வேதாந்தம் சித்தாந்த இரண்டுமென்ன மேன்மையுள்ள பெரியார்க்கு இரண்டுமொன்றே என்பது அகத்தியர் ஞானத்தில் உள்ள வாக்கு!
தத்துவங்கள் என்பது வாழ்க்கை எனும் ஆற்றைக் கடக்கப் பயன்படும் ஓடம் போன்றவை! ஓடத்தில் நாம் ஏறி கவனமாகப் பயணித்து கரையை அடைவது மாத்திரமே குறிக்கோளாக இருக்க வேண்டும்!
ஓடத்தில் நாம் ஏறிப்பயணிக்க வேண்டுமே அன்றி ஓடத்தை நாம் தலையில் ஏற்றிப் பயணிக்கக் கூடாது! இன்று சித்தாந்தம் வேதாந்தம் கதைக்கும் பலரும் ஓடத்தை தலையில் ஏற்றியவர்களாகத்தான் இருக்கிறார்கள்!
எனது குருநாதர் அடிக்கடி கூறும் விஷயம் ஆலயம், பக்தி இவை எல்லாம் மனதினை தூய்மைப்படுத்தி, அகங்காரம், ஆணவத்தை நீக்கி தன்னைப்போல மற்றெல்லா உயிர்களையும் காணும் பண்பைப் பெறுவதுதான் வழிபாட்டின் குறிக்கோள் என்று! ஆனால் அகங்காரம் தூய்மையுறாமல், சித்தத்தின் ஆழத்தில் அசூயை, பொறாமை போன்ற துர்குணங்களை வைத்துக்கொண்டு வெளிவேடத்தில் பகட்டு ஆன்மீகம் பேசுவோர் கோயில் வழிபாட்டிற்குள் புகுந்தால் தமது மன விகாரங்களை வெளிப்படுத்தும் தளங்களாக, அரசியலாக ஆன்மீகம் மாறிவிடுவது தவிர்க்க முடியாதது.
புல்லாகி பூடாகி புழுவாகி பல்மிருகமாகி, பறவையாய் பாம்பாகி எல்லாப்பிறப்பும் எடுக்கும் ஆன்மா ஒவ்வொரு நிலையில் தன்னை முன்னேற்றிக்கொள்ள ஒவ்வொரு வழியை இறை சக்தி ஏற்படுத்தியுள்ளது என்பதைப் புரிந்துகொண்டு நாம் குருமுகமாகப் பெற்றதை அப்பியாசித்து அக முன்னேற்றம் காண வேண்டும் என்பதே சரியான வழி!
நாம் முழுமையாக படிக்காத ஒன்றை, அரைகுறைப் புரிதலுடன் அருவெருப்பாக விமர்சிப்பது முட்டாள்களின் குணம்! நாம் ஒரு நூலை, தத்துவத்தை விமர்சிக்க அந்த நூலை பயின்றிருக்க வேண்டும். அப்படி முறையாகப் பயிலத்தொடங்கி அறிவு விழிப்படைந்தவர்கள் தேவையற்ற குதர்க்கம் புரியமாட்டார்கள்!
குதர்க்கம் புரிபவர்கள் உண்மையில் அரசியல் அதிகார நோக்கம் கொண்டவர்கள். அவர்கள் எண்ணம் தாம் எண்ணுவதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தமே அன்றி புரிந்துகொள்வது என்பது அல்ல!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.