மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விஷயங்களின் சுருக்க வடிவம், அவர்கள் மாத்தளை மாவட்ட பெருந்தோட்டப் பாடசாலை, சமூகத்தின் கல்வியில் அக்கறை செலுத்தி வருகிறார்கள். அவர்களுக்கான உதவிகளை எப்படி நாம் அனைவரும் சமூகமாகச் செய்யலாம் என்ற நோக்கம் கருதி இங்கு பொதுவில் பதிவிடப்படுகிறது.
எப்படி சமூக நன்மைக்காக ஒன்றிணைந்து செயற்படுவது?
முதல் அடிப்படை நாம் தனியனாக இருந்துக் கொண்டு எதையும் நிறைவேற்ற முடியாது என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வது.
நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதைப் புரிந்துக் கொள்வது. அனைவருடனும் சேர்ந்து இயங்குவதால் மட்டுமே நன்மையைத் தரமுடியும்.
இரண்டாவது நமக்குள்ளேயே போட்டி போடாமல் ஒருவருக்கு ஒருவர் எப்படி பலமாக இயங்குவது என்பதைக் கண்டறிவது.
அறிவும் திறமையும் ஒருவனிடம் இருக்கிறது, என்னிடம் பணம் இருக்கிறது. அறிவு, திறமை, பணம் மூன்றும் ஒன்றாகினால் ஒரு காரியம் நடைபெறும் என்பதை சரியாகப் புரிந்துக் கொண்டு நான் அந்தத் திட்டத்தில் பணத்தை மட்டும் தான் கொடுக்க வேண்டும்; அவன் காரியத்தை சரியாக நிறைவேற்றுவான் என்று நம்பிக்கை வைத்து அறிவுள்ளவனை நம்ப வேண்டும். இப்படி இல்லாமல் நான் பணம் தருகிறேன்; அதனால் நான் சொல்லுவதன் படி நீ கேட்க வேண்டும், நீ பணத்தை சரியாக பயன்படுத்த மாட்டாய் என்று அவநம்பிக்கை வைப்பது போன்ற சிறுபிள்ளைத்தனச் சிந்தனைகளை வைத்துக் கொண்டு பெரிய காரியத்தைச் சாதிக்க முடியாது.
அவன் திறமையானவன் என்பதைக் கூறும்போது நாம் என்ன அவனைவிடக் குறைந்தவனா என்றும், அவன் செய்தால் நான் ஏன் செய்யக் கூடாதா போன்ற போட்டிச் சிந்தனைகளை உருவாக்கினால் ஆகவேண்டிய காரியத்தைக் குழப்பியவர்கள் ஆவோம்.
மூன்றாவது சிறுபிள்ளைத் தனமான குறை கூறல், சந்தேகம் கிளப்புதல்! எவராவது நல்ல காரியம் செய்துவிட்டால் அவர்களுக்கு அந்த நோக்கம் இருக்கிறது, இந்த நோக்கம் இருக்கிறது! என்று தமது மனதிலுள்ள அசூயைக் கொட்டுவது இவை தவிர்க்கப்பட வேண்டும்.
ஆக,
1) நாம் எல்லோரும் குழுவாக ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.
2) குழுவில் உள்ள ஒவ்வொருவருடைய திறனையும் அறிந்து அவர்களை அவர்கள் செய்யத்தகுந்த செயலில் முன்னிறுத்த வேண்டும்.
3) உள்ளகப் போட்டியை (internal competition) இனை முழுமையாக இல்லாமல் ஆக்கி நாம் ஒருவருக்கு ஒருவர் எப்படி பலமாக இயங்க முடியும் என்று சிந்திக்கவேண்டும்.
4) இணைந்து செயலாற்றும்போது எல்லோருடைய பங்களிப்பும் தகுந்த முறையில் அடையாளம் காணப்பட்டு மதிப்பளிக்கப்படவேண்டும்.
5) குழுவிற்குள் ஒருவரை ஒருவர் குறை சொல்லுவது, நம்பிக்கையீனம் ஏற்படுத்துவது நடைபெறக்கூடாது.
6) நிதி, செயற்பாடு சரியாக நிர்வகிக்கப்பட வேண்டிய பொறிமுறையை உருவாக்க வேண்டும். இதனால் திட்டமும், நிதியும் சரியாக நடைபெறுகிறது என்ற உறுதி அனைவரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
7) இவற்றை அனைத்து அங்கத்தவர்களிடமும் திறந்த மனதுடன் உரையாடி புரிந்துணர்வினைப் பெற வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.