ஆக ௐ சுத்தமாயையும், பரசிவ ஓளியும் கலந்த நாதம்.
பின்னர் இந்த ஓம் என்ற நாதம் விந்து தத்துவமாக விரியத்தொடங்கியது.
இது எப்படி எனில் மின்னலும், இடியும் தோன்ரும் விதத்தை ஒப்பிட்டு விளங்கி கொள்ளலாம். ஒடுங்கிய மேகங்கள் கீழிருந்து வரும் மேகங்களுடன் மோதி மின்னலை உருவாக்குகிறது. இந்த மின்னலால் நாதமாகிய இடி உருவாகிறது. இதுபோன்ற ஒரு செயல் முறை சிருஷ்டியின் ஆதியில் நடைபெற்றது . ஏற்கனவே இருக்கும் மேகம் போன்றது பரசிவம், அந்த சாஸ்வதமான பிரசிவத்துடன் கீழிருந்து ஒடுங்கிச் செல்லும் மேகம் போன்ற சுத்த மாயை உராயும் போது உருவாகும் நாதமே ஓங்காரம், மேகம் உராயும் போது ஒளி, ஒலி, மழை ஆகிய மூன்றும் வருகிறது. இது போல் பரசிவமும், சுத்த மாயையும் உராயும் போது ஓளியும், ஓங்கார நாதமும், விந்து என்ற கருவும் உருவாகிறது.
உருவாகிய நாதமே சித்தர்களும், ரிஷிகளும் கூறும் தத்துவங்கள் எல்லாவற்றிற்கும் முதன்மையான தத்துவம். இதுவே எல்லா ஆன்மாக்களுக்கும் உண்மை அறிவை விழிப்பிக்கச்செய்யும் ஆற்றல் உள்ள ஞானம். இது அளக்கவோ, உரைக்கவோ முடியாதது. எங்கும் நிறைந்டதாகவும், நித்தியமாயும், பிறப்பு இறப்பற்றதாகவும் இருக்கிறது. இந்ததத்துவம் எல்லாவற்றிற்கு மேலாக இருப்பதாலும் சிவத்திலிருந்து தோன்றியதாலும் இதற்கு சிவதத்துவம் என்று சொல்வார்கள். இந்த சிவம் என்ற நாத தத்துவமே தோற்றக்கிரமத்தில் முதலாவதும், லயம் எனும் ஒடுக்க கிரமத்தில் முப்பதியாறாவது தத்துவமுமாகும்.
சிவத்தில் இருந்து தோன்றியது நாதம் என்பதுபோல் சுத்த மாயை எனும் குடிலையில் இருந்து தோன்றிய தொனியானது வட்ட வடிவ விந்துவாகும். இதனை சக்தி தத்துவம் என்று கூறுவர். இது தோற்றக்கிரமத்தில் 35வது தத்துவமாகும்.
இந்த நாதமும் விந்துவும் விரிந்து பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற பஞ்சபூதங்களாகவும், வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபஸ்தம் என்ற கர்மேந்திரியமாகவும், சுரோத்திரம், துவக்கு, சட்சு, ஜிவ்வா, ஆகிராணம் ஆகிய ஞானேந்திரியமாகவும் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம் என்ர தன்மாத்திரைகளாகவும், மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்ற அந்தக்கரணமாகவும் ஆக இருபத்தி நான்காக விரிந்து ஆன்ம தத்துவமாக மனிதனில் உண்டாகியது. இதை அசுத்த தத்துவம் என்று சொல்லப்படும். இதுபற்றி விரிவாக அதர்வண வேத பிரசினோபனிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பிரக்ருதி, புருஷன், அராகம், வித்தை, கலை, நியதி, காலம் ஆகிய ஏழாக விரியும் தொகுதி வித்யா தத்துவம் எனப்படும். இவை சுத்தாசுத்த தத்துவமெனப்படும். இது பற்றி க்ருஷ்ண யஜூர்வேத சுவேதாசுவதரோபனிஷத்திலும், அதர்வண வேத நாரதபரிவிராஜகோபனிஷத்திலும் கூறப்பட்டுள்ளது.
சுத்த வித்தை, ஈசுவரம், சாதாக்கியம், சக்தி அல்லது விந்து, சிவம் அல்லது நாதம் ஆகிய ஐந்தும் சிவதத்துவம் எனப்படும். இதிபற்றி அதர்வண வேத பிருகஜ்ஜாபாலோப நிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
இப்படி 36 தத்துவங்களாக விரிந்துள்ளவற்றிற்கு உறைவிடமாய் மூலமாய் இருப்பது நாத தத்துவம். இதிலிருந்தே பிரபஞ்ச சிருஷ்டி நடைபெறுகிறது என்பது எமது ரிஷிகளும் சித்தர்களும் கண்ட உண்மை.
மேற்சொன்ன தத்துவங்கள் இயங்க முதற்காரணங்கள் சுத்தம், சுத்தா அசுத்தம், அசுத்தம் என மூன்று வகைப்படுத்தப்படுகிறது.
- சுத்த மாயை அல்லது பரப்பிரக்ருதி
- அசுத்த மாயை அல்லது அபரப்ரக்ருதி
- பிரக்ருதிமாயை அல்லது மூலப்ரக்ருதி
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.