மனித உறவுகளில்
இருக்கும் மிகப்பெரிய சிக்கல் தன்மை என்னவென்றால் " நேர்படப் பேசும் தன்மை
இல்லாமை"
ஓவ்வொரு மனிதனும்
மற்றவர்கள் கூறும் கருத்தை செவிமடுத்து பின்னர் தனது கருத்தைத் தெளிவாகச் சொல்லும்
ஆற்றலை நாம் எமது பிள்ளைகளிடையே வளர்க்க வேண்டும்.
இன்னொருவர் கருத்துச்
சொல்லும் போது அவர் என்னைத் தாக்குகிறார் என்று எண்ணி உணர்ச்சி வசப்படாமல் அவர்
சொல்வதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ந்து உண்மையிருந்தால் அவற்றை
ஏற்றுக் கொண்டு தம்மை மீளமைத்துக் கொண்டும் இல்லை என்றால் தர்க்கப் பூர்வமாக
அவற்றை மறுத்து தனது கருத்தை நிறுவக்கூடிய ஆற்றலை வளர்க்க வேண்டும்.
இல்லாமல் வீணாக
உணர்ச்சி வசப்படல், குழம்புதல், ஆக்கிரோஷமடைதல் என்று குழப்பமடைய வைக்கக் கூடாது!
அண்மையில் ஒரு இளைஞர்
சமூகக் குழுவிற்கிடையிலான பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று உரையாடிய போது அறிந்து கொண்ட
விடயம் ஒவ்வொருவரும் தாம் சிந்திக்கும் நல்ல விடயத்தை தெளிவாக முன்வைப்பதை விட
மற்றவர்களை தாழ்த்துவதை அதிகமாகச் செய்யும் போது நல்ல சமூக நோக்கம் இல்லாமல் போய்
விடுகிறது.
தாம் நினைப்பதெல்லாம்
சரி என்ற ஒருவித பிடிவாதம் ஒருவருடன் ஒருவர் உரையாடும் தளத்தினை இல்லாமல்
ஆக்கிவிடுகிறது.
நாம் விவாதிப்பது, தர்க்கிப்பது
எல்லாம் எம்மிருவரதும், எமது குழுக்களினதும் நன்மை, ஒத்திசைவிற்காக மாத்திரமே -
எனது தனிப்பட்ட அகங்காரங்களினை திருப்திப்படுத்த இல்லை என்ற தெளிவு எல்லோரிடமும்
இருக்க வேண்டும்.
சொல்ல வரும் விடயத்தை
தனிமனித பிரச்சனையாக்காமல் எல்லோருக்கும் நன்மை பயக்கும் விடயமாக சொல்லத் தெரிய
வேண்டும்.
பலரும் நான் நேர்படப்
பேசுகிறேன் என்று மற்றவர்களை தாக்கிப் பேசுவதை நினைக்கிறார்கள். மற்றவரைத்
தாக்காமல் தனது கருத்தின் நியாயத்தை உரைக்கும் திறன் எமக்கு இருக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் ஒரு
அனுபவக் கல்வி முறையாக கற்கக்கூடிய தளங்களை சமூகத்தில் உருவாக்க வேண்டும்.