ஒரு சூழலியலாளனாக ஆய்வுகளை மேற்கொள்ளும் காலத்தில் நாம் அவதானித்த ஒன்று அருகில் குளம் குட்டைகள் இருந்தால் மக்கள் அதை உடனடியாக குப்பைத் தொட்டி ஆக்கிவிடுகிறார்கள் என்பது. இதற்கான உளவியல் காரணம் என்ன என்பது பற்றி ஆராயும் போது குருவிடம் வரும் சிஷ்யர்களது மன நிலைக்கும் இதற்கும் தொடர்பிருப்பது புலனாகியது.
குளம் குட்டைகள் என்பதன் உண்மையான தேவை மேலதிகமாக வரும் மழை நீரை தேக்கி, பின்னர் மெதுவாக நிலத்தடி நீரின் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வது. குளம் இருப்பின் எமது வீட்டுக் கிணற்றில் கட்டாயம் நீர் இருக்கும். ஆகவே குளத்தின் தேவை எம்மை போசிப்பதற்கான ஒரு கட்டமைப்பு. ஆகவே எமது வாழ்க்கைக்கு துணைபுரியும் இயற்கையின் கூறினை தெய்வத் தன்மையாக பார்க்க குளத்தை அசுத்தப்படுத்தாமல் இருக்க குளத்தருகே கோவில் கட்டி காவல் தெய்வங்களையும் ஏற்படுத்தி வைத்தார்கள். ஆனால் இன்றைய மனிதனுக்கு எதையும் நோண்டிப்பார்க்கும் ஆர்வம் இருக்கிறதே அன்றி புரிவதற்கு பொறுமை இல்லை. குளம் இருக்கும் இடத்தில் மண்ணை நிரப்பி நிலமாக்கினால் நல்ல விலை போகும் என்ற எண்ணமே இன்றைய மனிதனின் நிலை. இந்த மனித மன நிலையுடன் குளத்தில் குப்பையை கொட்டுகிறான்.
இதைப் போலவே குருவிடம் வரும் அனேகர் குருவின் ஞான சாகரத்திலிருந்து துளித்துளியாக, பெரும் குளத்திலிருந்து கிணறு நீரூற்றினைப் பெறுவது போன்று கருதாமல், குருவிடம் வந்து தமது மனப்பிரச்சனை, வாழ்க்கைப்பிரச்சனைகளை கொட்டி குளத்தை அசுத்தம் செய்யும் வேலையினையே செய்கிறார்கள். குருவிடம் உள்ள ஞானத்தினை துளியாக பெற்று, பெற்ற துளியை மனம் என்ற குடத்தில் சேர்த்து, அதை ஒழுங்கு என்ற நெருப்பில் காய்ச்சி தம்மை உயர்த்தாமல் பிரச்சனைக்கு உடனடித்தீர்வு வேண்டும் என்று தமது குப்பையை கொட்டுகிறார்கள்.
ஆக குளத்தில் குப்பையை கொட்டுவது, குருவிடம் வந்து ஞானத்தையும், மனவலிமையை பெறும் சாதனையை குரு காட்டிய வழியை பின்பற்றாமல் இருப்பதும் அடிப்படையில் ஒரே மன நிலை தான்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.