வாராஹி உபாசனை என்ற இந்த நூல் நான் சிறுவனாக இருக்கும் போது கைக் காசு (அது தாங்க pocket money) சேர்த்து வாங்கிய புத்தகங்களில் ஒன்று! வாங்கும் போது எதற்காக வாங்கினோம் என்று தெரியவில்லை! ஆனால் பிற்காலத்தில் குருமண்டலத் தொடர்பால் தெரிந்துக் கொள்ள வேண்டியதற்கான முன்னறிவிப்பு என்பது புரிந்தது.
வாராஹியைப் பற்றி தேடுபவர்களுக்கு இந்த நூலில் கடைசியில் துர்க்கைச் சித்தர் பெருமான் சொல்லும் ஒரு அரிய செய்தி;
"மஹாவராஹி தேவியைப் பற்றி மந்திர சாஸ்திர நூல்களில் பல செய்திகள் உள்ளன. சில இடங்களிலும், சில விஷயங்களிலும் ஒரே செய்தி ஒன்றை ஒன்று எதிர்த்து நிற்கும். சாஸ்திரங்களைப் படிப்பதில் ஒரு வகையான சிறந்த பழக்கம் உண்டு. இதை குருமுகமாக கற்க வேண்டும். தெரிந்த விஷயம் இதுவே தெரியாத விஷயத்துடன் கலந்து போய்விடும். மந்திரங்கள் அதன் செயல் தன்மை, அதன் பரிமாணம், அதன் பயணகாலம், பயணதூரம் இவைகளைப் பற்றி எல்லாம் குருவருளால் தான் சித்திக்கும். புரச்சரணை நெறியில் இருந்து வழுக்கி விழுந்துவிடக் கூடாது. இது தன்னைத் தானே கீழே தள்ளுவதுடன், தன்னால் உதவிபெற வந்தனவையும் சேர்த்துத் தள்ளிவிடும்.
எல்லா தேவி மந்திரங்களையும் தானே குருவாக இருந்து தனக்கே ஜெபம் செய்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்த பரதேவியான வாராஹியிடம் அப்படி நடந்து கொள்ளக் கூடாது. கருணை நிறைந்தவள் இவள், அத்துடன் கடுமையும் கொண்டவள். அருளைத் தரும் இவளே அழிவையும் செய்பவள். குளிர்மையானவள் இவள், அதே சமயத்தில் கொடும் தணலாகச் சுடுபவள். எனவே தான் வாராஹி தேவியை நன்கு ஞானம் பெற்றவர்களிடத்தில் உபதேசம் பெற வேண்டும் என்று குருமார்கள் சொல்லிக் கொண்டு வந்துள்ளார்கள். பழைய கால குருமார்கள் தங்கள் சீடர்களின் நல்ல சந்தோஷத்தை கேட்கவும் அதைக் கண்களால் பார்க்கவும் ஆசைப்பட்டார்கள், அவர்கள் மஹனீயர்கள் - மஹான்கள்!
ஆகவே ஆர்வமுள்ளவர்கள் விஷய ஞானத்தைத் தேடாமல் குருமுகமாய் அறிய வேண்டும் என்பது இந்த ஆஷாட நவராத்ரியில் உபாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.