சித்த தாந்திரீக சாதனை பயிற்சி

இந்த பிரபஞ்சம் என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டு இடைத்தொடர்பு அடையும் உயிருள்ள தொகுதி. (Universe is Interlinked and interacting system) பிரபஞ்சம் எனும்போது நட்சத்திர மண்டலங்கள், நவகோள்கள், பூமி, உயிரினங்கள் அனைத்தும், மற்றும் மனிதன் சேர்ந்த முழுமையான அமைப்பு.  இந்த மொத்த அமைப்பும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு, ஒன்றிலிருந்து ஒன்று சக்தியினை பெற்று வளர்ந்து வருகின்றது.

மனிதன் என்பவன் தனது உணர்வின் சக்தி கொண்டு இந்த சக்தியின் அளவினை தனக்கு தேவையான அளவு பெறக்கூடிய ஆற்றல் உள்ளவன். மற்றைய படைப்புகளில் இத்தகைய ஆற்றல் குறைவு. மனிதனது பரிணாமம் இந்த மண்டலங்களில் இருந்து தான் பெறும் சக்தியின் அளவில்தான் தங்கியிருக்கின்றது.

மனிதனது உலக வாழ்க்கையினை தீர்மானிக்கும் பிரபஞ்ச சக்திகள் பன்னிரண்டு ராசிகளில் அடங்கியிருக்கும் இருபத்தியெட்டு நட்சத்திரங்கள், சூரியன் முதலான நவகோள்கள் என்பனவாகும். மனிதன் தான் எடுக்கும் எண்ணத்திற்கு ஏற்ப உணர்வின் சக்தி கொண்டு நவகோள்களில் இருந்து சக்தியினை பெறுகின்றான். நவகோள்கள் இதற்கு ஏற்றாற்போல் நட்சத்திர மண்டலங்களில் இருந்து சக்தியினை பெற்று சேமித்து பூமிக்கு வழங்க்கின்றன. இந்த சக்தி பரிமாற்றத்தினை சரியாக மனித உணர்வு கொண்டு இயக்குவதற்கு அமைக்கப்பட்ட அமைப்புதான் கோயில்களில் காணப்படும் நவக்கிரக சன்னதிகள், ஆனால் இன்று நாம் இயக்குவதில்லை. ஜோதிடர் கூறும் பலனைக்கேட்டுக்கொண்டு பயந்து, பதறி கெஞ்சுகிறோம். ஆனால் கோயில்களில் அமைக்கப்பட்ட நவக்கிரகங்கள் பிரபஞ்ச நவக்கிரகங்களுடன் இணைக்கப்பட்ட “விசைப்பலகைகள்” (switch) ஆகும். கோயில் அமைப்புகள் ஆகம தந்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் அமைந்தவை. ஆகம தந்திர சாஸ்திரங்களின் சுருக்க உண்மை “அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு”.

சித்தர்களால் கோயில்கள் அமைக்கப்பட்டதன் நோக்கம் உண்மை நோக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளது;

 1. கோயிலின் அமைப்பினை முழுமையாக உணர்ந்து பிரபஞ்ச சக்தி எப்படி செயற்படுகிறது என்று அறிதல்,
 2. கோயிலில் காணப்படும் அமைப்புகள் அனைத்தும் பிரபஞ்ச சக்திகளுக்கான விசைப்பலகைகள்” (switch) என்று அறிதல்.
 3. பின்னர்  எமது உடலிற்கும் பிரபஞ்ச சக்திகளுக்கும் உள்ள தொடர்பினை விளங்கி, உடலில் அந்த பிரபஞ்ச சக்திகளினை விழிப்பிக்கும் விசைப்பலகைகள்” (switch) எங்கே இருக்கின்றது என்பதனை அறிதல்.
 4. பின்னர் கோயில்களில் உள்ள விசைப்பலகையும் உடலில் உள்ள விசைப்பலகையும் எமது மனதையும் உடலையும் உபயோகித்து இணைத்து தெய்வசக்தியினை பெறுவதே உண்மையான கோயில் வழிபாட்டின் நோக்கம்.

இதுவே சித்தர்கள் கோயில்கள் அமைத்ததன் நோக்கம். ஆனால் இன்று கோயில்கள் பூஜைகள், திருவிழாக்கள், என்று கேளிக்கை கூடங்கள் ஆக்கப்பட்டு விட்டன, பணம் சம்பாதிக்கும் இடமாகிவிட்டது, எமது பிரச்சனைகளை துன்பங்களை புலம்பும் இடமாகி விட்டது.

மேலும் கும்பாபிஷேகம், அர்ச்சனை, அபிஷேகம் என்ற பெயரில் பெருமளவு பணத்தை செலவழிக்கும் அதேவளை மேலே நாம் குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி இணைப்பு சரியாக ஏற்படுத்தப் படுகிறதா என்பது கேள்விக்குறியே!

தந்திர சாஸ்திரம் இத்தகைய மாயைகளில் இருந்து விடுபட்டு தெய்வசக்தியினை நேரடியாக தொடர்பு கொள்ளும் வழிமுறையினை காட்டும் ஒரு விஞ்ஞான மார்க்கமாகும். மனிதன் தனது உடலையும், மனதையும் சரியாக பயன்படுத்த தெரிந்தால், அவனது உடலே கோயில்! இதைத்தான் திருமூலர் இதனை திருமந்திரத்தில் இப்படிக் கூறுகிறார்.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்

உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே


ஆக உடம்பில் உள்ள உறுபொருளை அறிந்து கொண்டால் உடம்புள்ளே உத்தமன் கோயில்கொண்டான் என்பதனை அறிந்து கொள்ளலாம்.

உடல், மனம், பிரபஞ்ச சக்திகளை இணைத்து பலன் பெறும் விஞ்ஞான தொழில்நுட்பத்திற்கு பெயர் "தாந்திரீகம்"

இத்தகைய தாந்திரீக முறைகள் மூலம் எமது மனதிலும் உடலிலும் தெய்வ சக்தியை விழிப்பித்து எமது வாழ்க்கைக்கு தேவையான இன்பங்களையும் பெற்று பெற உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களுக்கு தேவையான பண்பு சிரத்தையும், முயற்சியும் தொடர்ச்சியான பயிற்சியும் ஆகும். 

இவற்றை நீங்கள் முறைப்படி கற்றுக்கொண்டு பயிற்சிசெய்து பலன் பெற விருப்பம் இருப்பின் இந்த வலைத்தளம் வழிகாட்டும், நீங்கள் செய்ய வேண்டிய ஒழுங்கு முறையினை சுருக்கமாக கீழே தந்துள்ளோம், 
 1. உங்கள் வீட்டில் பூஜை அறை இருந்தால் அதில் உங்களுக்கு அமர்ந்து நாம் கூறித்தரும் சாதனையினை தினமும் பயிற்சி செய்வதற்கு உரியவகையில் ஒழுங்கு செய்துகொள்வது. அப்படி தனியாக ஒதுக்க முடியாமல் இருப்பின் நீங்கள் படுக்கையறையில், வசிக்கும் அறையில் ஒரு இடத்தினை ஒதுக்கி கொள்ளுங்கள்.
 2. தினசரி காலை, மாலை இந்த பிரத்தியேக இடத்தில் அமர்ந்து அமைதியாக இருந்து, ஆழ்ந்த மூச்சினை எடுத்து நிதானமாக வெளிவிட்டு (அடக்க கூடாது!) உடலை அமைதிப்படுத்தி கீழே தரப்பட்ட சித்த வித்யா குருமண்டல பத்து குரு நாமங்களையும் குறைந்தது ஐந்து தொடக்கம் பத்து நிமிடங்கள் உச்சரித்து இறுதியில் கீழ்வருமாறு “ நான் ஆத்ம சக்தி பெற்று சாதனை பெறுவதற்குரிய பக்குவமும், பண்பும் பெறவேண்டும்” என  பிரார்த்திக்க வேண்டும். இப்படி நாற்பத்து ஐந்து நாட்கள் பயிற்சித்த பிறகு தெய்வ உபாசனையினை தொடங்கலாம்.
 3. தெய்வ உபாசனைக்கு எமது வலைத்தளத்தில் இருவழிமுறைகளை கூறியுள்ளோம். அவை காயத்ரி உபாசனை, ஸ்ரீ வித்யா உபாசனை. இவை தொடர்பான பதிவுகள் அனைத்தையும் படித்து, உங்களை நன்கு ஆராய்ந்து உங்களுக்கு பிடித்தமான ஒரு வழிமுறையினை தேர்ந்து எடுத்துக்கொண்டு எமக்கு அறியத்தாருங்கள்.
 4. நீங்கள் அறியத்தந்த பின்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 08.00 – 08.40 அளவில் நீங்கள் உங்கள் வீட்டில் சாதனை இடத்தில் அமர்ந்து, ஏற்பு நிலையில் இருந்து குரு மந்திர ஜெபத்தினை செய்து, உங்கள் சாதனையினை (காயத்ரி அல்லது ஸ்ரீ வித்யா) தொடங்கும் போது அதற்குரிய மூலசக்தி உங்களில் விழிப்படையும்.
 5. இதன்பின்னர் தொடர்ச்சியாக சாதனையினை செய்துவர உங்களில் மெதுவாக தெய்வ சக்தி விழிப்படைந்து, கர்ம பிரபாவம் குறைந்து, எப்போதும் நன்மையே கிடைக்கும் நல்வாழ்க்கை கிடைக்க ஆரம்பிக்கும்.
 6. இந்த ஆரம்ப நிலை சாதனைகளை தொடர்ச்சியாக செய்து எம்முடன் தொடர்பினை ஏற்படுத்த உங்கள் பக்குவத்திற்கேற்ப படிப்படியாக உடலில் உள்ள தெய்வசக்தி கேந்திரங்களை விழிப்பிக்கும் சாதனைகள் கற்பிக்கப்படும். இவற்றை கற்றுக்கொள்ள நீங்கள் தொடர்ச்சியாக தரப்பட்ட சாதனைகளை செய்வதும், எம்முடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருப்பதும் அவசியமானதாகும்.
 7. உயர் நிலை சாதனைகளில் காயத்ரி பிரபஞ்ச சக்தி தியானம், ஸ்தூல சூக்ஷ்ம உடலில் அட்சர சக்தி விழிப்பு மூலம் உலகவாழ்க்கைக்கு தேவையானவற்றை பெறுதல், சித்தத்தில் உள்ள பாவப்பதிவுகளை அகற்றும் சாதனை, யக்ஞ தந்திர சாதனை மேலும் பல அறிய விடயங்களை கற்றுக்கொள்ளலாம். இவை நிச்சயமாக கூறும் விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்து சாதனை செய்யும் மாணர்வர்களுக்கு மட்டுமே!


இதில் ஆர்வம் இருந்தால் மின்னஞ்சலில் விருப்பத்தை அறியத்தந்து விட்டு இதில் தரப்பட்ட படி  உங்கள் முயற்சியினை தொடங்குங்கள், குருமண்டலம் உங்களுக்கு வழிகாட்டும்! 

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு