தமிழும் சமஸ்க்ருதமும் பற்றி எல்லோரும் உரையாடுகிறார்கள். தமிழ் தான் உயர்ந்த மொழி, ஸமஸ்க்ருதம் தாழ்ந்த மொழி, தமிழர்களிடன் எல்லா அறிவுக்களஞ்சியமும் இருந்தது அதை களவாடி விட்டார்கள். ஆரிய சூழ்ச்சி! கடவுள் வழிபாடு ஆரியர்களால் புகுத்தப்பட்டது! தமிழ் சித்தர்கள் சமஸ்க்ருதத்தை பயன்படுத்த வில்லை!
இவையெல்லாம் தமிழே உயர்ந்த மொழி என்பதற்காக கூறும் ஆதாரங்களாம்.
தமிழ் வாழ்வியலுக்கு எமக்கு இருக்கும் பழமையான ஆதாரம் சங்க இலக்கியம். சங்க இலக்கியத்தின் வெகு பிரபலமான பாடல் கணியன் பூங்குன்றனாரின்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)
இதன் பொருள்
எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை. ( நன்றி விக்கிபீடியா)
இத்தகைய உயர்ந்த பண்பினையும் ஞானத்தினையும் வாழ்வியலாக உடைய தமிழரது பண்பா தமது மொழி உயர்வு என்பதற்காக சமஸ்க்ருதம் தாழ்வு என்று கூறுவதற்காக காழ்ப்புணர்ச்சி கொண்டு பல பண்புக்கொவ்வா மனம்போன போக்கில் புனைகதைகள் புனைந்து மக்கள் மனதில் விஷம் விதைப்பது.
மொழி என்பது ஒவ்வொரு மனிதனது சிந்தனை, புரிதல், அறிவு என்பவற்றை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு கருவி. அந்தக் கருவி உயர்ந்ததும் தாழ்ந்தது என்பது அதை பயன்படுத்துபவர்கள் பண்பில், செயலில் உள்ளது.
கத்தியை கொலைக்கும் பயன்படுத்தலாம், உணவு சமைக்கவும் பயன்படுத்தலாம். இரண்டிலும் கத்திக்கு எந்த பெருமையும் சிறுமையும் வாய்ப்பதில்லை. கொலை செய்தால் நீதிபதி முன்னால் தடயமாக பயன்படுத்தப்பட்டு விட்டு வீசப்படும். கொலைகாரன் குற்றவாளி ஆவான். அதுபோல் நல்ல சமையலாக இருந்தால் சமையல் செய்தவன் பாரட்டப்படுவான். இந்தப் பாராட்டில் கத்திக்கு எந்த பங்கும் இல்லை.
கத்திக்கு பெருமை வருவதாயின் அதை பயன்படுத்தியவனின் திறமை, ஆற்றல் மட்டுமே அன்றி வேறு எதுவுமில்லை. இதுபோல் தமிழை அழகுபடுத்தி வள்ளுவர், கம்பர், சங்கப்புலவர்கள், நாயன்மார்கள், திருமுறைகள், சித்தர்கள், ஆண்டாள் என பலரும் தமது அறிவால் பண்பால் தமிழை அழகுபடுத்துகின்றார்கள். இவர்கள் தமிழ் மொழி என்ற கருவியை சிறப்புறச்செய்தவர்கள்.
அல்லாமல் மக்கள் மனதில் பிரிவினை வாதம், காழ்ப்புணர் ச்சி, தாழ்வுணர்ச்சி, பகைமை, பொறாமை, ஏற்றத்தாழ்வு விதைக்கும் அன்பர்களும் கொலைகாரன் சமையலுக்கு பாவிக்கும் கத்தி போல் மொழியை வைத்து துவேஷம் வளர்க்கிறார்கள்.
ஆக மொழிக்கு அழகு அதை பயன்படுத்துபவர்கள் பண்பே அன்றி வேறல்ல என்பதை அறிந்து தமிழ் மொழி சிறக்க பண்புடன் பங்களிப்போம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.