யாழ்ப்பாணத்தில் 5G தொழில் நுட்பத்தினை டயலொக் நிறுவனம் பரீட்சிக்க ஆரம்பித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன!
இதன் பாதிப்புகள் சரியா பிழையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்! மனிதவாழ்க்கையின் தத்துவமும், நோக்கமும் தெரியாத அறிவியல் மேதாவிகளின் கண்டுபிடிப்புகள் மனித குலத்திற்கு நன்மையானவையாக இருப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க அவற்றின் விளைவுகளின் அறிய நீண்டகாலமாகும் என்பது உண்மை.
அண்மையில் நானும் எனது விலங்கு நடத்தையியல் (Animal behavior) ஆராய்ச்சி ஆசிரியரும் உரையாடும் போது 2009 இற்கு முன்னர் வவுனியா, வன்னிப் பகுதிகளில் இருந்த Migratory birds களின் வருகை படிப்படியாகக் குறைந்து முற்றாக இல்லாமல் போய் உள்ளது, இது பற்றி முறையான ஆய்வு ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 2009 இற்கு பிறகு இந்தப்பகுதியில் தொலைபேசிக் கோபுரங்களின் பெருக்கம் அதிகம் என்பது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆம் சங்கரின் 2.0 படத்தின் கருதுகோள் இங்கு பொருந்தி வருகிறது.
செயற்கைப் பீடைகொல்லிகளின் (synthetic pesticide) விளைவு 1962 இல் Rachel Carson இன் Silent Spring (மௌனவசந்தம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது) நூலின் பின்னர்தான் உலகம் அறிந்துகொண்டது. ஆரம்பத்தில் DDT ஐ மண்ணெண்ணெயில் கலந்து அடித்து நுளம்புகளைக் கட்டுப்படுத்தவும் விவசாயப் பீடைகளை கட்டுப்படுத்தவும் உபயோகிக்கப்பட்டது. இதன் விளைவுகள் 1945 இல் அமெரிக்காவில் அறியப்பட்டு அதைத் தடுக்க வழியில்லாமல் நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் 1962 இல் மேற்குறித்த நூல் மூலம் பெரும் விழிப்புணர்வு உண்டாகி, 1973 இல் தடைசெய்யப்பட்டது. ஏறத்தாள முப்பது வருடங்களுக்குப் பின்னர்! இதற்கு முன்னர் 1970 களில் WHO பாவனையைத் தடைசெய்த போது இலங்கை உடனடியாக 1976 இல் கொள்கை அளவில் (Regulatory) தடைசெய்தது. முற்றுமுழுதான தடை 25 வருடங்களுக்குப் பின்னர் 2001 இலேயே நடைமுறைக்கு வந்தது! இத்தனை வருட DDT பாவனையின் பாதிப்பு இலங்கையில் எத்தகையது என்பது பற்றி எந்த முறையான ஆய்வும் முன்னெடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை!
5G தொழில் நுட்பம் அல்லது கைபேசி தொழில் நுட்பம் ஆபத்தானதா இல்லையா என்று அறிய இன்னும் பல ஆண்டுகள் தேவை! ஆனால் இந்த 5G தொழில் நுட்பம் எமக்குத் தேவையா இல்லையா என்பதுதான் இப்போதைய கேள்வி? அதீத தொழில் நுட்பங்களைப் பாவித்துக்கொண்டு மனித மூளையினையும், உழைப்பினை மழுங்கடித்து மனிதனின் தேவையை இல்லாமல் ஆக்கப்போகிறோமா என்ற கேள்வி உருவாகிறது.
5G தொழில் நுட்பம் வந்தால் சாரதி அற்ற Car பயன்பாட்டிற்கு வரும் என்றால் ஒரு சாரதியின் வேலை போகிறது. அவனுக்குரிய மாற்றுத்தொழில் என்ன?
10 நிமிடங்களில் தரவிறங்கும் HD திரைப்படங்கள் இரண்டு செக்கனில் தரவிறங்கி என்ன நன்மை வாய்க்கப்போகிறது.
யோகத்திலும் ஆயுர்வேதத்திலும் அடிப்படை அவசரமாக மூச்சு விட்டால் ஆயுள் குறையும் என்பது! ஆக ஒட்டுமொத்தமாக இந்த தொழில் நுட்ப வசதியால் சமூகமாக அவசர மூச்சு விட்டு அழியப்போகிறோமா?
ஏனென்றால் எல்லையற்ற தேவைகளை உருவாக்கி வளர்ந்துகொண்டிருக்கிறோம் என்ற ஒரு மாயையில் மனித சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதும் ஒருபக்கத்தில் உண்மையாகத்தான் இருக்கிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.