மதங்களும் அரசியல் அதிகார மையங்களும் மனிதன் தனது உண்மை தன்மையான விழிப்புணர்வினை அடைவதை தடுக்கின்றன. தனது உண்மை ஸ்வரூபத்தை தெரிந்த மனிதன் எதற்குபின்னாலும் ஓடாமல் தனது சுயத்தில் திருப்தி அடைபவனாக இருக்க ஆரம்பிப்பான். இப்படிப்பட்ட மனிதர்களை வைத்துகொண்டு அடிமைத்தனத்தை ஏற்படுத்த முடியாது. இத்தகைய சமூகம் வன்முறை அற்ற அமைதியான ஆனந்தமான சமூகமாக இருக்கும். இத்தகைய மனித சமூகத்தை கட்டி எழுப்ப விரும்பியவர்களே கீழைத்தேய (இந்திய - சீன) ஞானிகள். இப்படிப்பட்ட ஞான நிலை விடயங்களை மக்கள் புரியாதவகையில், இலகுவாக பயன்படுத்தாத வகையில் உருவாக்கப்பட நிர்வாக கட்டமைப்புகளே ஆதீனங்கள், மடங்கள் என்பன. இவை மனிதனை தமது அதிகார இலக்கிற்குள் இயங்க வைக்கும் வகையில் சட்ட திட்டங்களையும், பயமுறுத்தல்களையும் உருவாக்கி மக்களை எப்போதும் பயம் சார்ந்த, பாவம் செய்த ஒருவனாக தன்னை கற்பித்துக்கொண்டு இருப்பான். இப்படியான நிலையில் இருந்து மீண்டு மக்கள் அனைவரும் ஞான நிலை பெறவேண்டும் என்று எண்ணிய சித்தர்களில் அகத்தியர் முதன்மையானவர் அவர் தனது ஞானப்பாடல்களில் கூறும் விடயங்களை கீழே பார்ப்போம்.
இதில் வினோதம் என்னவென்றால் கடவுள் இல்லை என்பவர்களும் பழைய கள்ளு புதியபானையில் என்பதுபோல் அதே மத, அரசியல் மையங்களை ஏற்படுத்திக்கொண்டு தாமும் தமது குடும்பமும் பிழைக்கவே வழிவகை செய்துவருகிறார்கள் என்பதுதான்!
இந்தப்பாடல்கள் தற்காலத்தில் ஞானம், யோகம், கோயில், குளம் என்று அலைபவர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய பாடல்களாகும்.
மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு
மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா!
நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார்
நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்;
ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு
அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோணார்;
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா
யெண்ணித் தளமான தீயில்விழத் தயங்கி னாரே; 2
தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம்
சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே;
மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர்
கூடி மாட்டினார் கதைகாவ்ய புராண மென்றும்
இயலான ரசந்தனிலீப் புகுந்தாற் போலும்
இசைத்திட்டார் சாத்திரங்க ளாறென் றேதான்;
வயலான பயன்பெறவே வியாசர்
தாமும் மாட்டினார் சிவனாருத் தரவினாலே. 3
உத்தார மிப்படியே புராணங் காட்டி
உலகத்தில் பாரதம்போல் கதையுண் டாக்கிக்;
கர்த்தாவைத் தானென்று தோண வொட்டாக்
கபடநா டகமாக மேதஞ் சேர்த்துச்
சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க் கெல்லாஞ்
சதியுடனே வெகுதர்க்கம் பொருள்போற் பாடிப்
பத்தாகச் சைவர்க்கொப் பனையும்
பெய்து பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே. 4
பாடினதோர் வகையேது? சொல்லக் கேளு
பாரதபு ராணமென்ற சோதி யப்பா!
நீடியதோர் ராவணன்தான் பிறக்க வென்றும்
நிலையான தசரதன்கை வெல்ல வென்றும்
நீடியவோ ராசனென்றும் முனிவ ரென்றும்
நிறையருள்பெற் றவரென்றுந் தேவ ரென்றும்
ஆடியதோர் அரக்கரென்றும் மனித ரென்றும்
பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே. 5
கழிந்திடுவார் பாவத்தா லென்று சொல்லும்
கட்டியநால் வேதமறு சாத்தி ரங்கள்
அழிந்திடவே சொன்னதல்லால் வேறொன் றில்லை
அதர்ம மென்றுந் தர்மமென்றும் இரண்டுண் டாக்கி
ஒழிந்திடுவா ரென்றுசொல்லிப் பிறப்புண் டென்றும்
உத்தமனாய்ப் பிறப்பனென்று முலகத் தோர்கள்
தெளிந்திடுவோர் குருக்களென்றுஞ் சீட ரென்றும்
சீவனத்துக் கங்கல்லோ தெளிந்து காணே! 6