இன்று பலரும் சித்தர்கள் இப்படிக்கூறியுள்ளார்கள், அப்படிக் கூறியுள்ளார்கள் என்று ஆள் ஆளுக்கு பதிவு போட்டுக் கொண்டு தகவல் களஞ்சியமாக மாறிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் அனேகமானவை எவராவது எழுதுவதை கண்மண் தெரியாமல் பிரதி செய்து போடுவது.
இப்படி மற்றொருவர் கூறியதை தகவலாக பகிர்ந்துக் கொண்டு இருக்காமல் நாம் இந்த சமூகத்திற்கு பிரயோசனமாக ஏதாவது செய்ய விரும்பினால் அர்ப்பணிப்புடன் ஏதாவது ஒரு சித்தரின் நூலை எடுத்து ஆழமாக கற்று, அதில் கூறிய பயிற்சிகளை அனுபவமாக கண்டு, தமது அனுபவத்துடன் விளங்க கூறுவது உபயோகமானது.
மேலும் கருத்துக் கூறும் போது ஆழமாக கற்றபின்னர் கருத்துக் கூறுவதும், தமது அனுபவத்தினூடாக கருத்துக் கூறுவதும் அந்த துறைக்கு நன்மை பயப்பவை!
அதீத நம்பிக்கையின் அடிப்படையிலும், யதார்த்த மனதிற்கு ஒவ்வாத விதத்திலும், சுய அனுபவம் இன்றியும் கூறப்படும் கருத்துக்கள் அந்தத் துறையை வளரவிடாமல் தடுத்து விடும்.
இன்று சித்த மருத்துவத்தில் இத்தகைய ஒரு பிளவு நிலை காணப்படுகிறது. BSMS படித்த பட்டதாரிகள் சித்த மருத்துவத்தின் அடிப்படையை அதன் சூக்ஷ்மத் தன்மையினையும் தத்துவங்களையும் புரிந்து கொள்ளாமல் அவற்றை நவீன ஆய்விற்கு உட்படுத்தித்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மல்லுக்கட்டிக் கொண்டு இருக்க, அடுத்த பக்கம் நாம் சித்தர் பரம்பரை என்று மனம்போன போக்கில் அந்த சித்தர் சொன்னார் இந்தச் சித்தர் சொன்னார், என்று ஒரு கூட்டம் கருத்து வீசிக் கொண்டு இருக்க, கடைசியில் நான் பெரிதா நீ பெரிதா என்ற விவாதத்தில் ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாமல் காலம் கழிந்து கொண்டு போகும்.
சித்த மருத்துவத்தின் வேர்களைப் புரிய அது எழுதப்பட்ட தமிழ் மொழியின் நுணுக்கங்கள் புரிய வேண்டும், தமிழ் மொழியின் நுணுக்கம் புரிந்தாலும் அவை பிரயோகிக்கப்பட்ட நிலையின் குழூஉக் குறி தெரியவேண்டும், குழூஉக்குறி தெரிந்தாலும் பின்னர் காலத்திற்கு ஏற்ப எப்படி அதை பிரயோகிக்க வேண்டும் என்ற அனுபவ அறிவு வேண்டும், இந்த அனுபவ அறிவு வந்தால் அது இக்காலத்து நவீன அறிவியலில் எங்கு பொருந்துகிறது, எங்கு பொருந்தவில்லை என்ற நுண்ணறிவினால் ஆய்தல் வேண்டும். இப்படி ஒரு முறைப்படுத்தப்பட்ட பலரின் ஒருங்கிணைந்த உழைப்புத்தான் அந்தத் துறையை முன்னேற்றும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.