அனைவரும் அழகினை அழகு என்று புரிந்துகொண்டால் அது விகாரப்பட்டுவிடும்!
அனைவருக்கும் நன்மை
எதுவென்று புரிந்துவிட்டால் பிறகு அது நன்மையற்றதாகிவிடும்!
ஆகவே இருப்பு,
இருப்பின்மை ஆகிய இரண்டும் ஒன்றை ஒன்று உருவாக்குகிறது!
கடினமும் இலகுவும்
ஒன்றை ஒன்று நிரப்புகிறது.
நீளமும் குட்டையும்
ஒன்று இன்னொன்றுக்கு வடிவம் தருகிறது.
ஒலியும் எதிரொலியும்
ஒன்று இன்னொன்றை உறுதிப்படுத்துகிறது.
முன்னதை பின்னது
தொடர்கிறது.
ஆகவே ஞானிகள் இவற்றைப்
புரிந்துகொண்டு
முயற்சியற்ற சேவையை
சொற்கள் அற்ற மௌன
உபதேசத்தால் போதிக்கிறார்கள்!
இந்தச் சூத்திரத்தின்
மீதான ஸ்ரீ ஸக்தி சுமனனின் குறிப்பு
************************************
இந்தச்சூத்திரம் மனித மனதின் இயக்கத்தினைப் பற்றியது! சபரிமலை புனிதமானது என்பதை உலகிற்கு அறிவித்துவிட்டதால் அந்தப்புனிதமான பூமியை அசுத்தப்படுத்த அருள் பெறப்போகிறேன் என்று கூட்டம் கூட்டமாக கிளம்பிவிடுவான்!
சதுரகிரியில் அபூர்வ மூலிகை இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரிவித்துவிட்டால் அவற்றை வேட்டையாட பேராசை கொண்ட மனிதன் மலையேறத்தொடங்கிவிடுவான்!
திருவண்ணாமலையில் ஜோதி இருக்கிறது என்று சொன்னவுடன் ஒவ்வொரு பௌர்ணமியும் பிளாஸ்டிக்கினால் அசுத்தபடுத்தி விடுவான்!
கற்றாழைக்கு புற்று நோய் நீக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டால் சாமானியனுக்கு கற்றாழை கிடைக்காமல் செய்துவிடுவான்!
இப்படி மனிதன் தனது பேராசையும், அதியாசையும் கொண்ட குணத்தால் எல்லாவற்றையும் தனக்குரியதாக்கிக் கொள்ளவேண்டும் என்று ஊசலில் ஒரு எல்லைக்குச் செல்வதையே வெற்றி என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் ஒரு அதி எல்லை இன்னொரு அதியெல்லையை உருவாக்குகிறது. மனிதப் பிணக்குகளில் இதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இப்படி இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தினைப் புரிந்துகொண்ட ஞானிகள் உண்மையை வெளிப்படையாக மக்களுக்குச் சொல்வதில்லை!
சித்தர்களும் இதனால்தான் பரிபாஷை என்று உண்மையை உணர்ந்தவன் மாத்திரம் புரியக்கூடிய, உணரக்கூடிய மொழியில் கூறிவைத்தார்கள்! பேசாத மந்திரம், மௌன அனுபவம் என்று கூறிவைத்தார்கள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.