காயத்ரி மந்திரமும் சர்வ தேவதா சித்தியும் - காயத்ரி சாதனை மூலம் அனைத்து தெய்வங்களின் சக்திகளையும் பெறும் முறை (பகுதி 01)

எமது காயத்ரி சாதனை தொடர்பான முன்னைய பதிவுகளை படித்து வந்தவர்கள் காயத்ரி உபாசனையின் பலனை நன்கு உணர்ந்திருப்பீர்கள். எனினும் பலர் நாம் ஏற்கனவே முருகனை உபாசிக்கிறோம், கணபதிதான் எனக்கு பிடித்த தெய்வம், எனக்கு காளியைத்தான் பிடிக்கும் எனக் கூறுகிறீரகளா? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குகானது.

நாம் எமது முந்தைய பதிவுகளிலும் விளக்கியுள்ளோம், காயத்ரி சாதனை என்பது ஒரு தனிப்பட்ட தெய்வத்திற்குரிய சாதனை அல்ல, அது பிரம்ம சாதனை, பிரம்மம் என்றால் உலகின் ஒட்டுமொத்த (நிலைப்பண்பு+இயக்க) சக்திகளைக் குறிக்கும் சொல்லாகும். ஆக பிரம்மத்தினை உபாசிக்கும் சாதகன் பிரபஞ்சத்திலுள்ள மற்றைய சக்திகளையும் கவரும் ஆற்றல் பெறுகிறான். இதனை மேலும் விளங்கிக்கொள்ள ஒரு உவமான உதாரணம் மூலம் விளக்குவோம்.

ஒட்டு மொத்த பிரபஞ்ச சக்தியினை ஒரு நாட்டின் நிர்வாகம் என எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நிர்வாகத்தின் அதியுயர் சக்தி பீடம் ஜனாதிபதி, இதுவே பிரபஞ்ச சக்தியில் காயத்ரி எனக்குறிக்கப்படுகிறது. நீங்கள் முறையான பரிவார‌ உபாசகர்கள் என்றால் உங்களுக்கு யந்திர பூஜையில் உள்ள பரிவார தெய்வங்கள் பற்றி தெரிந்திருக்கும். இவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் அலுவலக அதிகாரிகள் தொடக்கம் ஊழியர் வரை இருப்பார்கள்.

இதுபோல் அந்த நிர்வாகத்திற்கு அமைச்சுகள் இருக்கும், கல்வி அமைச்சு, பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என இவை முறையே சரஸ்வதி, லஷ்மி, துர்க்கா என பலவாறாக விரியும். இப்படியே நிர்வாக அலகு கிராம அளவில் வரும் போது கிராம அலுவலகர் அல்லது பஞ்சாயத்து வரை வரும். அந்த அளவில் பிரபஞ்சத்தில் சக்தி அளவு நவக்கிரகங்களால் கட்டுப்படுத்தப்படும்.

இப்போது அன்பர்களுக்கு நாம் கூறிய உதாரணம் நன்கு விளங்கியிருக்கும் என நம்புகிறோம். காயத்ரி உபாசனை எனபது ஒரு நாட்டின் ஜனாதிபதியின் நட்பிற்கு பாத்திரமாக இருப்பது போன்றது. இதனால் கிடைக்க கூடிய நன்மைகளை கூறவும் முடியுமா? ஜனாதிபதியின் அன்பும், நட்பும் இருப்பின் மற்ர்றைய அமைச்சுகளின் ஆதரவினைப்பெறுவது மிகச் சுலபமல்லவா! அதுபோலதான் காயத்ரி உபாசனை செய்பவர்கள் மற்றைய தெய்வ சக்தியினை கவரும் முறையினையே இங்கே தரப்போகிறோம்.

நாம் உதாரணம் கூறிய அரசியல் கட்டமைப்பினை தற்காலத்து சுயநல அரசியலாக எண்ணி தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. அதாவது ஜனாதிபதியின் அன்பு இருப்பதால்
இலஞ்சம் கொடுத்து  எல்லாவித தீய செயல்களையும் செய்து விட்டு தப்பிவிடலாம் என்று, பிரபஞ்ச சக்தி பேரொழுங்கு முறையானது, அதன் நியதியிலிருந்து சற்றேனும் விலகி உங்களுக்கு நன்மை செய்யாது, முதலாவது அதன் ஒழுங்கு முறைக்கு நீங்கள் உங்களை சரி செய்துகொள்ளவேண்டும். அதுவே ஒழுக்கம், இயமம், நியமம் எனப் போதிக்கப்பட்டது. அத‌ன் பின் ச‌ரியான‌ முறையில் நீங்க‌ள் அந்த‌ ச‌க்தியினை அணுக‌வேண்டும், அதுவே உபாச‌னை, பின்ன‌ர் கிடைத்த‌ ச‌க்தியினை ச‌ரியான‌ வ‌ழியில் ப‌ய‌ன்ப‌டுத்த‌வேண்டும். இந்த‌ நிய‌தியில் எதுவித‌ அதிகார‌ துஷ்பிர‌யோக‌மும் செய்ய‌முடியாது என்ப‌த‌னை ந‌ன்கு ம‌ன‌தில் கொள்ள‌வேண்டும்.

இத‌னை ச‌ற்று மேலும் விள‌ங்கிக்கொள்வோம். நீங்க‌ள் ஜ‌னாதிப‌தியுட‌ன் ந‌ட்பு இருக்கின்ற‌து என்ப‌த‌ற்காக‌ த‌குதிய‌ற்ற‌ ஒன்றை, உதார‌ண‌மாக‌ ப‌த‌விக்கேற்ற‌ த‌குதி இல்லாம‌ல் குறித்த‌ ப‌த‌வியினை அடைய‌ வேண்டும் என‌ விருப்புகிரீர்க‌ள். இத‌னை நீங்க‌ள் காய‌த்ரி உபாச‌னையில் தேவியிட‌ம் செய்யும் வேண்டுத‌லாக‌ வைத்துக்கொள்வோம். உட‌னே தேவி க‌ண்ணை மூடிக்கொண்டு அத‌னை உங்க‌ளுக்கு வ‌ழ‌ங்கி விட‌மாட்டாள், த‌ன‌து பிர‌ப‌ஞ்ச‌ ஞான‌ச‌க்தியினூடாக‌ அத‌னை அடைவ‌த‌ற்குரிய‌ த‌குதியினை பெறுவ‌த‌ற்கான‌ வ‌ழியில் உங்க‌ளை செலுத்துவாள். இத‌னை புரிந்து கொள்ளாம‌ல் ப‌ல‌ர் நான் வேண்டிய‌து கிடைக்க‌வில்லை அத‌னால் என‌து உபாச‌னை ப‌லிக்க‌வில்லை, தெய்வ‌மே பொய் என்ற‌ முடிவிற்கு வ‌ந்து வழியை விட்டு வில‌கிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர். ஆக‌வே எப்போதும் தெய்வ‌ உபாச‌னையில் நீங்க‌ள் இருக்கும்  நிலக்கு அடுத்த‌ நிலையினை அடைவ‌த‌ற்கு பிரார்த்திதால் உட‌ன‌டியாக நிறைவேற‌க்காணுவீர்க‌ள். உதார‌ண‌மாக‌ நீங்க‌ள் ஒரு சாதார‌ண உத்தியோக‌த்த‌ர் என்றால் அடுத்த‌ நிலை முகாமையாள‌ர் என்றால் அத‌னை அடைவ‌த‌ற்கு பிரார்த்தித்தால் உங்க‌ள் த‌குதிக்கேற்ப‌ சிறிது கால‌த்திற்குள் நிறைவேறக்காணுவீர்க‌ள். அல்லாம‌ல் க‌ம்ப‌னியின் நிர்வாக‌ முகாமையாள‌ராக‌ வ‌ர‌வேண்டும் என‌ பிரார்த்தித்தால் உங்கள் தகுதி காரணமாக‌ சில‌வேளை அங்கிருந்து வில‌க‌வேண்டிய‌ சூழ‌லும் ஏற்ப‌ட‌லாம்.

இந்த அடிப்படைகளை மனதில் வைத்துக்கொண்டு இந்தப்பதிவின் விடயதானத்திற்கு வருவோம். காயத்ரி என்பதி இந்தப்பிரபஞ்சத்தின ஒட்டுமொத்த சக்தியான பிரம்மம் என்று பார்த்தோம். நீங்கள் காயத்ரி உபாசனை மூலம் இந்த பிரம்மத்தின் அருளைப் பெற்றுவிட்டால் மற்றைய சக்திகளின் அருள் இலகுவாக கிடைக்கும். ஆனால் அதற்கும் நீங்கள் சில ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் ஜனாதிபதியின் விசேட அனுமதி பெற்ற நபர் என்ற சான்றிதழ் வேண்டும், இந்த அட்டையுடன் மற்றைய அமைச்சுகளுக்கு சென்றால் உடனடியாக உங்களது வேலைகள் முன்னெடுக்கப்படும். அத்தகைய ஒரு முறைதான் மற்றைய தெய்வங்களின் காயத்ரி மந்திரங்கள்.

நீங்கள் பொதுவாக அவதானித்தால் அனைத்து தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரம் இருக்க காண்பீர்கள். இதன் ரகசியம் இதுதான், முற்காலத்தில் ரிஷி பரம்பரையினர், சித்தர்கள் முதலாவதாக பிரம்ம காயத்ரி உபாசனை செய்து மூலசக்தியினை வசப்படுத்திக்கொண்டு பின்னர் அதன் உதவியுடன் மற்றைய தெய்வ சக்திகளை தமது தேவைக்கு ஏற்ப, உதாரணமாக செல்வம் என்றல் லஷ்மி காயத்ரி, தடைகள் நீங்க விநாயக காயத்ரி,கல்வியிற்கு சரஸ்வதி என உபாசித்து வந்தார்கள். இந்த முறையின் சிறப்பு என்னவெனில் பிரம்ம காயத்ரி உபாசனையினை முறைப்படி (அதாவது பூரணமாக 125,000 ஜெபம் பூர்த்தி செய்து, பின்னர் நித்திய உபாசனை செய்து வந்தால்) செய்துவந்தால் இவற்றை தமது தேவையின் போது அதிக அளவு ஜெபிக்க தேவையில்லை.

ஆகவே மற்றைய தெய்வங்களை உபாசனை செய்பவர்களும் மூல காயத்ரி உபாசனையினை செய்யத்தொடங்குவீர்களானால் துரித பலனைப்பெறுவீர்கள். வாசகர்களே காயத்ரி உபாசனை எந்த விதத்தில் உங்களுக்கு உதவ முடியும் என்பதனை நன்கு உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.


Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு