யோக சூத்திரத்தின் முதலாவது சூத்திரம் யோகம் என்பது ஒழுக்கம் என்று குறிப்பிட்டது. ஒழுக்கம் என்பது ஒழுங்கு முறைக்கு உட்பட்டு செயற்படும் செயற்பாடாகும். ஏன் இந்தப்பிரபஞ்சமே ஓர் ஒழுங்கு முறைக்கு உட்பட்டே செயற்படுகிறது, இந்த செயன் முறையிலிருந்து மாறுபட்டதாலேயே மனிதன் தனது உண்மையான நிலையைனை மறந்துபோனான். அதனைத் திரும்பிப் பெற ஒழுகவேண்டிய செயன்முறையே யோகம்.
எந்த ஒரு காரியத்தினை செய்யவேண்டுமானாலும் அதனை ஒரு ஒழுங்குமுறைப்படியே செய்யவேண்டும் என்பது அனைவரும் அறிவர். சோறு சமைக்கவேண்டுமானால் அரிசியை கழுவவேண்டும், அடுப்பில் நீரை ஏற்றி கொதிக்க விடவேண்டும், கொதித்து வரும் போது அரிசியை இடவேண்டும், பின்னர் சரியான பதத்தில் நெருப்பை நிறுத்தி எடுக்க வேண்டும், இதை ஒழுங்கான முறைப்படி செய்தால்தான் ருசியான் சோறு கிடைக்கும்.
அதுபோல் மனதினை, உடலினை, பிராணனை சரியான முறையில் பக்குவப்படுத்தி அவற்றை வலுப்படுத்தி பின்னர் அவற்றிலிருந்து ஆன்மாவினைப் பிரித்து, விழிப்புணர்வினை அடைந்து அதன் மூலம் இறைவனை அடையும் ஒழுங்கு முறையான செய்கையே யோகம். இந்த ஒழுக்க முறைகளின் தொகுப்பே யோக சூத்திரம். இவற்றின் விரிவு பற்றி மற்றைய சூத்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
பதஞ்சலியார் தனது அடுத்த சூத்திரத்தில் யோகத்தில் செய்யவேண்டிய செயற்பாட்டினை முதலாவது சூத்திரத்தில் கூறுகிறார்;
"சித்த விருத்தி நிரோத" "சித்தத்தின் விருத்தியினை நிரோதித்தலே யோகம்" (02)
இந்த சூத்திரம் பொருள் கொள்ளப்படும் விதம் சற்று சிக்கலானது, சுவாமி விவேகானந்தல் உட்பட பெரும்பாலான உரையாளர்கள் சித்தம் என்பதனை மனம் எனவே பொருள் கொள்கின்றனர். இது சரியல்ல என்பது எமது குருபரம்பரையினரின் கருத்து, ஏனெனில் மனம் வேறு சித்தம் வேறு என்பதனை குருநாதர் அகஸ்தியரே தனது பாடலில் கூறியுள்ளார்;
"மனந்தானே புத்தியாங் காரஞ்சித்தம், மதியிரவி யண்டபிண்ட மானவாறும்"
அகத்தியர் ஞானம் 30 பாடல் 07,
பொதுவாக மனம் என்பது புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கினையும் குறிப்பிட்டுச் சொல்லும் பொதுச் சொல். இந்த நான்கு பிரிவுகளும் அந்தக்கரணங்கள் எனப்படும்.
இவற்றில் மனம் என்பது மேல்மனம், அதாவது மனிதனில் சதா செயற்பட்டுக்கொண்டு, இது என்ன? அது என்ன? என ஆராய்ந்துகொண்டிருக்கும் இயக்க கூறு.
புத்தி என்பது எது சரி, எது பிழை என ஆராயும் கூறு.
சித்தம் என்பது புலன்களால் பெறும் பதிவுகளை சேமித்து வைக்கும் ஆழ்மனத்தினை குறிக்கும்.
அஹங்காரம் என்பது மேற்கூறிய மூன்றும் செயற்படத்தேவையான மையமாகும். இந்த மையத்தினை எப்படி வடிவமைக்கின்றீர்களோ அதன் படிதான் மற்றைய மூன்றும் உருப்பெறும். அதாவது நான் நல்லவன் என்ற அகங்கார மையத்தில் இருந்தீர்களானால் அதன்படியே உங்கள் சித்தம், புத்தி, மெல்மனம் என்ற மூன்றும் செயற்படும். அதேபோல் மறுதலையாக இந்த மூன்றினூடாகவே அகக்கார மையம் உருப்பெறுகிறது. அதாவது மேல்மனம் பெறும் அனுபவங்கள் புத்தி மூலம் ஆராயப்பட்டு சித்தத்தில் பதியப்பட்டே "நான் நல்லவன்" என்ற அகங்காரம் உருவாகிறது.
இப்படி பல அகங்காரங்களை உருவாக்கி, உருவாக்கி இறுதியாக எமது உண்மையான நான் ஆன்மா எனும் மையத்திலிருந்து விலகி இப்படியான போலியான நானிற்கு வந்து விட்டோம். இதுபற்றி நாம் இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளோம், படித்துப் பார்க்கவும்.
இப்போது இந்த போலியான மையத்திலிருந்து உண்மையான மையத்திற்கு பயணிக்கப்போகும் பயணமே யோகம். இந்தப்பயணத்தில் எமக்கு போலியான மையத்தினை உருவாக்கிய இந்த நான்கு பகுதிகளையும் தூய்மைப்படுத்தி சரியான மையத்தினை அடையும் வழியாக ஆக்க வேண்டிய செயல்முறையே யோகமாக இருக்க பதஞ்சலியாம் முதலாவதாக கூறுவது சித்தமாகிய ஆழ்மனதின் விருத்திகளை நிறுத்து என்று!
பதஞ்சலி மனதினை பற்றி முழுமையாக கூறியுள்ளார், ஆனால் சூத்திரங்களாகவே கூறியுள்ளார். சூத்திரங்கள் சுருக்கமாக ஆனால் முழுமையாக உரைக்கும் வல்லமை உடைய குறிச் சொற்கள். அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் அது கூறவரும் பொருளைப்பற்றி ஆழமாக உரைக்கும்.
யோகத்தின் முதல் படி மனதின் விருத்தியினை தடை செய்யவேண்டும் எனக் கூறவில்லை. ஏனெனில் மனம் என்பது நான்கு உட்பிரிவுகளுடையது என்பதனை பதஞ்சலியார் நன்கே அறிந்தவர், அவற்றில் சித்தம் தவிர்ந்த மற்றைய மூன்றினது விருத்தியினை தடை செய்ய இயலாது, ஏனெனில் அவை மூன்றும் இருப்பிற்கு அவசியமானது. சித்தம் ஒன்றே பதிவுகளை சேகரிக்கும் பகுதி அதனை ஒழுங்கு படுத்துவதே முதன்மையான செயல் என்பதாலேயே சித்த விருத்தி நிரோத என்றார்.
இதனைப் பற்றி மேலும் விபரமாக அடுத்த பதிவில் பார்ப்போம்!
அருமையான விளக்கம். குறிப்பாய் மனம்,சித்தம்,புத்தி,அகங்காரம் பற்றி விளக்கம் நச்சென்று இருக்கிறது.
ReplyDeleteவிவேகானந்தர் முதலியவர்களுக்கு மேல்மனம்,ஆழ்மனம் என்பது இரண்டுமே ஒன்றான நிலை இருந்திருக்கலாம்.அதாவது அதிக மனப்பதிவுகள் கொண்ட ஆழ்மனம் என்பது இல்லாமலிருக்கலாம். அடக்கிவைக்கப்பட்டவை (பலபிறவிகளில்) ஆழ்மனமாக உருக்கொண்டிருக்கிறது. இதைத்தான் சித்தம் என்று சொல்வது சரியான பதம். நீங்கள் சொன்னமாதிரி...
J.கிருட்டிணமூர்த்தி மேல்மனம் என்னவோ அதே குப்பைதான் ஆழ்மனமும்.அதனால் இந்த பிரிவே உன்மனதில் உள்ள ஒரு எண்ணம்தான்.அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. மேல்மனமும் கடந்தகாலம்.ஆழ்மனமும் இறந்தகாலம்.பிறகெதுக்கு பிரிவு என்பார்.இந்த பொருளில் விவேகானந்தரும் குறிப்பிட்டிருக்கலாம்.
ஆனால் சித்தர்கள் ஆழ்மனதையே சித்தம் என்றார்கள். நாம் இப்போது பழைய சித்தர் நூல்களை வாசிக்கையில் இப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும்.எனக்கும் முதலில் இந்த குழப்பம் இருந்தது. நல்ல பதிவு. நன்றிகள்
நன்றி
ReplyDelete