இவ்விரு பதிவுகளையும் வாசித்துவிட்டு இதனை வாசிக்கவும்.
அகத்தியர், போகர், கொங்கணவர் போன்ற சித்தர்கள் பற்றி நாம் இன்றும் ஏன் பேசிக்கொண்டு இருக்கிறோம்? அவர்களின் தாக்கம் எவ்வாறு இவ்வளவு காலம் இந்த பூவுலகில் இருக்கிறது ?அவர்களை நினைத்து பிரார்த்திப்பவர்கள் தரிசனம் பெறுகிறார்கள், நோய் நீங்கப்பெறுகிறார்கள், இப்படி பற்பல அற்புதங்கள் , அதற்கான காரணம்தான் என்ன? சித்தர்கள் எப்படி இதைச்சாதிக்கிரார்கள்?இதற்கு விடை அகத்தியர் கற்ப தீட்சை, அகத்தியர் பூரணசூஸ்திரம் 216 (தாமரை நூலகம் வெளியிட்டுள்ளது) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது, பாடல் வருமாறு,
விளையுமடா கிழக்காகக் காதம் மூன்றில்
வெகுவிதமாம் பொன்னிமிளை விளையும் பூமி
தளையுமடா பொதிகைமலைச் சார்பு தன்னில்
தாம்பிரவே ணிக்கரையில் அருவி ஆற்றில்
முளையுமடா அதனடுத்த தெற்கே காத
மூவிலையால் குருத்துந்தான் மரமுண்டாகும்
தளையுமடா அதிநடுவே சோதி விருட்சம்
தன்னோடு வெண்சாரை தானும் உண்டே.
தன்னையே கண்டவுடன் ரம்பிதேதேதான்
சார்வான நடுமையம் பிடித்தாய் ஆனால்
பின்னையே பிடித்தவிடங்க் கையிருக்கப்
பேராக விருதுண்டாய்ப் பொருந்திப் போகும்
மின்னையே கையில் இருக்கும் அதனைத் தின்றால்
இருபதினா யிரவருடம் இருத்தும் பாரு
பொன்னையே தேடாதே கற்பந் தேடு
பொருள்காணப் புருவ மையம் நோக்கிப் பூணே.
இந்தப் பாடல்களின் பொதுப்பொருளும் பொதிகைமலையில் பொன்னிமளை விளையும் பூமியில் வெள்ளைச் சாரை பாம்புள்ளது, அதனைப்பிடித்து தின்றால் இருபதினாயிரம் ஆண்டுகள் வாழலாம் என பொதுப்பொருள் கொள்ளலாம்.
அகத்தியர் பூரணசூஸ்திரம் 216 பாடல்களில் குறிவிலக்கத்தினையும் கூறி இந்த பதிவினை நிறைவு செய்வோம். இந்தப்பாடலில் குருதேவர் அகத்தியர் பிராணசக்தியான குண்டலினியை சுழுமுனையின் நடுவில் உள்ள சித்திர நாடியினூடாக செலுத்தும் போது ஏற்படும் அனுபவங்களை தடங்கல்களை நீக்கி எப்படி காயசித்தி செய்வது என்பது பற்றி பரிபாசையாக கூறியுள்ளார்.
விளையுமடா கிழக்காகக் காதம் மூன்றில் வெகுவிதமாம் பொன்னிமிளை விளையும் பூமி: கிழக்கு என்பது சூரியன் உதிக்கும் திசை, பொன்னிமிளை என்பது மூலாதாரம் என்பதனைக் குறிக்கும். சூஷ்ம உடலில் மூலாதாரத்திலிருந்து கிழக்காக என்றால் சூரியமண்டலத்தினை நோக்கி அதாவது மேல் நோக்கி, மூன்று காதம் என்றால் மூன்று விரலளவு எனக் கொள்ளலாம், மூலாதாரத்தில் இருந்து முன்று விரலளவு தூரத்தில் உள்ளது பொதிகை எனக்குறிக்கப்படும் யோக நாடிகளது உற்பத்தி ஸ்தானம் எனக்குறிக்கப்படும் காண்டம்.
தளையுமடா பொதிகைமலைச் சார்பு தன்னில் தாம்பிரவே ணிக்கரையில் அருவி ஆற்றில்: அந்த யோக நாடிகளது உற்பத்தி ஸ்தானத்தில் இருந்து தாமிரபரணி நதியிலிருந்து வரும் அருவிகள் போல் பல யோக நாடிகள் உருவாகின்றன.
முளையுமடா அதனடுத்த தெற்கே காத மூவிலையால் குருத்துந்தான் மரமுண்டாகும்: நீங்கள் கிழக்காக சூரியனை நோக்கி நின்றால் தெற்குப்பக்கம் வலப்புறமாய் வரும், பொதிகை எனப்படும் யோக நாடிகளது உற்பத்தி ஸ்தானமான காண்டத்திலிருந்து இருந்து ஒரு விரலளவு வலப்பக்கமாய் பார்த்தால், மூன்று பாகமாய் (குருத்துக்கள்) உள்ள சுழுமுனை (சுழுமுனை, வஜ்ரை, சித்திரை நாடிகள்தான் இந்த மூன்று குருத்து)நேராக (மரமாக) நிற்கும்.
தளையுமடா அதிநடுவே சோதி விருட்சம்: அதனுள் சூரிய பிரகாசமுடைய வஜ்ர நாடி
தன்னோடு வெண்சாரை தானும் உண்டே: அதனுள் வெண்ணிறமான சித்திர நாடி
தன்னையே கண்டவுடன் ரம்பிதேதேதான்: உன்னை நீ அறியும் காலத்தில் பிராணன் இந்த நாடிகளுல் செல்லப்பார்க்கும்.
சார்வான நடுமையம் பிடித்தாய் ஆனால்: அப்படியான நேரத்தில், அதாவது தன்னை அறியும் நேக்கத்துடன் யோக சாதனை புரியும் காலத்தில் இந்த நடுமையமான சித்திர நாடியினுள் பிராணனை செலுத்துவாயானால்,அந்தப் பிராணன் சித்திர நாடியினூடாக படிப்படியாக ஒவ்வொரு ஆதாரங்களினுள்ளும் செல்லும்.
பின்னையே பிடித்தவிடங் கையிருக்கப்: அப்படி ஒரு ஆதார சக்கரத்தினை விழிப்படையச் செய்து இருக்கும் நேரத்தில்,
பேராக விருதுண்டாய்ப் பொருந்திப் போகும்: இது யோகசாதனையில் வரும் தடங்கல்களை குறிக்கும், ஒரு ஆதாரச் சக்கரம் விழிப்படைந்து குண்டலினியாகிய பிராணசக்தி மேலேறும் போது எமது சித்த விருத்திகள் சரியாக எரிக்கப்பட்டிராவிட்டால் மீண்டும் இந்த சித்திர நாடியின் (வெண்சாரையும்), வஜ்ர நாடியும் (சோதிவிருட்சம்) அதிக பிராண ஓட்டத்தினால் குறித்த சம்ஸ்காரத்தினை விழிப்படைய வைக்கும். அவ்வாறான நிலையில் பிடித்தவிடம் கையிலிருக்க அதாவது விழிப்படைந்த ஆதாரம் விழிப்பிலிருக்க, இரு நாடிகளும் பொருந்திப் போகும்.
மின்னையே கையில் இருக்கும் அதனைத் தின்றால் இருபதினா யிரவருடம் இருத்தும் பாரு: அப்படியான நிலையில் விழிப்படைந்த ஆதாரச் சக்கரத்தினூடு பிராணணை நிலைப்படுத்தி காயசித்தியினைப்பெறவேண்டும், அப்படியான நிலையில் இருபதினாயிரம் வருடங்கள் வாழலாம் என்கிறார், அதாவது எமது சூட்சும உடலின் பிராண அதிர்வு இருபதினாயிரம் ஆண்டுகள் இந்த பூவுலகில் நிலைத்து நிற்கும் என்பதே இதன் பொருள்.
பொன்னையே தேடாதே கற்பந் தேடு பொருள்காணப் புருவ மையம் நோக்கிப் பூணே: இப்படி ஒரு ஆதாரம் விழித்து பிராண மனோ சக்தி நிறைந்துவிட்டால் வரும் அதீத சக்தி கொண்டு பொன்னைத் தேடாதே, பூரண கற்ப நிலையடைய புருவமத்தி வரை ஒழுங்காக பிராண சக்தியினை கொண்டு சென்று பரம் பொருளை அடைவாயாக!
அடுத்து இதன் பயன்பாடு விரிவான விளக்கம் என்ன என்பதை பார்ப்போம்.
தற்போது வாசகர்களுக்கு விளங்கியிருக்கும் என எண்ணுகிறோம். சித்தர்கள் தமது ஆதார சித்திக்கேற்பவே இந்த பூமியில் அவர்களது உணர்வு நிலைத்து நிற்கிறது. தமது பிராணசக்தியினை ஆறாதாரம் வழி செலுத்தி நிலைத்து நிற்கச்செய்யும் யோகியின் , சித்தரின் உணர்வு பல்லாயிரம் ஆண்டு நிலைத்து அவர்களை நினைக்கும் அனைவருக்கும் உதவிபுரிந்து வரும். காவல் தெய்வங்கள், சிறு தெய்வங்கள் குலதெய்வங்கள் என்பவைகூட இப்படியான ஆதார சித்தியடைந்து தமது உணர்வினை பூவுலகில் பதிப்பித்து விட்டுச்செல்பவையே. அவர்களது பிராணசக்தி ஒன்றிய நிலைக்கேற்ப அவர்களது தெய்வசக்தி இருக்கும். கீழ் ஆதாரங்களில் ஒடுங்கினால் சிறுதெய்வங்களாக குறித்த ஒரு பகுதியினருக்கு மட்டும் உதவுபவர்களாக (உதாரணம்: குலதெய்வங்கள், கிராமதேய்வங்கள் ) மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலுடன் இருப்பார்கள். விருப்பு வெறுப்புடன் பலிபூஜை காணிக்கை கொடுத்தால் காரியம், பழிவாங்கல் என்பவற்றை செய்வார்கள்). கீழ் ஆதாரங்கள் என்பவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் சுத்தியடையாமல் இச்சக்தி விழிப்படைந்தவர்கள்.
அனாகதம் முதல் ஆஞ்ச (புருவ மத்தி) வரை விழிப்படைந்தவர்கள் அவர்களுக்கு அடுத்தநிலையிலிருந்து மக்களை வழிகாட்டும் ஞ்ன குருக்கள். இந்த நிலையினை அடைந்தவர்கள் உலக நன்மைக்காக தம்மை ஈடுபடுத்தி மொத்த மனிதகுலமும் பரிணாமத்தில் உயரவேண்டும் என்ற நோக்கில் தமது பிராண சக்தியினை பயன்படுத்தி மக்களை வழிகாட்டுவர். பெரும்பாலான சித்தர்கள் இந்தப்பிரிவினை சேர்ந்தவர்கள்.
புருவமத்திக்கு மேல் பிராணசக்தியினை நிலையாக விழிப்படைய செய்து பராசக்தியுடன் ஒன்றிய சித்தர்கள் ஆற்றல் அந்த பராசக்தியின் ஆற்றலுக்கு நிகரானது. நாம் வணங்கும் மகாசித்தர் அகஸ்தியர், போகர், காகபுஜண்டர் போன்ற சித்தர்கள் கிருஷ்ணர் போன்றவர்கள் இந்த நிலையினை அடைந்தவர்கள்.
இந்தப் பாடலின் விளக்கம் மூலம் குருதேவர் ஒவ்வருவரும் தமது சாதனை மூலம் குண்டலினி விழிப்பித்து இப்ப்பிரபஞ்ச்சத்தில் அனைவருக்கும் உதவும் தெய்வ சக்தியாகலாம் என்ற சூட்சுமத்தினை விளக்கியுள்ளார். இதனை அறிந்து அனைவரும் தெய்வசக்தியாகிடலாம் என்று சாதனை செய்திடுவோம்.
குருபாதம் போற்றி!