யோகம் என்றால் என்ன? (பதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்- 02)


யோகம் என்றால் என்ன பொருள்? இன்றை நிலையில் யோகம் என்றால் ஆசனம், பிரணாயாமம் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. இது இன்றைய நிலை, சற்றே சமஸ்கிருத பொருள் அறிந்தவர்கள் இணைதல், ஒன்றாதல் என்று பொருள் கொள்வர், அதாவது இறைவனுடன் இணையும் செயல்முறையே யோகம் எனப்படும். இதுவே சரியான பொருளும் ஆகும். சரி இறைவனுடன் இணைவதுதான் யோகம் என்றால்? எப்படி இணைவது? அதற்கான பயிற்சிகளின், விளக்கங்களின் தொகுப்பே யோக சூத்திரங்கள். 

இறைவனுடன் "நான்" இணையவேண்டுமானால் "நான்" யார்? என்பதனை சரியாக தெரிந்துகொள்ள வேண்டும். நான் என்பது கொள்கை அளவில் "ஆன்மா" எனத்தெரிந்திருந்தாலும் அதை எப்படி செயல்முறையில் தெரிந்துகொள்வது? அதற்கு என்னை சூழ என்ன என்னவெல்லாம் இருக்கிறது என்பதனை தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டுமல்லவா? நீங்கள் ஒரு ஊரில் பிறந்தீர்கள், உங்களை யாரோ கடத்திக்கொண்டு வந்து இருட்டறையில் அடைத்து வைத்துள்ளார்கள், இப்போது நீங்கள் தப்பி உங்கள் இருப்பிடத்தை அடைய வேண்டும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முயல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், இந்த நிலைதான் மனிதப்பிறப்பெடுத்து யோகம் பயின்று சாதனை புரிந்து இறைவனை அடைய விரும்பும் இறை சாதகனின் நிலை. 

பரமான்மாவிடம் ஒன்றாக இருந்த எமது ஆன்மா மாயை எனும் கடத்தல்காரனால் கடத்தி வரப்பட்டு உடல், பூமி என்ற சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றோம். இந்த நிலையில் இருந்து மீண்டு பரமான்ம செரூபம் அடைதலே யோகத்தின் இலக்கு. இது ஒரு மீளும் பயணத்திற்கான போர், இந்த போரில் என்ன செய்யவேண்டும்? எப்படி திட்டமிடவேண்டும் என்ற தந்திரமே உண்மையான யோகம். இதில் ஒரு அங்கமாக உடலையும், பிராணனையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செயல்முறைதான் இன்று யோகம் எனப்படுகிறது. ஆனால் இந்த யுத்தம் நிகழும் தளமான மனதினைப்பற்றி கற்பிக்கும் குருமாரும் குறைவு, ஆராயும் மாணவரும் இல்லை. 

சரி யோகம் யாருக்கு உரியது? ஏனெனில் முதலாவது சூத்திரத்திலேயே பதஞ்சலியார் 

"அத யோகானுசாஸனம்" - இப்போது யோக ஒழுங்கு முறை (01)

என்கிறார். இந்த சூத்திரம் யோகம் என்பதற்கான தகுதி, வரையறை என்பவற்றை ஒரே வரியில் கூறி விடுகிறது. 

இப்போது என்ற சொல் ஒருவன் குறித்த நிலையினை அடைந்திருக்க வேண்டும் என்பதனை குறிக்கிறது, 

இரண்டாவது சொல் யோகம் எந்த நிலை தகுதியை அடைந்து இருக்க வேண்டும் என்பதனை விளக்குகிறது. அது எது என்றால் யோகம் என்ற பரமான்மாவுடன் இணைய விரும்பும் நிலையினை தகுதியினை அடைந்திருத்தல் வேண்டும். இந்த நிலை எப்படி வரும் என்பதனை மூன்றாவது சொல் விளக்குகிறது, அது ஒழுங்கு முறை (Discipline). 

அதாவது ஒருவன் தான் இந்த உலகு மாயையினால் ஆக்கப்பட்டுள்ளது, தனக்கு மேல் அறியவேண்டிய நிலை ஒன்று உள்ளது என்ற நிலையினை அடையும் போதே யோகம் கற்கும் தகுதியினை அடைகிறான். அதனை சரியாக அடைவதற்குரிய மார்க்கம் ஒழுங்கு முறையாகும் (Discipline) என்பதனை இரத்தினச் சுருக்கமாக கூறிவிட்டார். 

இதுவே யோகம் கற்பதற்கான மன நிலையாகும், ஆனால் இன்று பரிதாபம் இரத்த அழுத்தம், மன அழுத்தம் இருந்தால் யோகா கற்க வாருங்கள் என்று குருமார் விளம்பரம் செய்கிறார்கள். யோகம் என்பது சிகிச்சை மட்டும் என்ற மன நிலைக்கு மக்களை தள்ளிவிட்டனர் இன்றை கர்பரேட் குருமார், உண்மையில் யோகம் என்பது ஆரோக்கியமான மன நிலை உடைய ஒருவர் அதியுயர் மன நிலை அடைந்து, பின்னர் மனதிலிருந்து தனது விழிப்புணர்வினை நிரந்தரமாக்கி பிரம்மம்/சிவம் எனப்படும் பேரின்ப நிலையினை அடைய உதவும் ஒரு மார்க்கமாகும். இத்தகைய ஒரு வழியினை நோய் தீர்க்கும் காரணியாக பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை எனினும் அதை விட உயர் நிலை உள்ளது என்பதனை சுட்டிக்காட்டவே இங்கு கூறினோம். 

இந்த முதலாவது சூத்திரமான : "அத யோகானுசாஸனம்" - இப்போது யோக ஒழுங்கு முறை மேலும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டிய சூத்திரமாகும். அடுத்த பதிவில் அது பற்றி மேலும் அறிவோம்.

ஸத்குரு பாதம் போற்றி!

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு