ஒரு
இல்லற சாதகன் தனது குருவை அண்டி காயத்ரி சாதனை பயின்று தியானத்தில் முன்னேறினான். தற்போது
மனதை ஒழுங்குபடுத்தி ஏகாக்கிர சித்தியடையும் நிலையினை அடைகிறான். இப்படி மனம் ஏகாக்கிரமடைய
ஒருவித சந்தோஷம் தன்னில் உருவாவதை அவதானிக்கிறான். தனது குருவுடன் பயிற்சிக்கும் போது
தனது முன்னேற்றம் வேகமாக இருக்கிறது என்று உணர்ந்து கொண்டான். சிறிது நாள் பயிற்சியின்
பின்னர் குரு சாதகனை வீட்டிற்குச் சென்று மனைவி பிள்ளைகளுடன் அவனது பயிற்சியை வீட்டிலிருந்தவாறு
செய்யச் சொல்லுகிறார்.
குரு,
நீ இந்தப்பயிற்சியால் அடைந்த நன்மையினை உனது மனைவியிடம் பகிர்ந்து கொண்டு அவளிற்கு
கற்பிப்பாய் என நம்புகிறேன் என்றார்.
அதற்கு
அந்த சாதகன், இல்லை குருவே அவள் என்னை திட்டுவாள், எனது சொந்த மன நிம்மதிக்காகவும்,
சுய நலத்திற்காகவும் தன்னை விட்டுப் பிரிந்து இந்தப்பயிற்சிகளை நான் செய்வதாக எண்ணுகிறாள்,
பிள்ளைகள் நான் தொழிலையும் தங்களையும் ஒழுங்காக கவனிப்பதில்லை என்று எண்ணுகின்றார்கள்
என்றான்.
அதற்கு
குருவோ, நல்லது, அப்படியானால் இங்கு என்னுடன் நீ சாதனையின் மூலம் பெற்ற நன்மைகளின்
பெறுமதி பற்றி சரியாக உனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் எடுத்துச் சொல்லவில்லை என
நினைக்கிறேன் என்றார்.
நான்
வீட்டிற்கு சென்றவுடன் எனது மனைவி என்னை திட்ட ஆரம்பித்துவிடுவாள், ஆகவே இதன் நன்மைகளை
எடுத்துச் சொல்ல எனக்கு நேரம் கிடைப்பதில்லை என்றான் சாதகன்.
நல்லது, பயிற்சிக்கு முன்னர் என்ன சங்கல்பம் சொல்கிறோம்?
புத்தியைத் தூண்டும் ஒளி மிகுந்த அந்தப்பரம்பொருள் எம்மில் உறைந்து ஞானத்தை விழிப்பித்து
எனது புத்தியையும், எனது குடும்பத்தவர்கள் புத்தியையும், என்னுடன் தொடர்பு கொள்பவர்கள்
புத்தியையும் தூய்மை அடையச்செய்து சரியான வழியில் செலுத்தட்டும் என்று கூறுகிறோம் அல்லவா?
இப்படி எமது புத்தியை ஒளிமிகுந்ததாக்கி, சரியான ஒழுங்கினை எமது வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்
போது எம்மில் 28 வகையான தெய்வீக பண்புகள் எமது சித்தமாக்கிய ஆழ்மனதில் விழிப்படைந்து
எமது வாழ்க்கையை சீராக்குகிறது. யார் இந்த 28 வகையான தெய்வீகப்பண்புகளை தம்மில் பூரணமாக
விழிப்படையச் செய்கிறார்களோ அவர்களே காயத்ரி சித்தி பெற்றவர்கள், பூரணமானவர்கள்.
இப்படிப்பயிற்சிப்பதில்
எமது சாதனையின் நோக்கம் நாம் மட்டும் முன்னேறுவதல்ல, எமது குடும்பம், எம்மைச் சூழ இருக்கும்
சமூகம் என அனைவருக்கும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே சாதகர்களின் பண்பாக இருக்க வேண்டும்.
நீ
தற்போது வீட்டிற்கு செல்லப்போகிறாய், இவ்வளவு நாட்களும் சாதனையினால் பெற்ற மன தெளிவும்
இன்பத்துடனும் செல்லும் அதே வேளை உனது மனைவியின் மேல் அன்பும், பாசமும், பரிவும், கருணையும்
உடைய மனதுடன் உணர்ச்சியுடன் வீட்டிற்குச் செல்ல வேண்டும். மனதின் ஆழத்தில் அத்தகைய
பாவத்தை இருத்த வேண்டும். உனது ஒவ்வொரு பயிற்சியின் முடிவிலும் நீ பெறும் முன்னேற்றம்
உனது மனைவியும், பிள்ளைகளும் பெறவேண்டும் என்று கருணையுடன் எண்ண வேண்டும். பயிற்சி
முடிந்து அவளைச் சந்திக்கும் போது அத்தகைய பாவத்தில் எதிர் நோக்க வேண்டும். அவளுக்கு
புரிந்துகொள்ளக்கூடிய ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சாதனையின் பலன்களை எடுத்துச் சொல்லவேண்டும்.
அவள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அதை எடுத்துச் சொல்லுவது உனது கடமை என்பதைப் புரிந்து
கொண்டு, நீ பெற்றிருக்கும் மன அமைதியும், ஆனந்தமும் அவளும் பெறவேண்டும் என கருணையுடன்
பாவிக்கவேண்டும்.
இப்படி
இல்லாமல் நான் ஏதோ ஒரு உயர்ந்த விஷயத்தை அறிந்து கோண்டேன், அதற்குரிய தகுதி உனக்கு
இல்லை, நீ அந்தளவுக்கு புண்ணியம் செய்யவில்லை போன்ற மன நிலைகளை உருவாக்குவாயானால் நீ
கூறுவது போல் உனது மனைவி புரிந்துகொள்ளாமல் உன்னைத் திட்டுவாள் என்றார் குரு.
அதற்கு
சாதகன் ஆம் குருவே, நான் வீட்டிற்குச் சென்றவுடன் எனது மனது அவர்களை விட நான் உயர்ந்த
நிலை பெற்றதாகவும், சாதனை செய்யும்போது கடுமையாக அவர்களைப் பார்த்து சிரிப்பதோ, ஏற்கும்
மன நிலையிலோ இருப்பதில்லை, நான் எனது சாதனையை பூட்டிய அறையில் தனியாக செய்து விட்டு
அதுபற்றி எதுவும் உரையாடாமல் இருந்து விடுகிறேன் என்றான்.
நல்லது,
இந்தப்பண்பு சாதகனாக நீ தவறு செய்கிறாய் என்பதை நான் மேற்கூறிய உதாரணத்திலிருந்து விளங்கியிருப்பாய்
என நம்புகிறேன். நீ உளமார மேற்குறித்த பாவனையுடன் அவளை மதித்துக் கூறும்போது அவள் அதை
ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெறுகிறாள், அப்படி
நீ முயற்சி செய்யும் போது அவள் தனது நீண்டகால மனப்பண்பால் எதிர்த்துக்கொண்டு
இருந்தாலும் ஒரு சாதகனாக நீ எப்போதும் குறைவடைவதில்லை! ஏனெனில் காயத்ரி சாதகனின் மிக
முக்கிய பண்பு எம்மைச் சார்ந்தவர்களின் ஆன்ம முன்னேற்றத்தில் பாடுபடுவது, ஆகவே உனது
தர்மத்தில் நீ இலாபமடைந்தவனாகிறாய். ஆகவே நீ உனது முயற்சியில் வெற்றியடையும் வரை விடாமல்
முயற்சி செய்யவேண்டும். நன்றாக புரிந்து கொள் முதல் மாற்றம் உன்னிலிருந்து வரவேண்டும்,
கோபமோ, சலிப்போ, எரிச்சலோ இன்றி உன்னை முன்னேற்ற எப்படி நீ பாடுபடுவாயோ அப்படி அவளது
ஆன்ம முன்னேற்றத்திற்கு பாடுபடவேண்டும்.
இறுதியாக,
பலருக்கும் பயன்படவேண்டிய ஒரு நீர்ச் சாடி இருந்தால் அது எவ்வளவுக்கு நிரம்பியிருக்கிறதோ,
அந்த அளவுக்கு அதிகமானவர்களுக்குத் தாகத்தை தீர்க்கும், அதற்கு அதன் விளிம்பு வரை நீரை
நிரப்பி வைத்திருக்க வேண்டும். தாகமுள்ளவர்கள் கட்டாயம் அருந்துவார்கள், எவருக்கும்
தாகமில்லை என்ற எண்ணத்தை சாடி நினைத்துக்கொண்டு தன்னை நிரப்பாமல் இருக்கக் கூடாது.
இதுபோலவே ஒரு சாதகன் மற்றவர்களுக்கு தகுதியில்லை, அவர்கள் சாதனையைப் புரிந்து கொள்கிறார்கள்
இல்லை போன்ற எண்ணங்களை உருவாக்கி தம்மை வெற்றுப்பாத்திரமாக வைத்திருக்கக் கூடாது. எப்போது
சாடியின் விளிம்பு வரை தம்மை கருணையாலும், பண்பாலும் நிரப்பி வைத்திருக்க வேண்டும்,
தாகம் வரும் நேரத்தில் குறைவில்லாமல் கொடுக்கக்கூடியவாறு, எப்போது நீ வாழ்த்தும்போது
உனது மனைவி புன்னகையுடன் ஏற்றுக்கொள்கிறாளோ என்று அவளது மனமாகிய பாத்திரம் நிரம்ப ஆரம்பிக்கிறது
என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும், அதுவரை உனது முயற்சி இருக்க வேண்டும் என்றார் குரு!
சாதகனும்
மன மகிழ்வுடன் தனது வீட்டிற்கு பயணமானான்!