ஆத்யந்த ரஹீதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜ்ஞே யோகசம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த ரஹீதே தேவி: ஆதியும் அந்தமும் இல்லாத தேவி
ஒரு காரியம் நடைபெற அந்தக்காரியத்திற்கான காரணம் காரியத்திற்கு முன்னர் இருந்தாக வேண்டும். பிரபஞ்சம் எப்போதும் இயங்கு காரியப்பொருள். இந்தப்பிரபஞ்சத்தில் சகல சௌபாக்கியங்களையும் தரும் தேவியான மஹாலக்ஷ்மி அந்த சௌபாக்கியத்தை தருவதற்கு பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர் அவள் இருந்திருக்க வேண்டும்.
இந்த பௌதீக பிரபஞ்சப் பொருட்கள், இன்பங்கள் எல்லாம் தோன்றி மறைந்து கொண்டிருப்பவை. இப்படி தோன்றி மறைவதையே அழிவு என்று சொல்கிறோம். இந்த அழிவு என்பது பௌதீகப் பொருட்களுக்கே பொருந்தும். எல்லாவற்றையும் தோன்றி மறையச் செய்யும் மூல சக்திக்கு ஆதியும் அந்தமும் இருக்க முடியாது.
எல்லா சௌபாக்கியங்களையும் தரும் ஆதிசக்தியையே மகாலக்ஷ்மியாக நாம் வழிபடுகிறோம். ஆக சாதகன் தான் வழிபடும் மஹாலக்ஷ்மியை வெறும் பணத்தை செல்வத்தை தரும் ஒரு தேவதையாக அறியாமையாக கருதக்கூடாது. மஹாலக்ஷ்மி என்பது பிரபஞ்சத்தின் அனைத்திற்கும் மூலமாக இருக்கும் ஆதி அந்தமில்லாத மூலசக்தியின் வடிவமே என்று உணர வேண்டும்.
ஆதி சக்தி – முதற் சக்தி
மேலே ஆதியும் அந்தமும் இல்லாதவள் என்று பார்த்தோம். ஆதியும் அந்தமும் இல்லை என்றால் அனைத்தையும் தோற்றுவித்த காரணம் ஒன்று இருக்க வேண்டுமல்லவா. அந்த மூலசக்தியின் வடிவே மஹாலக்ஷ்மி. ஆக ஒருவன் மஹாலக்ஷ்மியை உபாஸிப்பதனால் அந்த ஆதி சக்தியின் அருளைப்பெறலாம்.
மஹாலக்ஷ்மியும் ஆதிசக்தியும் வெவ்வேறான தெய்வ சக்திகள் அல்ல என்பதை உணர்வேண்டும்.
மஹேஸ்வரி – பெரிய ஐஸ்வர்யங்களின் தலைவி
ஈஸ்வரி என்றால் ஐஸ்வர்யங்களின் தலைவி என்று பொருள். மஹேஸ்வரி என்றால் இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய எல்லா ஐஸ்வர்யங்களிற்கும் தலைமை வகிப்பவள் என்று பொருள். மஹாலக்ஷ்மி உபாசனை பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஐஸ்வர்யங்களையும் அனுபவிப்பதற்கு தகுதியுள்ளவனாக்கும்.
யோகஞ்ஞே – யோக சாதனையில் வெளிப்படுபவள்
இன்று பலரும் மஹாலக்ஷ்மியின் அருளைப்பெறுவதற்கு பல்வேறு பூஜைகளை சடங்குகள் செய்கிறார்கள். ஆனால் மஹாலக்ஷ்மி உண்மையில் யோக சாதனையின் பலனாகவே தன்னை வெளிப்படுத்துகிறாள். உண்மையில் யோக சாதனையினால் பெறும் முக்தி இன்பத்தினை தருபவளும் மகாலக்ஷ்மியே.
ஒருவன் யோக சாதனையில் முன்னேற மஹாமாயையின் லக்ஷ்மி தத்துவம் மிக அவசியமான ஒன்று. ஏனெனில் யோக சாதனை என்பது மஹாமாயையை கடக்கும் முயற்சி. இந்த முயற்சியில் வெற்றிபெறவேண்டுமாயில் அந்த மாயையிற்கு யார் காரணமோ அவரின் அருள் இல்லாமல் எவரும் வெற்றி பெற முடியாது. பலரும் யோக சாதனை என்று தோடங்கி தம்மை வருத்தி, மஹாமாயை தம்மை துன்புறுத்துவதாக மனக்கலக்கம் அடைந்து தமது சாதனையினை ஒழுங்காக செய்ய முடியாதபடி மனக்கலக்கமும், ஏழ்மையும் வாட்ட விரக்தி அடைந்து விடுகிறார்கள். இப்படி மனதையும் உடலையும் வருத்தி தண்டித்து விட்டு மஹாமாயையின் விளையாட்டிலிருந்து ஏறி மேலே சென்று எவரும் முக்தி அடையமுடியாது.
ஆகவே யோக சாதனையில் வெளிப்படும் மஹாலக்ஷ்மியின் அருளைப்பேற்றே ஒருவன் முக்தியினைப் பெற முடியும்.
யோகசம்பூதே – யோகத்தால் உண்டானவள்
மஹாலக்ஷ்மித்துவம் ஒருவனில் எப்படி வெளிப்படும் என்பதை இந்த வரி குறிப்பிடுகிறது. மஹாலக்ஷ்மி என்பது இந்த உலகின் சம்பத்துகளுக்கு, ஐஸ்வரியங்களுக்கான ஓட்டுமொத்த மூல சக்தியின் இயக்கம். இந்த இயக்கத்தை வெளிப்படுத்த ஆழ்ந்த யோக சாதனை தேவைப்படுகிறது. சிவன், விஷ்ணூ, பிரம்மா முதலானவர்களும், தேவர்களும், அசுரர்களும் தமது யோக சாதனையால்தான் அவளின் ஆற்றலை தம்மில் வெளிப்படச் செய்கின்றனர்.
மஹாலக்ஷ்மியின் ஆற்றலை விழிப்பிக்க யோகசாதனை அவசியம்
சாதகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:
- மஹாலக்ஷ்மி என்பது ஆதியும் அந்தமும் அற்ற மூலசக்தியின் சகல சௌபாக்கியங்களையும், ஐஸ்வர்யங்களையும் இன்பங்களையும் அருளும் செயல் சக்தி.
- மஹாலக்ஷ்மியே மூலசக்தி, மகாலக்ஷ்மி மூலமும் ஆதிசக்தியின் பரிபூரண அருளைப்பெறலாம். அவளே சகல ஐஸ்வர்யங்களினதும் தலைவி
- மஹாலக்ஷ்மி யோகசாதனையில் வெளிப்படுபவள், அவளின் அருளை பெற்றவார்களே யோகத்தில் பூரணத்துவம் பெறமுடியும்.
- மஹாலக்ஷ்மியின் அருளை யோகசாதனையால் ஒருவன் தன்னில் விழிப்பிக்க முடியும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.