அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே
தில்லைச்சிற்றம்பலம் நடராஜர் தாண்டவம் ஆடும் தலம். இந்த ஆட்டம் சித் என்ற அறிவினை பிரபஞ்சத்தில் இயக்க அம்பலத்தில் ஆடும் ஆட்டம். இதுவே சிற்றம்பலம். பூவுகில் இந்த ஆட்டத்தின் பொருளை விளங்க தில்லையில் நடராஜராக தரிசிக்கலாம்.
சிவயோகத்தில் பிண்டத்திற்குள் தாண்டவம் காண தலையுச்சிக்கும் மேல் அம்பலம் என்ற ஆயிரம் இதழ்கமலத்தில் சித் என்ற அறிவாக இறைவன் ஆடிக்கொண்டிருக்க அந்த ஆட்டம் ஏற்படுத்தும் பிராண சலனம் இந்த அன்னமய உடலை உருவாக்குகிறது. ஆக தலையுச்சியில் உள்ள தில்லைச்சிற்றம்பலம் அன்னமய உடலை போசித்துக் காத்துக்கொண்டிருக்கிறது என்கிறார் அப்பர் பெருமான். அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற்றம்பலம்.
தலையுச்சியில் ஆயிரம் இதழ் கமலத்தில் ஆடும் இந்த தாண்டவத்தை அறிந்த சிவயோகிக்கு காரண உடல் பொன்னுடலாக வாய்க்கும். இதுவே பொன்னம் பாலிக்கு... இதனாலேயே தில்லைச் சிற்றம்பலம் பொற்சபை எனப்படுகிறது.
மேலும் இந்த பூமியில் இன்னும் வாழ்ந்து இந்த பொன்னுடல் பெற்று இன்புற இந்த உடலைத் தந்து என்னைக் காத்து வரும் புலியூர் எம்பிரானே என்று வணங்குகிறார்!
இந்தத் தேவாரம் நாம் எமது அன்ன உடலிற்கு உணவு அளிக்கும்போது இந்த அன்ன உடல் ஆயிரம் இதழ் கமலத்தில் சிவ பரம்பொருளின் தாண்டவத்தால் எமக்குக் கிடைத்த உடல் என்பதும், அதைப் போசிப்பது சிற்றம்பலம் என்ற பொற்சபையில் பொன்னுடல் பெறவே என்பதையும் ஞாபகத்தில் இருத்தி உணவை உண்ண வேண்டும் என்று இந்தத் தேவாரத்தை உணவருந்தும் போது படிக்கிறோம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.