இருத்தல் வேண்டும். இந்த சந்தேகத்தின் பின்னர் சரியான அவதானத்தால் அவன் நல்லவன் அல்லது கெட்டவன் என்ற உறுதியை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் ஆராய்ந்து கொண்டிருக்கவேண்டும். ஒருவன் எந்த சந்தர்ப்பத்தில் நல்லவன், எந்த சந்தர்ப்பத்தில் கெட்டவன் என்ற தெளிவு இருக்கவேண்டும். இப்படி உறுதி செய்யும் பொறிமுறைக்குச் செல்லாமல் இவன் கெட்டவன் என்ற முடிவுடன் நாம் அவனைத் தண்டித்தாலோ, நல்லவன் என்ற முடிவில் ஏற்றுகொண்டாலோ விளைவு விபரீதமாகும்!
ஆகவே சந்தேகபுத்தி இருக்கலாம், அதனை கூர்ந்த அவதானத்தின் மூலம் உறுதிசெய்துகொள்ளலாம்.
அவதானமும், ஆய்வும் இல்லாமல் முடிவெடுக்கும் விபரீத புத்தி இருக்கக்கூடாது.
தலைப்பு இல்லை
நண்பர் ஒருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து அனுப்பியிருக்கிறார்!
நான் அளித்த பதில் தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில்! என்று!
உடனே அது தமிழர்களை ஏமாற்றச் செய்த சதி! சொதி என்று வியாக்கியானம் வேறு!
அவருக்கு நான் அளித்த பதில்;
பாரம்பரியமாக வானியலை அடிப்படையாகக் கொண்டு இராசி மண்டத்தை 12 ஆகப் பகுத்து, அதில் தொடக்கப் புள்ளியாக மேஷ ராசியை வைத்து, அந்த ராசிக்குள் சூரியன் நகர்வதையே ஆண்டின் முதல் நாளாக எனது பாட்டன், முப்பாட்டன் எல்லோரும் பின்பற்றி வந்திருக்கிறார்கள்! மாதப்பிறப்பு என்பது ஒவ்வொரு இராசியில் சூரியன் புகும் முதல் நாள்! இன்று தை மாதப்பிறப்பு! இது அறிவியல் பூர்வமான வானியல் காரணமும் கூட!
ஆயிரம் ஆண்டுகாலமாக அரசாளுபவர்கள் தம்மை இயற்கைக்கும், கடவுளுக்கும் நிகராகக் கற்பனை செய்துகொண்டு தமது பெயர் நிலைக்க ஏதாவது குழப்ப வேலைப்பார்த்து வைப்பது வழக்கம்! அந்த அரசனைக் கடவுளாக மதிப்பவர்கள், தம்மை அந்த வழி வந்தவர்களாக எண்ணிக்கொள்பவர்கள் அந்த ஆண்டுக்கணக்கினை எடுத்துக்கொள்வார்கள்! அதில் தவறு ஒன்றுமில்லை!
இன்றைய நாளை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடுபவர்களும் அப்படி முற்காலத்தில் அரசன் வகுத்த வழிமேல் பக்தி கொண்டு கொண்டாடுபவர்களை போல் தைப்பொங்கலை தமிழ்ப்புத்தாண்டு என்று கூறிய அரசனைத் தொழும் வழி வந்தவர்கள்தான்!
நீங்கள் இந்த நாளைப் புத்தாண்டு என்று கொண்டாடினாலோ, நான் சித்திரையைப் புத்தாண்டு என்று கூறினாலோ பூமியும், சூரியனும் மாறிச்சுற்றப் போவதில்லை!
இப்படிக் கொண்டாட்டம் என்று சொல்லி பூமியை மாசுபடுத்திக்கொண்டு, சந்தோஷம் என்று சொல்லி குடித்துக் கும்மாளம் அடிக்கும் கூட்டம்தான் அனேகர்!
நீங்கள் உங்கள் அரசன் வழியைப் பின்பற்றுகிறீர்கள், நான் என் முன்னோர்கள் வழியைப் பின்பற்றுகிறேன் என்று பதில் கூறினேன்!
ஒவ்வொரு காலத்திலும் ஒன்றை ஒன்று வென்று தனது அதிகாரத்தை நிறுவும் அதிகாரத்தின் விளையாட்டுக்களில் நேரத்தை வீணாக்குவதை விடுத்து கொண்டாட்டங்களின் நோக்கம்,
மகிழ்ச்சி!
சந்தோஷம்!
ஒற்றுமை!
இவற்றிற்காக அனைவரும் பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோமா!
தலைப்பு இல்லை
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!
சூரியனின் உத்தராயணம் - வடக்கு நோக்கிச் செல்லும் பயணத்தின் தொடக்க நாள்!
தனுசு ராசியிலிருந்து மகரராசிக்கு செல்லும் இந்த நாள்
நெற்கதிர்கள் அறுக்கும் அறுவடைநாள்!
உயிரிற்கும் உலகிற்கும் ஆதாரமாக பிராண சக்தி வழங்கும் சூரியதேவனை வணங்குவோம்!
பூவுலகிற்கு பிரத்தியக்ஷ தெய்வம், அனைத்து இயக்கத்தையும் தூண்டும் சக்தி சூரியன்!
Monday, January 13, 2020
தலைப்பு இல்லை
உலகம் பெரியது!
மனதோ சிறியது!
மனதின் இயக்கம் வைத்த இலக்கினால் சுழலும்!
இலக்கு வாழ்க்கைச் சக்கரத்தை சுழற்றும் சுக்கான்!
இலக்கிற்கான பயணம் வாழ்க்கை!
ஒன்றிய இலக்குள்ளவர்கள் இணைந்த பயணம் அழகானது!
இடையில்,
சிலர் வருவார் தம் பயன் காண!
சிலர் செல்வார் தம் உயர்வு காண!
வருவாரை அணைத்து நம் இலக்கினில் உயரலும்
செல்வாரை வாழ்த்தி அவர் இலக்கினை உயர வழி செய்தலும் வாழ்வின் சந்தோஷம்!
வாழ்க்கைப் பயணம் ஒரு முடிவிலி!
******************
நம் வாழ்வு....
வாழ்வு நமக்குப் பயன் தரல் வேண்டும்!
வாழ்வு சுற்றத்தாருக்கு பயன் தரல் வேண்டும்!
வாழ்வு உலகிற்கு பயன் தரல் வேண்டும்!
இவ்வாழ்வு யோகமாகும்!
*****************************
Saturday, January 11, 2020
ஸோமானந்தனின் ஸ்ரீபுர விஜயம் - 03 : போகரிடம் தீஷை
அவன் குருநாதருடன் குரு சேவையில் இருந்த காலத்தில் வித்தைகள் படிப்பதற்கு என்று வகுப்புகள் எதையும் அவர் எடுப்பதில்லை! காலையிலிருந்து மாலை வரை குருவிற்கும், ஆசிரமத்திற்கும் தேவையான உதவிகளைச் செய்வதுதான் ஸோமனின் வேலை! ஆனால் அவனோ தான் ஞானம் பெறவேண்டும் என்ற தாகத்திலிருந்து சற்றும் தனது இலட்சியத்தை தவறவிடுபவனாக இல்லை. அவனது ஆர்வத்தைக் கண்ட குரு அவனது தகுதியை அறிந்து தனது குரு நாதர் கற்பித்த காயத்ரி குப்த விஞ்ஞானம் என்ற பாடத்தொகுப்பினை இரவில் கற்பித்தார். இரவில் குருவுடன் அவரது இல்லத்திலேயே உறங்குவதால் அவரது குரு நாதர் கைப்பட எழுதிய கையெழுத்துப் பிரதிகளை ஸோமனிடம் கொடுத்து அதைப் பிரதி செய்து கற்றுக்கொள்ளும் படி கூறியிருந்தார்.
ஸோமனும் காயத்ரி உபாசனையின் நுணுக்கங்கள் அனைத்தையும் கொண்டிருந்த காயத்ரி குப்த விஞ் ஞானம் பாடங்களை ஒவ்வொன்றாக நுணுக்கமாக கற்றுக்கொண்டு குரு உபதேசித்த வழியில் தினசரி சாதனையை ஒழுங்காக செய்துகொண்டிருந்தான்.
இப்போது ஸோமன் சாதனையில் நன்கு முன்னேறிய இல்லற யோகி ஆகியிருந்தான். அந்தப்பாடங்களை அவன் மீண்டும் மீண்டும் கற்பதை வழக்கமாக்கியிருந்தான். கற்று முடிந்தவுடன் தனது சாதனையறையில் அமர்ந்து தனது புருவமத்தியில் நினைவைக் குவித்து குரு நாதர் அகத்திய மகரிஷியை தியானிக்கத் தொடங்கினான்.
சிறிது நேர தியானத்தில் அவன் அகஸ்திய மண்டலத்தை அடைந்திருந்தான். அங்கு பேரொளி வெள்ளமாக நிறைந்திருந்த அகத்தியமகரிஷியின் ஒளியில் அவன் ஒன்றியிருந்தான். அந்த நிலையில் அவனும் குருவும் வேறு அல்ல! ஆனால் மனம் செயற்படும் போது வேறாக இருப்பதாக உணர்ந்தான்! இப்படி அனுபவத்தில் திளைத்துக்கொண்டு இருக்கும்போதே அந்த ஒளியும் தானும் வேறாகி நிற்பதையும் உணர்ந்து கொள்ளத்தொடங்கும் போது குரு நாதரின் அந்த வார்த்தைகள் ஒலிக்கத்தொடங்கியது.
"ஸோமா, நீ இந்தப்பிறவி எடுத்த நோக்கம் என்னவென்பதைப் புரிந்து கொண்டாயா? உனக்குரிய பணி என்னவென்று தெரிந்ததா? என்றார். அதற்கு குருவே "இன்னும் முழுமையாகப் புரியவில்லை குருவே" என்றான்.
அதற்கு அகஸ்தியப் பேரொளியிலிருந்து வந்த அசரிரி " நீ உனது முற்பிறப்புகளின் தொடர்ச்சியை அறிந்து கொண்டால் இது இலகுவாக இருக்கும், அதை அனுபவமாகவே தருகிறோம், இப்போது நீ போக நாதனிடம் செல்லப்போகிறாய்! போகனிடம் நீ பெறவேண்டிய ஞானம் நிறைய இருக்கிறது, செல்வாய்" என்று ஆசி கூற, ஸோமன் தான் மலையடிவாரத்தில் இருப்பதை அறிந்தான்.
சற்று மேலே பர்ணசாலை இருந்தது. அங்கு பலர் மருந்தரைக்கும் கல்வத்துடன் வேலைபார்த்துக்கொண்டிருந்தார்கள். மெதுவாக மலைமீது ஏறி நன்கு கட்டப்பட்டிருந்த பர்ணசாலையிற்குள் நுழைந்தான். அங்கு நீண்டதாடியுடன் குருவாக, இளமைததும்ப ஒருவர் தியானத்திலிருந்தார். ஸோமன் உள்ளே செல்ல, அன்பான குரலில் "வா ஸோமா!" என்று கண்களைத் திறக்காமல் அழைத்தார். ஸோமனின் நினைவில் குரு நாதர் போக நாதரிடமல்லவா செல்ல உத்தவிட்டார்! நான் இப்போது போக நாதரைத்தான் சந்திக்கிறேனா என்று எண்ண ஓட்டம் செல்ல, அதை உறுதிப்படுத்துவது போல, நீ போகனிடம் தான் வந்திருக்கிறாய் என்றார்! அதைக்கேட்ட ஸோமன் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வணங்கினான்.
அன்புடன் கண்ணை விழித்து போகர், "மகனே, நீ அகத்தியரிடம் எப்படிப் பேருணர்வு பெறுவது என்று கற்றுக்கொண்டு விட்டாய், அவர் உன்னை என்னிடம் அனுப்பியது, நவகோள்களையும் ஈர்த்து உடலின் சக்தியை எப்படி உயர்ந்த சக்தியாக்கி அக இரசவாதம் செய்வது என்ற ஞானத்தினைப் பெறுவதற்கு! இந்த ஞானம் எளிதில் கிடைக்காது! பல சோதனைகளைத் தாண்டி நீ குரு பக்தியில் உறுதியாக இருப்பதை அறிந்தால் மட்டுமே தரப்படும். சலனிக்காத மனதுடன் குரு சேவை செய்வாய், தகுந்த நேரமும், பக்குவமும் வரும்போது சொல்லித்தருவோம்! உனக்கு இங்கிருப்தற்கான வசதிகளைப் பெற எனது மாணவன் நாகன் உதவி செய்வான். நாகன் போகருடன் உடன் வசிப்பவன். ஸோமனை தான் தங்கும் மலைக்குகையிற்கு அழைத்துச் சென்றான். அங்கு ஏறக்குறைய நூறு மாணவர்களுக்கு மேலிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் காட்டில் பச்சிலை பறித்து மருந்தரைக்கும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
ஒரு நாள் திடீரென ஸோமனையும், நாகனையும் அழைத்த போக நாதர் நாம் மூவரும் மேருமலையில் சில சித்தர்களைக் காணச் செல்லப்போகிறோம். தயாராகுங்கள்! நீண்ட நாட்கள் நடந்து பயணிக்க வேண்டியிருக்கும், பயணம் நாளை ஆரம்பமாகும் என்றார். அடுத்த நாள் மூவரும், அவர்களுடைய காவல் நாய் பைரவனுமாக பயணம் ஆரம்பமாகியது. தொடர்ச்சியான மூன்று மாத பயணத்தின் பின்னர் பனி நிறைந்த மேரு மலை அடிவாரத்தை அடைந்தார்கள். இனி செங்குத்தான மலையுச்சிப் பயணம்.
இந்த மூன்று மாதப் பயணத்தில் நாகனைப் பற்றி ஸோமன் சிறிது அபிப்பிராயம் கொண்டிருந்தான். நாகனுக்கு தான் குருவுடன் அதிககாலம், அருகிலேயே இருப்பதால் தான் மற்றவர்களை விடவும் அதிக தகுதியானவன் என்ற எண்ணமிருந்தது. ஆனால் குருவின் நடத்தை மேல் சிறிது சந்தேகம் அவனுக்கு எப்போதும் இருந்தது. தனது குரு தாந்திரீக வித்தையில் பெண்களுடன் சல்லாபம் செய்வதாக மனதிற்குள் எண்ணம் கொண்டிருந்தான். மேலும் இந்த நீண்ட பயணம் வீணான ஒன்று என்று இரகசியமாக ஸோமனது மனதைக் குழப்பிக்கொண்டிருந்தான். ஆனால் ஸோமனுக்கு தனது குரு கூறியபடி போகரிடம் அறியவேண்டியதை அறிவதைத் தவிர வேறு எந்த எண்ணமும் ஓடவில்லை. இப்படி நாகனின் இந்தக்குழப்பத்தினை அறிந்திருந்தாலும் ஸோமன் அதைப்பற்றிப் பெரிதாக மனதில் எடுத்துக்கொள்ளாமல் குருவைப் பின்பற்றி தனது பயணத்தைத் தொடர்ந்திருந்தான்.
இப்போதும் குருவும் சீடருமாக மூவரும், அவர்களுடன் பயணித்த நாயுமாக நால்வரும் மேருமலை அடிவாரத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். மலையேறுவதற்கு முன்னர் போக நாதர் தனது கைப்பையில் இருந்து நான்கு குளிகைகளை எடுத்து, நாகனுக்கும், ஸோமனுக்கும் கொடுத்து, நாம் இப்போது பூமி வானிலிருந்து ஆற்றலகளை ஈர்க்கும் மேருமலையின் மீது ஏறப்போகிறோம், அந்த ஆற்றலைத்தாங்குவதற்கு தகுந்தபடி எமது நாடிகளின் பிராண ஓட்டத்தை சீர்படுத்தும் இந்தக்குளிகைகளை அருந்திவிட்டு மேலே நடப்போம் என்றவாறு நாயிற்கும் ஒரு குளிகையை வாயில் வைத்து தானும் அருந்திவிட்டு போகர் மலையேறத்தொடங்கி விட்டார். நாயும் பின்னால் செல்ல, ஸோமனும் அருந்திவிட்டு நடக்கத்தொடங்கினான்!
சற்று நேரத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த போகர் தடார் என்று மயங்கிச் சாய்ந்தார். அடுத்து நாயும் மயங்கி விழ, ஸோமனுக்கு தலை கிறுகிறுத்து சுற்றியது. கண்கள் இருளத்தொடங்கியது. நாகன் திடமாக இருந்துகொண்டிருந்தான். அப்படியே மயங்கி விழுந்துகொண்டிருக்க, நாகனின் புலம்பர் காதில் ஒலித்துக்கொண்டு இருந்தது. கண்களை விழித்துப் பார்க்கும் போது புன்சிரிப்புடன் போகரும், நாயும் நின்று கொண்டிருந்தது. நாகனைக் காணவில்லை. இப்போது ஸோமனுக்கு உடல் பத்துமடங்கு பலம் பெற்றது போன்ற உற்சாகம் காணப்பட்டது.
புறப்படலாமா ஸோமா, என்றார் போக நாதர், சரி குருவே என்று வழமையைப்போல கேள்வி எதுவும் கேட்காமல் நடக்கத்தொடங்கினான். அவனது மனதிற்குள் நாகன் எங்கே சென்றான் என்ற கேள்வி எழுந்துகொண்டிருந்தது.
சற்றுத்தூரம் செல்லும் போது, போகர் "மகனே, நாம் உயர்ந்த ஆற்றலினைப் பெறுவதற்கு சரணாகதி தேவை! மனதினைப் பயன்படுத்தி தன்னைக் குழப்பிக்கொள்பவன் உயர்ந்த ஆற்றலைப் பெற தகுதியற்றவன், மனம் எந்தக் குழப்பமும் இல்லாமல் சலனமற்று இருந்தால் தான் நாம் இப்போது மேருவின் உச்சியில் சென்று செய்யப்போகும் சாதனையில் வெற்றி பெறமுடியும்" ஆகவே எல்லா எண்ணங்களையும் விட்டு விட்டு பயணத்தில் கவனம் வை! சிறிது நேரத்தில் மேருவின் உச்சியை அடையப்போகிறோம், அங்கு உனது மனம் நான் சொல்வதை ஏற்கும் பக்குவத்தில், ஏற்பு நிலையில் இருக்க வேண்டும்" என்றார். அதைக் கேட்ட அந்தக்கணத்திலேயே நாகனைப் பற்றிய சிந்தனையை விட்டொழித்து விட்டு குருவின் பாதச்சுவட்டினை பின்பற்றி செல்லத்தொடங்கினான்.
சிறிது நேரத்தில் உச்சியை அடையும் போது இருட்டி நிலா உதயமாகியிருந்தது. பசி, தாகம் எதுவும் ஏற்படவில்லை. போகர் அமைதியாக வானை நோக்கி கண்களைச் செலுத்தி தியானத்தில் இருந்தார். அவருக்கு அருகில் ஸோமன் அமர்ந்துகொண்டான்.
சிறிது நேரத்தில் கண்விழித்த போகர், குழந்தாய் உனது அப்பழுக்கற்ற குருபக்தியாலும், சித்த சுத்தியாலும் இந்த உயர்ந்த இரகசியத்தை உனக்கு உபதேசிக்கப்போகிறேன், அண்டத்தில் உள்ள சூரிய, சந்திர, அக்னி கலைகளையும், பிரம்மா, விஷ்ணு, ருத்திர, மகேஸ்வர, சதாசிவ கலைகளையும் உடலில் இருத்தி, பின்னர் அம்ருத கலையான தாய்சக்தியை உடலில் ஏற்கும் முறையைச் சொல்லித்தருகிறேன், இதற்கு நீ நவகோள்களை முதலில் உடலில் ஈர்த்து சேர்க்கும் முறையினை சொல்லித்தருகிறேன், அதைக் குறித்த காலம் பயிற்சித்து பின்னர் அம்ருத கலைப் பயிற்சியினைச் செய்யலாம், உனக்கு இங்கிருந்து கீழிறங்கும் வரை உடலில் எந்தச் சோர்வும், பசியும், நித்திரையும் வராது! காலம் நகர்வதை மனம் உணராது! ஆகவே இங்கு நான் உபதேசிப்பதை உனது சித்தத்தில் ஆழமாகப் பதிப்பித்துக் கொள்! என்றார்!
சலனமற்ற சித்தத்தினைக் கொண்டிருந்த ஸோமனின் சூக்ஷ்ம, காரண சரீரத்தில் போகர் தாய்சக்தியான புவனேஸ்வரியின் ஆற்றலினைப் பாய்ச்சினார்! எவ்வளவு காலம் சென்றது என்பதை அறியாமல் குரு கூறித்தந்த பயிற்சியினை இடைவிடாமல் பயிற்சித்தான். நாட்கள் நகருவதை அறியாமல் கண்களை மூடி சமாதி நிலையில் இருந்தான்.
திடீரென சிரசில் கைகள் வைக்கப்பட்டு ஆற்றல் இறங்குவது உணர, கண்விழித்தான் ஸோமன். பயிற்சி முடிந்தது இறங்குவோம் வா என்று கூற போக நாதரை வணங்கி மூவருமாக இறங்கத்தொடங்கினர்.
இப்போது ஸோமன் புதுவித உணர்வு நிலையை அடைந்திருந்தான். மனம் அவனது கட்டுப்பாட்டில் இருந்தது. எதை எண்ணினாலும் அதைப்பற்றி பூரணமான விளக்கம் அவனது மனதில் விளக்கமாகத் தோன்றியது.
கீழறங்கும் போது, போகர், ஸோமா, நீ பெற்றுக்கொண்ட சாதனை மூலம் வரும் ஆற்றலை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி எமது குரு நாதர் அகஸ்திய மகரிஷியிடம் விளக்கமான அறிவுரை பெற்றுக்கொள்! உனக்குரிய எனது கடமை முடிந்தது! நீ உனது சாதனையைத் தொடர வேண்டும்! இத்தகைய ஆற்றல்கள் மனித குலத்தை மேம்படுத்தும் எண்ணம் கொண்ட சித்தர் கணங்களுக்கு மட்டுமே தரப்படுவது! சுய நலமும், பேராசையும், ஆசையும் கொண்ட மனிதர்களுக்கு இது தரப்படுவதில்லை! என்னுடன் சிறிதுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும்! நாகன் இணைந்து கொள்வான், அதன் பின்னர் நீ உனது வழியில் செல்லலாம் என்றார்!
நாகன் இணைந்து கொள்வான் என்பதைக் கேட்ட ஸோமனுக்கு ஆச்சரியம், அவனுக்கு என்ன நடந்தது என்பதைக் கேட்கும் எண்ணம் அவனுக்கு ஏற்படவில்லை. இதை நினைத்துக்கொண்டு இருக்கும் போது, போகர் " ஸோமா குரு அனைவரிற்கும் கருணையை சமமாகத் தருபவர், மேருமலையைக் கடப்பதற்குரிய பிராணசக்திக் குளிகையை இந்த நாய் உட்பட மூவருக்கும் நான் சமமாகத் தந்தேன், நீ எந்த எண்ணமும் இல்லாமல் அருந்திவிட்டாய்! நாகனுக்கு இயல்பாக இருக்கும் சந்தேகமும், குழப்பமும் அவனைப் பயம் கொள்ள வைத்தது! குளிகையின் ஆற்றல் உடலில் விழிப்படைந்தவுடன் மூளையை அது ஓய்விற்கு கொண்டுவர மயக்கத்தை ஏற்படுத்தும், அதனைப் புரிந்து கொள்ளாமல் தான் இறந்து விடுவோம் என்றபயத்தில் அவன் குளிகையை உட்கொள்ளவில்லை. நாம் இறந்து விட்டோம் என்று ஓடி விட்டான், இப்போது மலையடிவாரத்தில் உள்ள கிராமத்தில் இருக்கிறான். பார்த்தாயா! மேருமலை உச்சியில் உன்னுடன் உயர்ந்த இரகசிய ஞானத்தினை அறியும் வாய்ப்பினை தனது சித்த சுத்தி இன்மையால் இழந்து விட்டான்! இவனைப்போல் பலரும் பல்லாண்டுகாலம் குருவைச் சுற்றி இருந்தாலும் தமது அறியாமையினால் குருவிடமிருந்து எதையும் பெறுவதில்லை! நீ அவனைக் காணும் போது உன்னைத் துருவித்துருவி என்ன நடந்தது என்று கேட்பான், நீ உயந்த தீஷை பெற்றுவிட்டதாக அவனிடமோ, வேறு எவரிடமோ சொல்லிவிடாதே! உனது சாதனையில் மாத்திரம் கவனமாக இரு! உனது குருபக்தியும், சித்த சுத்தியும் உன்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது, நாகனிடம் என்மேல் இருக்கும் பக்தியின் அளவிற்கு சித்த சுத்தி இல்லாததால் இவ்வளவு தூரம் வந்தும் இந்த வாய்ப்பினை நழுவவிட்டுவிட்டான்! என்றார்!
ஸோமன் தனது மனதிற்குள் " நாகன் உயர்ந்த நிலை பெறவேண்டும்" என்று எண்ணிக்கொள்ள, அதை அறிந்துகொண்ட போக நாதர் "ஆம் இந்த எண்ணம்தான் சித்த சுத்தியின் பிரதிபலிப்பு" என்றார். ஸோமனின் மனதோ பூரிப்போ, சந்தோஷமோ, கவலையோ இன்றி ஆழ்ந்த நீர் நிலை போல் தெளிந்திருந்தது.
மலையடிவாரக் கிராமத்தை அடைந்தவுடன் அங்கு நாகன் ஒரு வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்தான். இருவரையும் கண்டவுடன் ஓ என்று தேம்பி அழுதுகொண்டு ஓடி வந்து குருவின் காலைப் பிடித்துக்கொண்டான். மன்னித்துவிடுங்கள் குருவே, நீங்கள் அனைவரும் இறந்து விட்டீர்கள் என்று பயத்தில் ஓடி வந்துவிட்டேன் என்றார். போகரோ புன்சிரிப்புடன், ஒன்றும் நடக்காதது போல், சரி நாம் போகலாம் நாகா, ஸோமா நீ உனது வழியில் செல்லலாம், காலம் வரும்போது சந்திப்போம்! என்றார். ஸோமனும், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
இப்போது ஸோம அகத்திய மண்டலத்தின் ஒளியில் இருப்பதை உணர்ந்தான். பல யுகங்களுக்கு முன்னர் தான் போகரிடம் மேரு மலை உச்சியில் பெற்ற உபதேசத்தினை குரு நாதர் நினைவு படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொண்டான்.
அகத்தியப்பேரொளி "ஸோமா நீ பல யுகங்களுக்கு முன்னர் பெறவேண்டிய அனைத்தையும் பெற்றுவிட்டாய், உன்னை மனித உடலிற்கு செலுத்தி அகஸ்திய குலத்தை வளர்க்கும் வேலையை நாம் ஒவ்வொரு தடவையும் செய்விக்கிறோம், மனித உடலில் நீ பெறும் உபதேசங்கள் உனது பிறப்பினால் சேரும் அழுக்குகளை சாதனையால் கழுவிக்கொள்ள தேவையான அகத்தூண்டலைத் தருவதற்கு! ஆகவே இந்தத் தெளிவுடன் பூமியில் சென்று உனது சாதனைத் தொடர்ந்து செய்துவா! உனது பணிக்குத் தேவையானது அனைத்து தகுந்த காலத்தில் உனக்கு வந்து சேரும்" என்றார்.
இரவு 1030, சரியாக 0800 மணிக்கு தியானத்தில் அமர்ந்த ஸோமனுக்கு இரண்டரை மணி நேரம் கடந்தது தெரியாமல் போயிருந்தது. தனது சாதனையை முடித்துக்கொண்டு உணவருந்தச் சென்றான்.
யாழ்ப்பாணத்து முயலும் ஈராக் சண்டையும்
ஒரு குட்டிக்கதை! ஒரு ஆழமான உளவியல் விஷயத்தை கதை மூலம் புரிய வைக்கலாம் என்று முயற்சித்துள்ளேன். புரிந்தவர்கள் பதிவிடுங்கள்! உரையாடுவோம்!
யாழ்ப்பாணத்தில் ஒரு முயல் வசித்துவந்தது! கடந்த முப்பத்தைந்து வருடங்களாக யுத்தத்தில் குண்டு வீச்சு விமானச் சத்தத்தைக் கேட்டவுடன் நிலத்திற்கு கீழ் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டிருந்தது.
அந்த முயலைப்போலவே மக்களும் பங்கர் அமைத்து பதுங்கப்பழகியிருந்ததால் முயலிற்கு மனிதர்களும் தம்மைப்போன்றே இருக்கிறார்கள் என்று பெருமிதப்பட்டுக்கொண்டிருந்தது.
இப்படியே பழக்கப்பட்டிருந்த முயல் மெதுவாக யதார்த்தத்தை சிந்திக்கும் பழக்கத்தை இழந்து எப்போது போர்ச்சூழலில் குண்டு விழுந்து விடுமோ என்ற பயத்தில் தன்னைப்பாதுகாத்துக்கொள்ள தனது வலையில் நிறைய கரட்டுகளை (Carrot) சேமித்துப் பாதுகாத்து வந்தது!
இப்படியே பழக்கப்பட்ட மனம் சிறிது காலத்தில் பட்டாசு வெடித்தாலும் குண்டு வெடித்தது என்று எண்ணிப் பயம் கொள்ள ஆரம்பித்தது! இன்னும் தனது வலையினை விட்டு வெளியே வந்து பயம் இன்றி உலாவ மறுத்தது!
இப்போது யுத்தம் முடிந்துவிட்டது! அதன் வசிப்பிடமான வலை இருக்கும் இடத்திற்கு மேல் நல்ல செம்மண்! காணிக்காரன் பூசணித்தோட்டம் போட்டுவிட்டார்! முப்பதாண்டு தோட்டம் செய்யாத மண் என்பதால் நல்ல வளமான மண்! ஒவ்வொரு பூசணியும் பத்து பதினைந்து கிலோ நிறையில் காய்த்திருந்தது! இதற்கு கன்னம் வைத்த கள்ளன் காணிக்காரன் இல்லாத நேரம் பார்த்து பூசணியைப் பிய்த்துக்கொண்டு தோளில் கொண்டு செல்லும் போது காணிக்காரன் வந்து விட்டான்! அவனைக்கண்ட கள்ளன் தடார் என்று தோளிலிருந்த பூசணியை நிலத்தில் போட்டுவிட்டு ஓடிவிட்டான்.
பூசணி விழுந்ததோ முயலின் வலைக்கு மேல்! பூசணி விழுந்த சத்தம் கேட்ட முயலிற்கு யுத்த ஞாபகம் வர தனது யுத்தகால ஞாபகம் விழித்தெழ, ஐயோ குண்டு வெடித்துவிட்டது, நான் சாகப்போகிறேன் என்ற பயத்தில் வலையை விட்டு ஓட ஆரம்பித்தது!
முயல் இருந்த காணி மல்லாகம் சந்தியில் இருந்த எரிபொருள் நிலையத்திற்கு அருகில்! வலையை விட்டு ஓடிவந்த முயலிற்கு கிடைத்தது பேரதிர்ச்சி!
எல்லா மனிதரும் பெற்றோல் நிரப்ப வாகனத்துடன் ரோட்டு நிறையக் காத்திருந்தthaip பார்த்தவுடன் முயலிற்கு பேரதிர்ச்சி!
அங்கிருந்த மனிதன் ஈராக்கில் சண்டையாம்! அமெரிக்காக்காரன் குண்டு போடுகிறானாம்! என்றான்!
இன்னொருவன் ஈராக்கில் இல்லையடா ஈரானில்தான் அமெரிக்கா குண்டு போடுதாம் என்றான்!
அவனை இடைமறித்த புத்திசாலி, இல்லையடா: ஈராக்தான் அமெரிக்காக்காரனுக்கு அடிச்சிட்டானாம் என்றான்!
மல்லாகத்து காணியில் உள்ள தனது வலையைத் தாண்டி அளவெட்டி என்று ஒரு ஊர் மாத்திரம்தான். கேள்விப்பட்ட முயலிற்கோ பெருங்குழப்பம்! ஈராக்கும் ஈரானும் அளவெட்டிக்கு அங்காலதான் இருக்குதுபோல! தனது வலைக்கு மேல் தான் கேட்ட வெடிகுண்டுச் சத்தத்துக்கு ஈராக் - ஈரான் - அமெரிக்ககாரன் தான் காரணம் என்று மேலும் பயந்துகொண்டு, விஷயம் வெகு சீரியஸ் என்று நினைத்துக்கொண்டு இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தது!
ஓடும் ரோட்டெங்கும் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் வாங்க மக்கள் கூட்டம்!
Sunday, January 05, 2020
நோய் குணமாதலும் பூரண ஓய்வும்
உடலில் நோய் குணமாவதற்கு மனம் ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
நோய் என்பது எமது உடல் தனது சமநிலையை இழந்து குறித்த உடல் பாகங்கள் மீளப் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் ஏற்படும் நிலை. நோய் ஏற்படுவதற்குரிய காரணம் நாம் வழமைக்கு மாறாக உடலை தகுந்த ஓய்வு கொடுக்காமல் பழுதாக்கி இருப்போம்.
உடலுக்கு ஓய்வு என்றவுடன் அசையாமல் ஒரு இடத்தில் இருப்பது என்று பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருப்பதால் நோய் நிச்சயம் குணமாகாது.
உடலில் 70-80% சக்தியை உறிஞ்சுவது மூளை. இந்த மூளையை இயக்கும் சூக்ஷ்ம கருவி மனம். ஆக மனம் ஓய்வடையாமல் உடலிற்கு மீளச் சக்தி கிடைக்காது.
நோய் ஏற்பட்டவுடன் பலரும் மருந்து உடலைக் குணப்படுத்துகிறது என்று நினைக்கிறார்கள். உண்மையில் மருந்து நோய்க்காரணிகளை அழித்து உடல் தன்னை மீள கட்டமைத்துக்கொள்ள உடலிற்கு உதவுகிறது.
ஆகவே நோய் குணமாக வேண்டுமென்றால் பூரண ஓய்வு அவசியம். பூரண ஓய்வு என்பது கட்டிலில் படுத்துக்கிடப்பதல்ல!
அழுத்தம், கவலை இல்லாத சந்தோஷமான மனம்! இப்படியான சந்தோஷமான மனதுடன் தினசரி எட்டு மணி நேர உறக்கம் எல்லா நோய்களையும் துரிதமாக குணப்படுத்தும்!
ஏனென்றால் உடலில் மொத்த ஆற்றலில் 70-80% மன அழுத்தம், கவலை போன்றவற்றால் ஏற்படும் இழப்பை சமப்படுத்த மூளை உறிஞ்சிக்கொள்ளும். இப்போ
Saturday, January 04, 2020
Nyungar பழங்குடிகளும் காட்டுத் தீ முகாமைத்துவமும்
மேற்கு அவுஸ்திரேலியாவின் பத்தாயிரம் வருடப் பழங்குடியினரான Nyungar தீயினை சரியாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்!
Cool fire எனப்படும் முறையின் மூலம் கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் காட்டின் தரையிலுள்ள சருகுகளை எரித்து பெரிய தீ ஏற்படுவதற்குரிய சந்தர்ப்பத்தைக் (fuel load) குறைத்து தம்மைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தமது அனுபவ அறிவுடன், இயற்கையுடன் ஒரு சமநிலையில் இருந்ததால் ஆய்வுகளின்படி முற்காலத்தில் இத்தகைய பாரிய நிகழ்வுகள் நடைபெறவில்லை என அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எந்த ஒரு நிலத்தினதும் பழங்குடிகள் அதனை தம்முடன் ஒன்றிய ஒரு பாசத்துடன் (தாயாக, கடவுளாக) மதித்து வாழும் பண்புடையவர்கள்,
தற்போது வந்தேறிகளான ஐரோப்பிய மைய முகாமைத்துவம் இந்த பழம் அறிவினை (Indigenous knowledge) அறியாமை என நக்கலாகப் பார்த்து, எவரும் காட்டை எரிக்கக்கூடாது என்று சட்டம் வந்ததன் பயன் கோடைக்காலத்தில் அதிக சருகுகள் (Fuel load) சேரச் சேர தீ உக்கிரமாவதற்குரிய வாய்ப்பினை அதிகரித்து நிலமை இப்படி வந்திருக்கிறது!
இயற்கை எவரையும் தண்டிப்பதில்லை! இயற்கையின் வழியில் குறுக்கிடுபவரை அது இவர் பெரியவர், சிறியவர் என்றும் பார்ப்பதில்லை! பலனைத் தருவதில் நல்லவர், கெட்டவர் என்று பாகுபாடு காட்டுவதுமில்லை! சூழலியல் பிரச்சனைகளை சிக்கலாக்குவதில் மனித அறிவின் குறைபாடு மிக முக்கிய காரணி!
தலைப்பு இல்லை
உலகத்தின் இன்றைய Hot news! அவுஸ்திரேலிய காட்டுத்தீ!
காட்டுத்தீ தீமையானதா? சூழல் மேல் அக்கறை கொண்டு மரங்கள் அழிகின்றன! வனவிலங்குகள் அழிகின்றன என்று புலம்புகிறோம். இவை எல்லாம் மனித மையப் பார்வை (Human centered view), ஆனால் இயற்கைக்கு என்று ஒரு போக்கு இருக்கிறது. அது சூழலியலாளர்களால் மாத்திரம் அறியப்படுவது. அத்தகைய சூழல் மையக் கருத்தியலில் (Environmental Centered view) இனை பகிர்வதே இந்தச் சிறுகட்டுரையின் நோக்கம்.
காட்டுத்தீ சூழலியல் (Forest fire ecology) கோட்பாடு என்பது இயற்கையாக ஏற்படும் காட்டுத்தீ சூழலியலில் தன்னை சமநிலைப்படுத்திக் கொள்ள இயற்கை வைத்திருக்கும் ஒரு ஏற்பாடு எனக்கூறுகிறது. இயற்கை தன்னை ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கொண்டு செல்ல (Ecological drift) செய்துகொள்ளும் ஏற்பாடு இது,
அவுஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதிக்காடுகள் Tall eucalyptus forest எனப்படும் காட்டு சூழல் வகையைச் சேர்ந்தவை. W. D Jackson எனும் ஆய்வாளர் அவுஸ்ரேலியாவின் காட்டுத்தீ பற்றி ஆராய்ந்து ஒரு கோட்பாட்டினை உருவாகியுள்ளார். இதுபற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம்.
அவுஸ்திரேலிய காட்டுத்தீயின் சிக்கல் தன்மை மூன்று காரணிகளில் தங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
1) பழங்குடிகளின் காட்டுத்தீ முகாமைத்துவத்திலிருந்து ஐரோப்பிய செல்வாக்கு காட்டுத்தீ முகாமைத்துவம் நிலமையைச் சூழலியல் அடிப்படையில் சிக்கலாக்கியிருக்கிறது.
2) சிக்கலான நிலவமைப்புக் காரணிகள்
3) காலநிலை மாற்றம்
இன்றைய நிலவரத்திற்கு மூன்றாவது காரணியாகிய காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட அதிக வெப்பநிலை காரணமாக இருக்க, மற்ற இரு காரணிகளும் நிலவரத்தை சிக்கலாக்கி இருக்கிறது என்றே கொள்ளவேண்டும்.
தலைப்பு இல்லை
படித்த இளைஞர்கள் புலம்பெயரும் கனவுதேசம் அவுஸ்திரேலியா! தென் துருவத்து நிலம் என்று லத்தீன் மொழியில் அழைக்கப்படுவது!
இன்று பற்றி எரிகிறது!
இலங்கை எரியூட்டு படலத்தில் கம்பன் சொன்ன காட்சிகள் கண் முன்னே;
இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும்,
சொல்லின் தீர்ந்தன போல்வன, தொல் உருப்
புல்லிக் கொண்டன-மாயைப் புணர்ப்பு அறக்
கல்லி, தம் இயல்பு எய்தும் கருத்தர்போல். 6
ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய், அடி
தாய் அளந்து, உலகங்கள் தரக் கொள்வான்,
மீ எழுந்த கரியவன் மேனியின்,
போய் எழுந்து பரந்தது-வெம் புகை. 7
நீலம் நின்ற நிறத்தன, கீழ் நிலை
மாலின் வெஞ் சின யானையை மானுவ;
மேல் விழுந்து எரி முற்றும் விழுங்கலால்
தோல் உரிந்து கழன்றன, தோல் எலாம். 8
நந்தவனங்கள் முதலியன வெந்தொழிந்த காட்சி
அகருவும் நறுஞ் சாந்தமும் முதலிய, அனேகம்
புகர் இல் நல் மரத்து உறு வெறி, உலகு எலாம் போர்ப்ப,
பகரும் ஊழியில் கால வெங் கடுங் கனல் பருகும்
மினல் பரந்து எழு கொழுஞ் சுடர் உலகு எலாம் விழுங்கி,
நினைவு அரும் பெருந் திசை உற விரிகின்ற நிலையால்,
சினைப் பரந்து எரி சேர்ந்திலா நின்றவும், சில வெங்
கனல் பரந்தவும், தெரிகில -கற்பகக் கானம். 24
செய் தொடர்க் கன வல்லியும், புரசையும், சிந்தி,
நொய்தின், இட்ட வன் தறி பறித்து, உடல் எரி நுழைய,
மொய் தடச் செவி நிறுத்தி, வால் முதுகினில் முறுக்கி,
கை எடுத்து அழைத்து ஓடின – ஓடை வெங் களி மா. 30
வெருளும் வெம் புகைப் படலையின் மேற்செல வெருவி,
இருளும் வெங் கடல் விழுந்தன, எழுந்தில, பறவை;
மருளின் மீன் கணம் விழுங்கிட, உலந்தன-மனத்து ஓர்
அருள் இல் வஞ்சரைத் தஞ்சம் என்று அடைந்தவர் அனைய. 31
Thursday, January 02, 2020
தலைப்பு இல்லை
ஒன்றை "இப்படித்தான்" செய்ய வேண்டும் என்ற manual கள் எப்போதும் குழப்பத்தைத் தரக்கூடியவை.
இப்படியான manual கள் ஆரம்ப புரிதலுக்கு வெகுவாக துணைபுரியும் என்றாலும் நிபுணத்துவம் (mastery) பெறுவதற்கும், தகுந்த விளைவினைப் பெறுவதற்கும் பெருமளவில் உதவாது. தடையாக இருக்கும்.
ஒன்றைச் செய்து இறுதி இலக்கினை அடைவதற்கு ஒரு வழி மாத்திரம் இருப்பதில்லை! பலவழிகளில் ஒன்றைச் சாதிக்கலாம் என்பதே உண்மை!
நாம் கவனிக்க வேண்டியது தகுந்த விளைவினைப் பெறுவதற்கு நாம் செய்யும் செயல் சரியானதா என்ற சரிபார்த்தலை!
இறுதி அடைவினை (Destination) கற்பனை செய்துகொண்டிருப்பவன் பயணத்தை ஒருபோதும் பூர்த்தி செய்வதில்லை!
journey is far more important than destination
Wednesday, January 01, 2020
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
ஆங்கிலப்புத்தாண்டு ஆங்கிலேயர்களுடையது. தமிழர்கள் கொண்டாடக்கூடாது, சித்திரைதான் எமது புத்தாண்டு என்று ஒரு நண்பர் கேட்கிறார்!
சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டில் சித்திரைதான் தமிழ் புத்தாண்டு!
யாதும் ஊரே யாவரும் கேளீர்தானே தமிழனுக்குரிய வரைவிலக்கணம்! ஆக ஆங்கிலப்புத்தாண்டு, சீனப்புத்தாண்டு, தெலுங்குப் புத்தாண்டு, கன்னடப்புத்தாண்டு எல்லாப்புத்தாண்டும் தமிழருக்குப் புத்தாண்டுதான்!
புத்தாண்டு மகிழ்ச்சியாக இருப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் ஒரு சந்தர்ப்பம்! அந்த நாட்களில் வீண் ஆராய்ச்சியை விட்டுவிட்டு கொண்டாடுவோமா! மகிழ்ச்சியாக இருப்போமா!
தலைப்பு இல்லை
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...