கடந்த கால வரலாற்றினை கூர்ந்து ஆராய்ந்து உலகம் பயணிக்கும் திசையிற்கு தமது வரலாறு தந்த பாடம் என்னவென்று கற்காமல் தனிமனித துதிபாடும் எந்த இனமும் சிறப்புறுவதில்லை.
காலம், தகுதியான நபரை அக்காலத்திற்குரிய தலைவராக தேர்ந்தெடுக்கும். சிறப்பான நபரை அல்ல! காலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அக்காலத்திற்குரிய சமூகத்தை புதிய திசையில் செலுத்தும் கருவியாக இருப்பார்! அந்த சமூகம் குறித்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்லும்போது அந்தத் தலைவர் பின்பற்றிய கொள்கையில் சிலது தற்காலத்திற்கு ஒவ்வாத முட்டாள்தனம் போல் இருக்கலாம்; மற்றவை சிறப்பாக இக்காலத்திற்கும் பொருந்தலாம். அதை அப்படியே தரவாக்கி அது எமக்குத் தந்த பாடத்தைத் தவிர வேறு ஒன்றும் வரலாற்றிலிருந்து சிறப்பாக மனிதர்களுக்கு பயன்படப்போவதில்லை.
வரலாற்றில் இருந்த நபர்களைத் துதிபாடுவதும், வசைபாடுவதும், பொதுமைப்படுத்துவதும் தம்மையோ, தாம் சார்ந்தவர்களையோ மையமாக உருவாக்கும் அரசியலிற்கான நுண்ணிய நகர்வு!
வள்ளுவர், லா வோட்ஸு போன்றவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் விதி வகுத்த பிரபஞ்சப் பேர் அறம் அறிந்தவர்கள்.
இவற்றில் தள்ள வேண்டியவற்றை தள்ளி, கொள்ளவேண்டியவற்றைக் கொள்வது அறிவுடையவர்கள் செயல்! அதைவிடுத்து தனிமனிதர்களை துதி பாடுவது, வசைபாடுவது இரண்டும் ஒருவித சமநிலையின்மையையே தோற்றுவிக்கும்!
இன்றைய காலத்திற்குத் தேவையானது அடுத்த பத்தாண்டுகளுக்கு பூகோள அரசியல், பொருளாதாரம் எப்படிச் செல்லப்போகிறது, அதற்கு உகந்த வகையில் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு திறனை வளர்க்க என்ன செயல் திட்டமிடுவது? பொருளாதாரத்தை வளர்க்க என்ன செய்வது? என்பது பற்றிய தெளிவான விவாதமும் செயலுமே!
அதைவிடுத்து இருநூறு வருடத்திற்கு முன்னர் வாழ்ந்தவரை கொண்டாடுகிறோம் என்று ஒருவர் தொடங்க, அவர் கொண்டாடுவதற்கு தகுதியானவாரா? என்று இன்னொருவர் வாதத்தை எழுப்ப, அவர் பெரியா ஆளா, இவர் பெரிய ஆளா என்று வாதம் களைகட்ட, ஒருவர் சேறுபூச என்று முகநூலில் இரணகளப்படுத்த மார்க் சுக்கப்பன் ஒவ்வொருவர் மனதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து இவர்களது விவாதங்களை தரவாக்கி இவர்களை எப்படி தூண்டிவிட்டு எனது காரியத்தைச் செய்யலாம் என்ற செயற்கை நுண்ணறிவை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.