மரவள்ளி உலக உணவு நிறுவனத்தினால் இடர்களின் போது, இரசாயன் உள்ளீடு இல்லாத போது மக்களின் உணவுத் தேவைக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரு உணவுப் பயிர்!
தற்போது இலங்கையும் இந்த நிலவரத்தில் இரசாயன உள்ளீடு இல்லாமல் விவசாயம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறது.
இங்கு நாம் இயற்கை விவசாயம் என்று உரையாடுவது ஒருவித பற்றும் மயக்கமும் கலந்த உணர்ச்சிக் கூப்பாடு, சூழலியல் அக்கறையோ, சமூகப் புரட்சியோ, அரசியலோ அல்ல!
எரிபொருள், பொருளாதாரத் தேக்கம் என்பவற்றில் மக்கள் தமக்குரிய உணவை அதிக உள்ளீடு இல்லாமல் உற்பத்தி செய்வதற்குரிய எளிமையான முறையாக இது இருப்பதாகும்! இப்படியான ஒரு சூழலிற்கான நம்பகமான அறிவினை உருவாக்கத் தவறியிருக்கிறோம் என்பதை விவசாய அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தம்மை விவசாய அறிஞர்களாக கற்பனை செய்துகொள்பவர்கள் கேட்க வேண்டிய கேள்வி உரம் வாங்க முடியாத விலையில் இருக்கும் போது எனது பரிந்துரை ஒரு ஏழை விவசாயியால் செய்ய முடியுமா? அப்படி அவனால் செய்ய முடியவில்லை என்றால் அந்த ஏழை விவசாயிக்கு உதவக்கூடிய அறிவினை எனது ஆய்வினைச் செய்கிறேனா? என்பது!
இந்தக் கேள்வியை உளமாரக் கேட்கும் போது நாம் விடை தேட ஆரம்பித்தால் உண்மையில் விடை எமக்கு அருகிலேயே கிடைக்கும்! நாம் வீண் அகங்காரங்களால் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம்.
இரசாயன உள்ளீடு இல்லாமல் எப்படி விவசாயம் செய்வது என்ற தொழில்நுட்ப அறிவு எமது விவசாயத்திணைக்களத்திடம் இருக்கிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அவர்கள் உத்தியோகப் பூர்வமாக பிரசுரித்த புத்தகங்கள் எல்லாம் இரசாயன உரம் இவ்வளவு போடவேண்டும் என்றுதான் தொடங்குகிறது! இதில் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் மரவள்ளிக்கு நைதரசன் பசளை அதிகம் போடக்கூடாது என்று அறிவுரை சொல்லிக்கொண்டு யூரியாவை பரிந்துரைப்பது.
ஆனால் ஆபிரிக்க நாடுகளின் விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள், விவசாயத் திணைக்களங்கள் மரவள்ளிச் செய்கையிலாவது விவசாயியை உரம் போடு உரம்போடு என்று செலவினைக் கூட்டி சுரண்டாமல் உள்ளத்தூய்மையுடன் மரவள்ளியில் உரம் போடாமல் நல்ல விளைச்சலைப் பெறலாம் என அதற்கு சில நிபந்தனைகளைப் பரிந்துரைக்கிறது.
எமது திணைக்களத்திடம் இப்படியான பரிந்துரை இல்லாததால் எமது அரசாங்கம் கடன்வாங்கி எப்படி ஓடுகிறதோ, அதைப்போல சம்பியா நாட்டிடம் கடன்வாங்கிய விவசாய அறிவினை இங்கு தமிழில் மொழிபெயர்த்து இணைத்துள்ளேன். இது அவசரமான ஒரு மொழிபெயர்ப்பு; ஆகவே version 01 என்று கொள்க. இதில் விளங்காமல் எதுவும் இருந்தால் அவற்றை கேள்வியாக கீழே பதிவிட்டால் அவற்றை செம்மைப்படுத்தி, மேலும் இந்த ஆவணத்தை மெருகேற்றலாம்.
அத்தியாயம் 04: வெளி உள்ளீடு இன்றி தரமான விளைச்சலை மரவள்ளிச் செய்கையில் பெறுவது எப்படி?
ஆங்கிலம் தெரிந்தவர்கள் மூல நூலை இங்கே பார்வையிடுங்கள்: சமூக நல்லுணர்வு கொண்ட விவசாய அறிஞர்கள் இவற்றை தமிழிற்கு மொழிபெயர்த்து எமது மக்களுக்கு கொண்டு சேருங்கள்.
விவசாயத் திணைக்கள அதிகாரிகள் இனியாவது உலகத்தின் மறுபுறத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியுடன் உரத்தை நம்பிய விவசாயத்திலிருந்து உள்ளீடு இல்லாமல் விவசாயம் செய்வது எப்படி என்று ஆராய்ந்து மக்களுக்கு பயிற்றுவித்துக்கொண்டிருகிறார்கள் என்பதை அறிந்துகொண்டு நமது உள்ளூர் அறிவினை எப்படி உருவாக்குவது என்று புதிய ஆராய்ச்சிகளைத் தொடங்குங்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.