அவன் குருநாதருடன் குரு சேவையில் இருந்த காலத்தில் வித்தைகள் படிப்பதற்கு என்று வகுப்புகள் எதையும் அவர் எடுப்பதில்லை! காலையிலிருந்து மாலை வரை குருவிற்கும், ஆசிரமத்திற்கும் தேவையான உதவிகளைச் செய்வதுதான் ஸோமனின் வேலை! ஆனால் அவனோ தான் ஞானம் பெறவேண்டும் என்ற தாகத்திலிருந்து சற்றும் தனது இலட்சியத்தை தவறவிடுபவனாக இல்லை. அவனது ஆர்வத்தைக் கண்ட குரு அவனது தகுதியை அறிந்து தனது குரு நாதர் கற்பித்த காயத்ரி குப்த விஞ்ஞானம் என்ற பாடத்தொகுப்பினை இரவில் கற்பித்தார். இரவில் குருவுடன் அவரது இல்லத்திலேயே உறங்குவதால் அவரது குரு நாதர் கைப்பட எழுதிய கையெழுத்துப் பிரதிகளை ஸோமனிடம் கொடுத்து அதைப் பிரதி செய்து கற்றுக்கொள்ளும் படி கூறியிருந்தார்.
ஸோமனும் காயத்ரி உபாசனையின் நுணுக்கங்கள் அனைத்தையும் கொண்டிருந்த காயத்ரி குப்த விஞ் ஞானம் பாடங்களை ஒவ்வொன்றாக நுணுக்கமாக கற்றுக்கொண்டு குரு உபதேசித்த வழியில் தினசரி சாதனையை ஒழுங்காக செய்துகொண்டிருந்தான்.
இப்போது ஸோமன் சாதனையில் நன்கு முன்னேறிய இல்லற யோகி ஆகியிருந்தான். அந்தப்பாடங்களை அவன் மீண்டும் மீண்டும் கற்பதை வழக்கமாக்கியிருந்தான். கற்று முடிந்தவுடன் தனது சாதனையறையில் அமர்ந்து தனது புருவமத்தியில் நினைவைக் குவித்து குரு நாதர் அகத்திய மகரிஷியை தியானிக்கத் தொடங்கினான்.
சிறிது நேர தியானத்தில் அவன் அகஸ்திய மண்டலத்தை அடைந்திருந்தான். அங்கு பேரொளி வெள்ளமாக நிறைந்திருந்த அகத்தியமகரிஷியின் ஒளியில் அவன் ஒன்றியிருந்தான். அந்த நிலையில் அவனும் குருவும் வேறு அல்ல! ஆனால் மனம் செயற்படும் போது வேறாக இருப்பதாக உணர்ந்தான்! இப்படி அனுபவத்தில் திளைத்துக்கொண்டு இருக்கும்போதே அந்த ஒளியும் தானும் வேறாகி நிற்பதையும் உணர்ந்து கொள்ளத்தொடங்கும் போது குரு நாதரின் அந்த வார்த்தைகள் ஒலிக்கத்தொடங்கியது.
"ஸோமா, நீ இந்தப்பிறவி எடுத்த நோக்கம் என்னவென்பதைப் புரிந்து கொண்டாயா? உனக்குரிய பணி என்னவென்று தெரிந்ததா? என்றார். அதற்கு குருவே "இன்னும் முழுமையாகப் புரியவில்லை குருவே" என்றான்.
அதற்கு அகஸ்தியப் பேரொளியிலிருந்து வந்த அசரிரி " நீ உனது முற்பிறப்புகளின் தொடர்ச்சியை அறிந்து கொண்டால் இது இலகுவாக இருக்கும், அதை அனுபவமாகவே தருகிறோம், இப்போது நீ போக நாதனிடம் செல்லப்போகிறாய்! போகனிடம் நீ பெறவேண்டிய ஞானம் நிறைய இருக்கிறது, செல்வாய்" என்று ஆசி கூற, ஸோமன் தான் மலையடிவாரத்தில் இருப்பதை அறிந்தான்.
சற்று மேலே பர்ணசாலை இருந்தது. அங்கு பலர் மருந்தரைக்கும் கல்வத்துடன் வேலைபார்த்துக்கொண்டிருந்தார்கள். மெதுவாக மலைமீது ஏறி நன்கு கட்டப்பட்டிருந்த பர்ணசாலையிற்குள் நுழைந்தான். அங்கு நீண்டதாடியுடன் குருவாக, இளமைததும்ப ஒருவர் தியானத்திலிருந்தார். ஸோமன் உள்ளே செல்ல, அன்பான குரலில் "வா ஸோமா!" என்று கண்களைத் திறக்காமல் அழைத்தார். ஸோமனின் நினைவில் குரு நாதர் போக நாதரிடமல்லவா செல்ல உத்தவிட்டார்! நான் இப்போது போக நாதரைத்தான் சந்திக்கிறேனா என்று எண்ண ஓட்டம் செல்ல, அதை உறுதிப்படுத்துவது போல, நீ போகனிடம் தான் வந்திருக்கிறாய் என்றார்! அதைக்கேட்ட ஸோமன் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வணங்கினான்.
அன்புடன் கண்ணை விழித்து போகர், "மகனே, நீ அகத்தியரிடம் எப்படிப் பேருணர்வு பெறுவது என்று கற்றுக்கொண்டு விட்டாய், அவர் உன்னை என்னிடம் அனுப்பியது, நவகோள்களையும் ஈர்த்து உடலின் சக்தியை எப்படி உயர்ந்த சக்தியாக்கி அக இரசவாதம் செய்வது என்ற ஞானத்தினைப் பெறுவதற்கு! இந்த ஞானம் எளிதில் கிடைக்காது! பல சோதனைகளைத் தாண்டி நீ குரு பக்தியில் உறுதியாக இருப்பதை அறிந்தால் மட்டுமே தரப்படும். சலனிக்காத மனதுடன் குரு சேவை செய்வாய், தகுந்த நேரமும், பக்குவமும் வரும்போது சொல்லித்தருவோம்! உனக்கு இங்கிருப்தற்கான வசதிகளைப் பெற எனது மாணவன் நாகன் உதவி செய்வான். நாகன் போகருடன் உடன் வசிப்பவன். ஸோமனை தான் தங்கும் மலைக்குகையிற்கு அழைத்துச் சென்றான். அங்கு ஏறக்குறைய நூறு மாணவர்களுக்கு மேலிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் காட்டில் பச்சிலை பறித்து மருந்தரைக்கும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
ஒரு நாள் திடீரென ஸோமனையும், நாகனையும் அழைத்த போக நாதர் நாம் மூவரும் மேருமலையில் சில சித்தர்களைக் காணச் செல்லப்போகிறோம். தயாராகுங்கள்! நீண்ட நாட்கள் நடந்து பயணிக்க வேண்டியிருக்கும், பயணம் நாளை ஆரம்பமாகும் என்றார். அடுத்த நாள் மூவரும், அவர்களுடைய காவல் நாய் பைரவனுமாக பயணம் ஆரம்பமாகியது. தொடர்ச்சியான மூன்று மாத பயணத்தின் பின்னர் பனி நிறைந்த மேரு மலை அடிவாரத்தை அடைந்தார்கள். இனி செங்குத்தான மலையுச்சிப் பயணம்.
இந்த மூன்று மாதப் பயணத்தில் நாகனைப் பற்றி ஸோமன் சிறிது அபிப்பிராயம் கொண்டிருந்தான். நாகனுக்கு தான் குருவுடன் அதிககாலம், அருகிலேயே இருப்பதால் தான் மற்றவர்களை விடவும் அதிக தகுதியானவன் என்ற எண்ணமிருந்தது. ஆனால் குருவின் நடத்தை மேல் சிறிது சந்தேகம் அவனுக்கு எப்போதும் இருந்தது. தனது குரு தாந்திரீக வித்தையில் பெண்களுடன் சல்லாபம் செய்வதாக மனதிற்குள் எண்ணம் கொண்டிருந்தான். மேலும் இந்த நீண்ட பயணம் வீணான ஒன்று என்று இரகசியமாக ஸோமனது மனதைக் குழப்பிக்கொண்டிருந்தான். ஆனால் ஸோமனுக்கு தனது குரு கூறியபடி போகரிடம் அறியவேண்டியதை அறிவதைத் தவிர வேறு எந்த எண்ணமும் ஓடவில்லை. இப்படி நாகனின் இந்தக்குழப்பத்தினை அறிந்திருந்தாலும் ஸோமன் அதைப்பற்றிப் பெரிதாக மனதில் எடுத்துக்கொள்ளாமல் குருவைப் பின்பற்றி தனது பயணத்தைத் தொடர்ந்திருந்தான்.
இப்போதும் குருவும் சீடருமாக மூவரும், அவர்களுடன் பயணித்த நாயுமாக நால்வரும் மேருமலை அடிவாரத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். மலையேறுவதற்கு முன்னர் போக நாதர் தனது கைப்பையில் இருந்து நான்கு குளிகைகளை எடுத்து, நாகனுக்கும், ஸோமனுக்கும் கொடுத்து, நாம் இப்போது பூமி வானிலிருந்து ஆற்றலகளை ஈர்க்கும் மேருமலையின் மீது ஏறப்போகிறோம், அந்த ஆற்றலைத்தாங்குவதற்கு தகுந்தபடி எமது நாடிகளின் பிராண ஓட்டத்தை சீர்படுத்தும் இந்தக்குளிகைகளை அருந்திவிட்டு மேலே நடப்போம் என்றவாறு நாயிற்கும் ஒரு குளிகையை வாயில் வைத்து தானும் அருந்திவிட்டு போகர் மலையேறத்தொடங்கி விட்டார். நாயும் பின்னால் செல்ல, ஸோமனும் அருந்திவிட்டு நடக்கத்தொடங்கினான்!
சற்று நேரத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த போகர் தடார் என்று மயங்கிச் சாய்ந்தார். அடுத்து நாயும் மயங்கி விழ, ஸோமனுக்கு தலை கிறுகிறுத்து சுற்றியது. கண்கள் இருளத்தொடங்கியது. நாகன் திடமாக இருந்துகொண்டிருந்தான். அப்படியே மயங்கி விழுந்துகொண்டிருக்க, நாகனின் புலம்பர் காதில் ஒலித்துக்கொண்டு இருந்தது. கண்களை விழித்துப் பார்க்கும் போது புன்சிரிப்புடன் போகரும், நாயும் நின்று கொண்டிருந்தது. நாகனைக் காணவில்லை. இப்போது ஸோமனுக்கு உடல் பத்துமடங்கு பலம் பெற்றது போன்ற உற்சாகம் காணப்பட்டது.
புறப்படலாமா ஸோமா, என்றார் போக நாதர், சரி குருவே என்று வழமையைப்போல கேள்வி எதுவும் கேட்காமல் நடக்கத்தொடங்கினான். அவனது மனதிற்குள் நாகன் எங்கே சென்றான் என்ற கேள்வி எழுந்துகொண்டிருந்தது.
சற்றுத்தூரம் செல்லும் போது, போகர் "மகனே, நாம் உயர்ந்த ஆற்றலினைப் பெறுவதற்கு சரணாகதி தேவை! மனதினைப் பயன்படுத்தி தன்னைக் குழப்பிக்கொள்பவன் உயர்ந்த ஆற்றலைப் பெற தகுதியற்றவன், மனம் எந்தக் குழப்பமும் இல்லாமல் சலனமற்று இருந்தால் தான் நாம் இப்போது மேருவின் உச்சியில் சென்று செய்யப்போகும் சாதனையில் வெற்றி பெறமுடியும்" ஆகவே எல்லா எண்ணங்களையும் விட்டு விட்டு பயணத்தில் கவனம் வை! சிறிது நேரத்தில் மேருவின் உச்சியை அடையப்போகிறோம், அங்கு உனது மனம் நான் சொல்வதை ஏற்கும் பக்குவத்தில், ஏற்பு நிலையில் இருக்க வேண்டும்" என்றார். அதைக் கேட்ட அந்தக்கணத்திலேயே நாகனைப் பற்றிய சிந்தனையை விட்டொழித்து விட்டு குருவின் பாதச்சுவட்டினை பின்பற்றி செல்லத்தொடங்கினான்.
சிறிது நேரத்தில் உச்சியை அடையும் போது இருட்டி நிலா உதயமாகியிருந்தது. பசி, தாகம் எதுவும் ஏற்படவில்லை. போகர் அமைதியாக வானை நோக்கி கண்களைச் செலுத்தி தியானத்தில் இருந்தார். அவருக்கு அருகில் ஸோமன் அமர்ந்துகொண்டான்.
சிறிது நேரத்தில் கண்விழித்த போகர், குழந்தாய் உனது அப்பழுக்கற்ற குருபக்தியாலும், சித்த சுத்தியாலும் இந்த உயர்ந்த இரகசியத்தை உனக்கு உபதேசிக்கப்போகிறேன், அண்டத்தில் உள்ள சூரிய, சந்திர, அக்னி கலைகளையும், பிரம்மா, விஷ்ணு, ருத்திர, மகேஸ்வர, சதாசிவ கலைகளையும் உடலில் இருத்தி, பின்னர் அம்ருத கலையான தாய்சக்தியை உடலில் ஏற்கும் முறையைச் சொல்லித்தருகிறேன், இதற்கு நீ நவகோள்களை முதலில் உடலில் ஈர்த்து சேர்க்கும் முறையினை சொல்லித்தருகிறேன், அதைக் குறித்த காலம் பயிற்சித்து பின்னர் அம்ருத கலைப் பயிற்சியினைச் செய்யலாம், உனக்கு இங்கிருந்து கீழிறங்கும் வரை உடலில் எந்தச் சோர்வும், பசியும், நித்திரையும் வராது! காலம் நகர்வதை மனம் உணராது! ஆகவே இங்கு நான் உபதேசிப்பதை உனது சித்தத்தில் ஆழமாகப் பதிப்பித்துக் கொள்! என்றார்!
சலனமற்ற சித்தத்தினைக் கொண்டிருந்த ஸோமனின் சூக்ஷ்ம, காரண சரீரத்தில் போகர் தாய்சக்தியான புவனேஸ்வரியின் ஆற்றலினைப் பாய்ச்சினார்! எவ்வளவு காலம் சென்றது என்பதை அறியாமல் குரு கூறித்தந்த பயிற்சியினை இடைவிடாமல் பயிற்சித்தான். நாட்கள் நகருவதை அறியாமல் கண்களை மூடி சமாதி நிலையில் இருந்தான்.
திடீரென சிரசில் கைகள் வைக்கப்பட்டு ஆற்றல் இறங்குவது உணர, கண்விழித்தான் ஸோமன். பயிற்சி முடிந்தது இறங்குவோம் வா என்று கூற போக நாதரை வணங்கி மூவருமாக இறங்கத்தொடங்கினர்.
இப்போது ஸோமன் புதுவித உணர்வு நிலையை அடைந்திருந்தான். மனம் அவனது கட்டுப்பாட்டில் இருந்தது. எதை எண்ணினாலும் அதைப்பற்றி பூரணமான விளக்கம் அவனது மனதில் விளக்கமாகத் தோன்றியது.
கீழறங்கும் போது, போகர், ஸோமா, நீ பெற்றுக்கொண்ட சாதனை மூலம் வரும் ஆற்றலை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி எமது குரு நாதர் அகஸ்திய மகரிஷியிடம் விளக்கமான அறிவுரை பெற்றுக்கொள்! உனக்குரிய எனது கடமை முடிந்தது! நீ உனது சாதனையைத் தொடர வேண்டும்! இத்தகைய ஆற்றல்கள் மனித குலத்தை மேம்படுத்தும் எண்ணம் கொண்ட சித்தர் கணங்களுக்கு மட்டுமே தரப்படுவது! சுய நலமும், பேராசையும், ஆசையும் கொண்ட மனிதர்களுக்கு இது தரப்படுவதில்லை! என்னுடன் சிறிதுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும்! நாகன் இணைந்து கொள்வான், அதன் பின்னர் நீ உனது வழியில் செல்லலாம் என்றார்!
நாகன் இணைந்து கொள்வான் என்பதைக் கேட்ட ஸோமனுக்கு ஆச்சரியம், அவனுக்கு என்ன நடந்தது என்பதைக் கேட்கும் எண்ணம் அவனுக்கு ஏற்படவில்லை. இதை நினைத்துக்கொண்டு இருக்கும் போது, போகர் " ஸோமா குரு அனைவரிற்கும் கருணையை சமமாகத் தருபவர், மேருமலையைக் கடப்பதற்குரிய பிராணசக்திக் குளிகையை இந்த நாய் உட்பட மூவருக்கும் நான் சமமாகத் தந்தேன், நீ எந்த எண்ணமும் இல்லாமல் அருந்திவிட்டாய்! நாகனுக்கு இயல்பாக இருக்கும் சந்தேகமும், குழப்பமும் அவனைப் பயம் கொள்ள வைத்தது! குளிகையின் ஆற்றல் உடலில் விழிப்படைந்தவுடன் மூளையை அது ஓய்விற்கு கொண்டுவர மயக்கத்தை ஏற்படுத்தும், அதனைப் புரிந்து கொள்ளாமல் தான் இறந்து விடுவோம் என்றபயத்தில் அவன் குளிகையை உட்கொள்ளவில்லை. நாம் இறந்து விட்டோம் என்று ஓடி விட்டான், இப்போது மலையடிவாரத்தில் உள்ள கிராமத்தில் இருக்கிறான். பார்த்தாயா! மேருமலை உச்சியில் உன்னுடன் உயர்ந்த இரகசிய ஞானத்தினை அறியும் வாய்ப்பினை தனது சித்த சுத்தி இன்மையால் இழந்து விட்டான்! இவனைப்போல் பலரும் பல்லாண்டுகாலம் குருவைச் சுற்றி இருந்தாலும் தமது அறியாமையினால் குருவிடமிருந்து எதையும் பெறுவதில்லை! நீ அவனைக் காணும் போது உன்னைத் துருவித்துருவி என்ன நடந்தது என்று கேட்பான், நீ உயந்த தீஷை பெற்றுவிட்டதாக அவனிடமோ, வேறு எவரிடமோ சொல்லிவிடாதே! உனது சாதனையில் மாத்திரம் கவனமாக இரு! உனது குருபக்தியும், சித்த சுத்தியும் உன்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது, நாகனிடம் என்மேல் இருக்கும் பக்தியின் அளவிற்கு சித்த சுத்தி இல்லாததால் இவ்வளவு தூரம் வந்தும் இந்த வாய்ப்பினை நழுவவிட்டுவிட்டான்! என்றார்!
ஸோமன் தனது மனதிற்குள் " நாகன் உயர்ந்த நிலை பெறவேண்டும்" என்று எண்ணிக்கொள்ள, அதை அறிந்துகொண்ட போக நாதர் "ஆம் இந்த எண்ணம்தான் சித்த சுத்தியின் பிரதிபலிப்பு" என்றார். ஸோமனின் மனதோ பூரிப்போ, சந்தோஷமோ, கவலையோ இன்றி ஆழ்ந்த நீர் நிலை போல் தெளிந்திருந்தது.
மலையடிவாரக் கிராமத்தை அடைந்தவுடன் அங்கு நாகன் ஒரு வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்தான். இருவரையும் கண்டவுடன் ஓ என்று தேம்பி அழுதுகொண்டு ஓடி வந்து குருவின் காலைப் பிடித்துக்கொண்டான். மன்னித்துவிடுங்கள் குருவே, நீங்கள் அனைவரும் இறந்து விட்டீர்கள் என்று பயத்தில் ஓடி வந்துவிட்டேன் என்றார். போகரோ புன்சிரிப்புடன், ஒன்றும் நடக்காதது போல், சரி நாம் போகலாம் நாகா, ஸோமா நீ உனது வழியில் செல்லலாம், காலம் வரும்போது சந்திப்போம்! என்றார். ஸோமனும், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
இப்போது ஸோம அகத்திய மண்டலத்தின் ஒளியில் இருப்பதை உணர்ந்தான். பல யுகங்களுக்கு முன்னர் தான் போகரிடம் மேரு மலை உச்சியில் பெற்ற உபதேசத்தினை குரு நாதர் நினைவு படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொண்டான்.
அகத்தியப்பேரொளி "ஸோமா நீ பல யுகங்களுக்கு முன்னர் பெறவேண்டிய அனைத்தையும் பெற்றுவிட்டாய், உன்னை மனித உடலிற்கு செலுத்தி அகஸ்திய குலத்தை வளர்க்கும் வேலையை நாம் ஒவ்வொரு தடவையும் செய்விக்கிறோம், மனித உடலில் நீ பெறும் உபதேசங்கள் உனது பிறப்பினால் சேரும் அழுக்குகளை சாதனையால் கழுவிக்கொள்ள தேவையான அகத்தூண்டலைத் தருவதற்கு! ஆகவே இந்தத் தெளிவுடன் பூமியில் சென்று உனது சாதனைத் தொடர்ந்து செய்துவா! உனது பணிக்குத் தேவையானது அனைத்து தகுந்த காலத்தில் உனக்கு வந்து சேரும்" என்றார்.
இரவு 1030, சரியாக 0800 மணிக்கு தியானத்தில் அமர்ந்த ஸோமனுக்கு இரண்டரை மணி நேரம் கடந்தது தெரியாமல் போயிருந்தது. தனது சாதனையை முடித்துக்கொண்டு உணவருந்தச் சென்றான்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.