நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
சர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே என்பதன் பொருள் என்னவென்பதை முதல் ஸ்லோகத்தில் பார்த்தோம். லக்ஷ்மி உபாசனையில் துன்பம் விளைவிக்கும் போலி ஆங்காரங்களான எமது பற்றாக்குறைகளை எமது தன்மையாக நாமாக எண்ணாமல் இன்பமயமான லக்ஷ்மிதத்துவத்துவமே தன்னுடையதாக பாவிக்க வேண்டும். ஆகவே எனது போலி அடையாளங்களான ஆங்காரங்களைத்துறக்க நமஸ்தே என்ற வரி பாவிக்கப்படுகிறது. சாதகன் தான் இந்த துன்பமயமான போலி அடையாளங்கள் அல்ல என்பதை துறந்து லக்ஷ்மியை உபாசிக்க வேண்டும் என்பதை இந்த வரி குறிப்பிடுகிறது.
கருடாரூடே – கருடன் மேல் ஏறி வருபவள்
பொதுவாக வாகனம் எமக்கு இருக்கிறது என்றால் நாம் செல்லும் பாதை எது என்பதை அது கூறும். ஒருவரிடம் கார் இருந்தால் கட்டாயம் இந்தபாதையால்தான் செல்லுவார் என்பதை அனுமானிக்கலாம் அல்லவா. அதுபோலவே இந்த வரி லக்ஷ்மியின் வாகனத்தைக் கருடாரூடே என்று குறிப்பிடுகிறது. ஆக இதன் அர்த்தம் கருடன் மூலம் பயணிப்பவள் மஹாலக்ஷ்மி என்பது.
எல்லா தெய்வ சக்திகளும் உடலுக்குள்ளேயே இருக்கிறது என்பதல்லவ சித்தர்களின் வாக்கு. ஆகவே கருடனும் உடலுக்குள்ளே இருக்க வேண்டுமல்லவா. உடலில் கருடன் இருக்கிறான்.
ஆம் உடலை இயக்கும் பிராணசக்திதான் கருடன். ஒருவனில் மகாலக்ஷ்மி தத்துவம் செயல்பட வேண்டுமானால் அவன் பிராண சக்தி நிறைந்தவனாக இருக்க வேண்டும்.
ஒருவன் தனது மூச்சினை ஒழுங்குபடுத்தி பிராணசக்தி நிறைந்தவனாக இருந்தால் அந்தப்பிராணன் மேல் ஏறி ஒருவனில் லக்ஷ்மித்துவத்தை செயற்படுத்துபவள்.
ஆக ஒருவன் தன்னில் லக்ஷ்மித்துவத்தை விழிப்படையச் செய்ய வேண்டின் அவன் பிராணசக்தி நிறைந்தவனாக இருக்க வேண்டும். இதற்காக அனாவசியமான கண்ட கண்ட பிராணாயாமங்களைச் செய்ய வேண்டியதில்லை. தீர்க்க சுவாசம் என்ற ஆழமாக மூச்சினை எடுத்து விட்டு பயிற்சி செய்ய ஒருவனில் பிராண வலிமை கூடும். பிராண வலிமை கூடினால் அவனில் லக்ஷ்மி தத்துவம் செயற்படும்.
கோலாஸுர பயங்கரி - கோலாசுரனுக்கு பயங்கரமானவள்
கோலாஸுரன் என்பவன் தேவர்களை தான் பெற்ற வலிமையால் துன்புறுத்த பைரவி வடிவில் சென்று அவனை அழித்தவள் மகாலக்ஷ்மி.
முதல் வரியில் பிராணவலிமையால் லக்ஷ்மித்துவத்தை பெற முடியும் என்று சொல்லிவிட்டு அடுத்த வரியில் கோலாசுர பயங்கரி என்று கூறுவது மிகப்பொருத்தமான ஒழுங்கு.
பொதுவாக ஒருவன் வலிமை பெற்றாலோ செல்வம் பெற்றாளோ அசுரத்தனம் வளர்ந்து விடுவதை இயல்பிலே காண்கிறோம். எவராவது தாம் வலிமை பெற்று விட்டால் அந்த வலிமையை எளியவர்களிடம் காட்டி துன்புறுத்துவது வழக்கம். இந்த நிலையையே புராணங்கள் அசுரன் என்று குறிப்பிடுகிறது.
இப்படி பிராண வலிமையால் லக்ஷ்மித்துவம் பெற்று தேவர்களை துன்புறுத்திய அசுரன் தான் கோலசுரன். இப்படி அசுரத்தனம் இருந்தால் அந்த இடத்தை விட்டு லக்ஷ்மி விரைவில் அகன்று விடுவாள். இப்படி அகல முன்னர் சாதகனிற்கு புத்தி விழிப்படைய பயமுறுத்தி நல் வழிப்படுத்துவாள், இதையே கோலாசுர பயங்கரி என்ற சொற்களால் விழக்கப்பட்டிருக்கிறது.
லக்ஷ்மித்துவம் பெற்றவர்கள் தம்மில் மற்றவர்களை துன்புறுத்தும் அசுரத்தனத்தை அறவே நீக்க வேண்டும். இப்படி நீக்கினால் அவர்களில் லக்ஷ்மித்துவம் நிலைத்திருக்கும்.
சர்வபாபஹரே – எல்லாப் பாவங்களையும் போக்குபவள்
பாவம் என்பது தர்மத்தால் விலக்கப்பட்டது. தர்மம் என்பதன் பொருள் எது எம்மை நாம் இன்பமாக வாழுவதற்காக பிணைக்கிறதோ அந்த விதி தர்மம் எனப்படும். உதாரணமாக குடும்பத்தில் நாம் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால் கணவன் மனைவியையும் மனைவியையும் மதிக்க வேண்டும் என்றால் இது குடும்பத்திற்குரிய தர்மம்.
ஒருவன் பாவம் எப்போது செய்வான், தனது இன்பங்கள் பூர்த்தியாகவில்லை என்றால் அந்த இன்பத்தை தேடி தர்மத்திற்கு மாறாக செய்ய முயலும்போது பாவம் செய்தவனாகிறான்.
ஆக பாவத்தின் அடிப்படை இன்பத்தை அடையவேண்டும் என்ற உந்தலில் தர்மம் தவறுவதில் ஆரம்பிக்கிறது.
இப்படியான தர்மம் தவறும் இன்பம் அனுபவிக்கும் வேட்கையை தருவதும் அவளது மஹாமாயா சக்தியே! பொதுவாக இன்ப அனுபவிக்கும் விளையாட்டில் பலர் மூலசக்தியின் இன்ப வடிவான லக்ஷ்மிதத்துவத்தை பெருக்குவதை விட்டுவிட்டு மஹாமாயையின் விளையாட்டில் வீழ்ந்து விடுகின்றனர். உதாரணமாக பணம் ஒருவனுக்கு தேவையென்றால் அதை லக்ஷ்மிதத்துவத்தை தன்னில் விழிப்பித்து அடைகின்றான். பணம் கிடைத்த பின்னர் அவனிற்கு இருக்க கூடிய தேர்வுகள் இரண்டு, அந்தப்பணத்தைக் கொண்டு மனம் போன போக்கில் மஹாமாயையின் தோற்றங்களை இன்பம் எனக்கண்டு மயங்கி பணத்தை பெருக்க எந்த வழியையும் தேர்ந்தெடுக்கலாம் என்பது ஒன்று,
இரண்டாவது பெற்ற பணத்தால் தனது கடமைகளை பூர்த்தி செய்து மனத்திருப்தியை அடைந்து தர்மத்தை தவறாமல் ஆன்மாவை அறிந்து தனது உண்மை ஸ்வரூபத்தை அறியும் ஞானம்.
முதலாவது பாதையில் செல்லும்போது ஒருவன் பாபங்களை சேர்த்துக்கொள்கிறான். இரண்டாவது பாதையினை தேர்வு செய்யும்போது ஒருவன் உண்மையான லக்ஷ்மித்துவத்தை அடைந்து பரிணாமத்தில் முன்னேறுகிறான்.
உண்மையில் அன்னை லக்ஷ்மித்துவத்தின் மூலம் ஒரு ஆன்மா பரிணாமத்தில் முன்னேறேவே விரும்பினாலும் ஆன்மா அறியாமையால் தன் முனைப்பால் செய்யும் பாவக்கூட்டங்களால் மஹாமாயா சக்தியிடம் சிக்கிக்கொள்கிறது.
இப்படி சிக்கிக்கொண்ட ஆன்மா மீண்டு வர மஹா லக்ஷ்மியின் அருள் வேண்டும். ஆகவே மகாலக்ஷ்மியின் அருளுடன் ஒருவன் தனது பாவங்களை அழித்து பரிணாமத்தில் முன்னேற முடியும். லக்ஷ்மியின் அருள் பெற்ற ஒருவன் தான் பெறவேண்டிய இன்பங்களை எல்லாம் பெற்றுவிடுவதால் தர்மம் தவறாமல் இருக்கிறான். அதனால் அவன் பாவங்கள் செய்வதிலிருந்து இயல்பிலேயே தடுக்கப்படுகிறான்.
தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
இந்த வரிகளின் விளக்கம் முதல் ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஸ்லோகத்தில் சாதகர்களுக்கான அறிவுரை
1. மஹாலக்ஷ்மி அருளைப்பெற விரும்புபவர்கள் முதலில் தாம் துன்பமயமானவரகள், பாவம் நிறைந்தவர்கள் என்ற போலி ஆங்காரங்களை தொலைத்து தாம் மகாலக்ஷ்மி அருளுக்கு பாத்திரமானவர்கள் என்பதை உணரவேண்டும்.
2. லக்ஷ்மியின் அருள் எப்படி செயற்படுகிறது என்றால் கருடன் எனும் பிராண சக்தி மூலம், ஆகவே ஒருவன் தன்னில் பிராணசக்தி நிறைந்தவனாக இருக்க கூடிய வழிகளை அறிய வேண்டும்.
3. இப்படி பிராணவலிமை பெற்று லக்ஷ்மியின் அருள் பெற்ற பின்னர் ஒருவன் தனது செல்வத்தால், வலிமையால் எளியவர்களை வருத்தக்கூடாது. அப்படி வருத்தினால் லக்ஷ்மித்துவம் அவனிடமிருந்து விலகிவிடும். அப்படி விலக முன்னர் கோலாசுரனை பயமுறுத்தியது போல் அவள் சாதகனை நல் வழிப்படுத்த பயமுறுத்துவாள். அதை உணர்ந்து சாதகன் தன்னை தர்மத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
4. லக்ஷ்மி சித்தி ஒருவனை பாபக்கூட்டங்களில் இருந்து விடுவிக்கும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.