தேவிபுரம் ஸ்ரீ
அன்னப்பூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரின் கருத்து! எது சரி என்பதற்கு ஆப்த
பிரமாணம் - உண்மையை உணர்ந்த பெரியவர்கள் கூறுவது என்பது உயர்ந்த ஒன்று! இவற்றை
சரியாகப் புரிந்து கொள்வது அவசியம். மந்திர சாதனை என்பது தானாக புத்தகங்களைப்
படித்துக்கொண்டு அந்த மகான் இப்படிக் கூறியிருக்கிறார், இந்த மகான் இப்படிக்
கூறியிருக்கிறார் என்று விதண்டாவாதம் செய்பவர்களுக்குரியதல்ல!
அவரவர் குரு முகமாகப் பெற்றுக்கொண்ட
உபதேசத்தின் வழி பயிற்சிக்க வேண்டியது! ஆகவே கீழே உள்ள உபதேசம் குறித்த அந்த
குருபரம்பரை கடைப்பிடிக்கும் நியதி என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சில குருபரம்பரை இந்த உபதேசம்
இன்னாருக்கு மாத்திரம் என்று வகுத்திருக்கிறது. சில குருபரம்பரை அகத்தகுதியுள்ள
அனைவருக்கும் என வகுத்திருக்கிறது. எனது குருநாதர் போன்றவர்கள் கேட்பவர்கள்
அனைவருக்கும் என்ற நியதி வைத்திருந்தார்கள். இவை அவரவர் ஆன்ம சுதந்திரம்! இதைப்
புரியாமல் அறியாமையில் ஒப்பிடுவது, வாதிடுவது சாதகர்களுக்குத் தேவையற்ற, பயனற்ற
விஷயம்.
*******************************************************
உரையாடல்
காயத்ரி/உபநயனம்
ஆண்களுக்கு மாத்திரம் உரியதா?
அப்படியானால் அப்படி
ஏன் சொல்லப்படுகிறது?
ஸ்ரீ அம்ருதானந்த நாதர்: காயத்ரி
(மந்திரம்) ஆண், பெண் இருவருக்கும் உரியது. பெண்கள் உபவீதத்தை சன்னவீரமாக
(மாலையாக) அணிந்துகொள்ளும் வழக்கம் இருக்கிறது. நான் பல பெண்கள், சிறுமிகள்,
இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்களுக்கும் காயத்ரி உபதேசம் தந்துள்ளேன். பிரம்மத்தை
அறியும் பிரம்ம உபதேசம் அனைவருக்கும் உரியது. இதுவே எனது நம்பிக்கை! நம்புவதற்கு
மேலாக செயலில் அனைவருக்கும் உபதேசித்திருக்கிறேன்.
கேள்வி: நீங்கள்
செய்வது பிழையாக இருந்தால்? (சாஸ்திர விரோதமாக இருந்தால்)
ஸ்ரீ அம்ருதானந்த
நாதர்: நான் எவ்வளவு உயர்வடைந்திருக்கிறேன் என்பது பற்றி எனக்குத் தெரியாது.
எனக்குத் தெரிந்த சிறிய அறிவிற்குள் இதைக் கூறுகிறேன். என்னுடைய பதில் பூரணமற்றதாக
இருக்கலாம், அப்படி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
மகாகவி காளிதாசர்
கூறுகிறார்: பிரபஞ்ச மாதாவாகிய அன்னை அனைத்திற்கும், அனைவருக்கும் அன்னை! அவன் மூடனோ,
அறிவாளியோ! அனைவரும் அவளை அவர்கள் அறிந்த வகையில் வணங்கலாம். அனைத்தையும் ஏற்று,
தவறுகளை மன்னித்து அவளை அடையும் பாதையில் செலுத்துபவள்.
இதை நாம் புரிந்துகொண்டு
அன்னையின் மந்திரம், யந்திரம் (மேரு) காரண சரீரத்தில் இருப்பது; காரண சரீரம் பௌதீக
உடலைத் தாண்டி குண்டலினி ரூபமாக இருப்பது; அங்கு ஆண், பெண், ஜாதி, மதம், நிறம்
ஆகிய எவையும் இல்லை.
நான் கூறுகிறேன் என்று நம்ப
வேண்டாம்; நான் பிழையாக இருக்கக்கூடும், பொதுவாக அனேகமானவை பிழையாகவும்
இருந்திருக்கிறது. நீங்களே சாக்த உப நிஷதங்களைக் கற்றுக்கொண்டு உணர்ந்துகொள்வது
சிறந்தது. திரிபுரதாபினி காயத்ரியிற்கும் ஸ்ரீ வித்தைக்கும் உள்ள தொடர்பினை ஆழமாக
விளக்குகிறது.
தேவிபுரம் ஸ்ரீ
அம்ருதானந்த நாதர்