யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
பொருள்
எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
உலகைக் கணித்துப் பார்த்து யாதும் ஊரே என்றார்.
மக்களைக் கணித்துப் பார்த்து யாவரும் கேளிர் என்றார்.
நன்மை தீமைகளைக் கணித்துப் பார்த்து அவை பிறர் தர வாரா என்றார்.
சாதலைக் கணித்துப் பார்த்து அது புதிதன்று என்றார்.
வாழ்தலைக் கணித்துப் பார்த்து அது பிறவியால் வந்தது என்றார்.
பிறந்ததால் வரும் வாழ்க்கையில் வரும் இன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை இனிது என மகிழக் கூடாது என்றார்.
வாழ்க்கையில் வரும் துன்பத்தைக் கணித்துப் பார்த்து அதனை முனிந்து வாழ்க்கையே இன்னாது(துன்ப மயமானது) என வெறுக்கக் கூடாது என்றார்.
பிறவியைக் கணித்துப் பார்த்து அது மின்னல் போன்றது என்றார். மின்னல் எப்போதாவது எங்கோ மழை பொழிவது போன்றது என்றார்.
வாழ்க்கையைக் கணித்துப் பார்த்து அது மல்லல் பேர் யாறு போன்றது என்றார். (வளமான பெரிய ஆற்று நீரோட்டம் பள்ளத்தை நோக்கி ஓடுவது போலச் சாவை நோக்கி ஓடும் - என்பதைப் பிறிது மொழிதல் அணியின் பாற்படுத்து உய்த்துணர வைத்தார்)
வாழ்க்கையில் எதிர்ப்புகள் இருப்பதைக் கணித்துப் பார்த்து ஆறு பாறைகளில் மோதிக் கொண்டு ஓடுவதை எண்ணிப் பாரக்கும்படி நம்மைத் தூண்டினார்.
நமது உயிரோட்டத்தைக் கணித்துப் பார்த்து ஆற்று நீரோட்டத்தில் செல்லும் புணை போன்றது என்றார். (ஊழ் = 'முறை' என்பது ஆற்று நீரின் ஓட்டம். முயற்சி என்பது உயிர் படகைச் செலுத்தும் துடுப்பு)
இந்த உலகியல் உண்மைகளைத் (பொருண்மொழிக் காஞ்சியைத்) திற
http://www.tamilvu.org/slet/l1281/l1281per.jsp?sno=192...