சத்தியும் சிவமும் ஆயதன்மை
இவ்வுலகம் எல்லாம்
ஒத்து ஒவ்வாஆணும் பெண்ணும்
ஆக உணர்குண குணியும்ஆகி
வைத்தனன் அவளால்வந்த ஆக்கம்
அவ்வாழ்க்கை எல்லாம்
இத்தையும் அறியார்
பீடலிங்கத்தின் இயல்பும் ஓரார்.
சிவ ஞான சித்தியார் சுபக்கம் - 89
ஆகமங்களில் வெவ்வேறு வடிவ சிவலிங்கங்கள் என்பதற்குரிய அர்த்தத்தினை இந்தப்பாடலினூடாகப் பெற முடியும்.
சக்தியும் சிவமுமே இந்த உலகத்தின் இரகசியம் எல்லாம்! ஆயம் என்றால் இரகசியம் என்று பொருள்! ஆயத்தன்மை என்றால் இரகசியத்தின் தன்மை என்று அர்த்தம்.
இந்த சிவசக்தி இரகசியம் என்னவென்றால் ஒத்திசைந்து சேர்ப்பதும், பிரிந்து விரிவதும்;
இது எப்படி என்றால் ஆண் உணவை உண்டு சேர்த்து சுக்கிலமாக்கி வித்தாகக் கொடுத்தால் பெண் அதைப் பெற்று விரித்து பல்கலங்கள் கொண்ட குழந்தையாக்கித் தருவதைப் போல்,
உணருவது சிவமாகவும் (உணர் குண), உணரப்படும் அனுபவம் (குணி) சக்தியாகவும் இருப்பதைப் போல்! எல்லாவற்றிற்கும் மூலமாக சிவம் இருக்க அந்த வித்தைப் பெற்று இந்தப் பிரபஞ்சத்தையெல்லாம் ஆக்கி வாழ்வைத் தருபவள் சக்தியாக இருக்கிறாள்.
சிவமாகிய இலிங்கம் மூலமாக இருக்க அதைத்தாங்கும் பீடமாக சக்தி நிற்கிறாள்; இப்படி நிற்பதால் இந்த வாழ்க்கை உயிர் பெறுகிறது; இந்த உண்மை அறியாமல் பீடமும் இலிங்கமும் சேர்ந்து என்ன உண்மையைச் சொல்ல வருகிறது என்பதை அறியாமல் சிவஞானத்தை நோக்கிச் செல்லமுடியாது.
சிவமும் சக்தியும் சேர்ந்து எப்படி பிரபஞ்சத்தைப் படைக்கிறது என்று அறிவதே சிவலிங்க வழிபாட்டின் குறிக்கோள்!
இலிங்கத்தை உபாசித்து சிவசக்தி ஆயம் - இரகசியத்தை சூக்ஷ்ம அறிவைப் பெற்றவன் அடுத்து சிவசக்தி ஐக்கியம் எப்படி சதாசிவ ரூபத்திற்கூடாக பஞ்சீகரித்து பஞ்சபூதமாக விரிகிறது என்ற அறிவைப் பெறுவதற்குத் தகுதி பெறுவான்!
ஆகமங்கள்/தந்திரங்கள் என்பது இத்தகைய சூக்ஷ்ம அறிவை மனிதன் எப்படிப் பௌதீக நன்மையை மக்கள் பெறுவது என்ற தொழில்நுட்ப அறிவு.
உலக நன்மையைப் பெற க்ஷணிக லிங்கங்கள் அமைத்து பூஜை செய்வதன் மூலம் பலன் பெறலாம் என்பதும், இன்ன பலனிற்கு இன்ன நிறப் பூக்கள் பயன்படுத்துவது என்பதும் சிவசக்தி ஐக்கிய இரகசியமே!
இந்த சிவஞான சித்தியார் பாடல் நேற்று Lambotharan Ramanathan ஐயா அவர்கள் பகிர்ந்திருந்தார். அதைப் படிக்கும் போது ஏற்பட்ட அகப்புரிதல் இந்தப்பதிவுகள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.