அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்- நூல் கருத்துரை
கருத்துரை வழங்கியவர்: அரவிந்த் சுவாமிநாதன் (பா. சு. ரமணன்)
இலங்கை வாழ் யோக சாதகர் டாக்டர் ஸ்ரீ ஸக்தி சுமனன் எழுதியிருக்கும் இந்த நூல் என் கைக்கு வந்ததும் நான் முதலில் நினைத்தது, ‘இலங்கை வாழ்த் தமிழர் எழுதியதாயிற்றே. நிறைய அவர்கள் வட்டார வழக்குச் சொற்கள் இருக்குமே; நமக்கு அவ்வளவு எளிதில் புரியுமா’ என்பதுதான். இப்படி நினைத்ததற்குக் காரணம், இலங்கை வாழ் எழுத்தாளர்கள் பலரது நூலை முன்னமே படித்திருந்ததுதான். ஆனால், எனது அந்த நினைப்பைப் பொய்யாக்கி விட்டது இந்தத் திறவுகோல்.
பொதுவாக, எனக்கு அறிமுகமாகும் புதிய நூல்களுக்கு அது எந்தத் துறை சார்ந்த புத்தகமாக இருந்தாலும் முதலில் முன்னும் பின்னுமாகப் புரட்டிப் பார்த்துவிட்டு நடுவில் ஏதேனும் ஒரு பக்கத்தை அல்லது சிலபக்கங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாசிப்பது என் வழக்கம். அது எந்த அளவுக்கு என்னை ஈர்க்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அதனைத் தொடர்ந்து வாசிக்கலாமா அல்லது பிந்தைய வாசிப்பிற்காகத் தள்ளி வைத்து விடலாமா என்பதை முடிவு செய்வேன். (இது எல்லாப் புத்தகங்களுக்கும் அல்ல; எனக்கு அறிமுகமாகாத புதியவர்களின் நூல்களுக்கு மட்டுமே இந்த முறை) அது போலவே இந்த நூலையும் வாசிக்க ஆரம்பித்தேன்.
ஆனால், நான் எடுத்துப் பிரித்த பக்கத்தில் இருந்த செய்தி எனக்கு வியப்பைத் தந்தது. காரணம், சமீபத்தில் அதற்கு முன்பாக நான் வாசித்திருந்த ரமண மஹரிஷியின் நூல் ஒன்றுக்கும் இந்த நூலில் இருந்த செய்திக்குமான தொடர்பு தான். பக்தர் ஒருவர், ரமணரை அணுகி, தனக்குத் தொடர்ந்து தியானம் செய்வதால் இறைவனின் காட்சி உள்பட பல்வேறு காட்சிகள் கிடைப்பதாகவும், சில ஒலிகள் கேட்பதாகவும் தான் அநுபூதி பெற்றுவிட்டதாகத் தோன்றுகிறது என்றும் கூறி, பகவான் ரமணரிடம் அது குறித்து விளக்கம் கேட்கிறார். அதற்கு ரமணர், “அதெல்லாம் மாயத் தோற்றங்கள். தியான வேளைகளில் சிலருக்கு அம்மாதிரித் தோன்றக் கூடும். ஆனால், அதெல்லாம் நிலையில்லாதவை. அகங்கார மனதின் செய்கையே இதெல்லாம். ஆன்மானுபூதியை விரும்பும் ஒருவன் இம்மாதிரிக் காட்சிகளில் மயங்கிவிடாமல், கவனத்தைச் சிதறவிடாமல் தொடர்ந்து தனது சாதனையைச் செய்து வரவேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்.
”அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்” நூலில், நான் வாசிக்கத் திறந்த பக்கத்தில் (பக்கம்:95) இருந்ததை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.
“சதாசிவ தளம் எனப்படும் புருவமத்தியில் உனது பார்வையினைச் செலுத்தி, மனதின் துணை கொண்டு உணர்வினையும் செலுத்தி வந்தால், சித்தத்தின் விருத்திகள் குறைந்து, மனம் அடங்கி சுழுமுனையில் பிராணன் பாய ஆரம்பிக்கும். கண்களை மூடிய நிலையில் உனது அகக்கண்ணில் ஒளி தோன்ற ஆரம்பிக்கும். இந்த ஒளி உனது பிராண சக்தி அளவிற்கு ஏற்ற அளவில் ஒரு சிறு பொறியாகவோ, கற்றைகளாகவோ காணப்படும்.
இங்கு ஒரு விடயத்தினைத் தெளிவாக கவனித்து கொள்ள வேண்டும். சித்தத்தின் விருத்திகளை கட்டுப்படுத்தி அக மௌனத்தினை அடைவதற்கு, திருமூலர் முதலான சித்தர்கள் கூறிய இயம, நியம நிலைகளை நன்கு கடைப்பிடித்து, பிரத்தியாகார, தாரணையில் மனதை நன்கு பயிற்றுவிக்க வேண்டும். இப்படியான நிலையினை அடையாமல் வெறுமனே புருவமத்தியில் உணர்வைச் செலுத்த ஆரம்பித்தால் உனது மனம் சித்த விருத்திகளின் மூலம் பலவித மாயத்தோற்றங்களை உருவாக்கி, உனக்கு பலவித காட்சிகளை காட்டி மயக்குவிக்கும். இப்படியான நிலையில் நீ கடவுளை பத்து தலைகளுடன் கண்டேன், பேசினேன் என்று மாயா உணர்வு தோற்றங்களில் சிக்கி விடுவாய். ஆகவே, இதனை எச்சரிக்கையாக குருவின் வழிகாட்டலில் பயிலவேண்டும்.”
- இதனைப் படித்ததும், ரமண மஹரிஷி பக்தர் ஒருவருக்குச் சொன்னதற்கும், இந்த நூலில் இருக்கும் தகவலுக்குமான உள்ள தொடர்பை நினைத்து வியந்தேன். தொடர்ந்து நூலை ஆர்வமுடன் வாசிக்க ஆரம்பித்தேன். அதே சமயம் ஒரே மூச்சில் வாசிக்கவில்லை. அப்படி இந்த நூலை வாசிக்கவும் கூடாது. மெல்ல மெல்ல அசை போட்டு, நூலின் கருத்துக்களை உள்வாங்கி, வினா எழுப்பி, தனக்குள் சிந்தித்தே வாசிப்பைத் தொடர வேண்டும். அப்படிப்பட்ட நூலே இது. நான் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழில் இருக்குமோ என்று ஐயப்பட்டதற்கு மாறாக மிக எளிய தமிழில், அனைத்துத் தமிழர்களுக்குப் புரியும் வகையில் மிக மிகச் சிறப்பாக இந்த நூலை எழுதியிருக்கிறார் யோக ஸாதகர் ஸ்ரீஸக்தி சுமனன் அவர்கள்.
நூலைப் பற்றி முகவுரையில் சொல்லும்
Sri Sakthi Sumananசுமனன், “இந்த நூல் வெறுமனே சொற்களின் அகராதி அர்த்தங்களை வைத்துக் கொண்டு எழுதப்படவில்லை. எமது குடும்ப, வைத்திய யோக பாரம்பரிய அறிவினையும், எமது குருமார்கள் காட்டிய வழியில் யோக சாதனையில் ஈடுபட்ட அனுபவத்தையும் கொண்டு, தியான சாதனை மூலம் உணர்வினால் அறிந்த விடயங்களையும் தந்துள்ளோம்” என்கிறார். நூலை வாசிக்கும் ஒருவர் வாசிக்க வாசிக்க இந்த உண்மையை, இதன் மேன்மையை உணர்ந்து கொள்ளலாம்.
“அகத்தியர் ஞானம் -30” என்னும் அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் 30 பாடல்களின் விளக்க நூலாக மட்டுமல்லாமல், யோக, ஞான, தியான, சாதனா மார்க்க நெறிமுறைகளைப் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. நூலின் சிறப்புக்களைப் பலவாறாகச் சொல்லலாம். ஆனால், நான் யோகம் அறிந்தவனோ, ஆசிரியனோ, ஏன் பயிற்சி செய்பவனோ கூடக் கிடையாது. ஆகவே, சாதரண வாசகனான என்னைக் கவர்ந்த இந்த நூலின் சிறப்பம்சங்களை ஒவ்வொன்றாகச் சொல்ல முற்படுகிறேன்.
(தொடரும்)
அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் - நூல் கருத்துரை : பகுதி 2
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
- என்கிறது திருமந்திரம். யோக, ஞான சாதகர்களுக்கு குரு என்பவர் அவசியம் தேவை. இருளை நீக்கி அருளப் பெருகச்செய்வது மட்டுமல்ல குருவின் வேலை. நல்லதை மட்டுமல்லாமல் அல்லாததையும் சுட்டிக்காட்டி அவ்வழிப் போகாதே என எச்சரிப்பதும் அவர் பணியே. சிங்கத்தின் கண் பட்ட இரை தப்பாதது போல் குருவின் அருட்கடாட்சம் பெற்ற சீடன் ஒருபோதும் வழி தவறுவதில்லை. குரு காட்டிய வழிப்படி நடப்பவர்களே குருவிற்குகந்த சீடர்களாக விளங்குகிறார்கள். அப்படிப்பட்ட சீடனுக்கு குருவின் அருள் என்றும் துணையாக இருக்கும். “தாழ்ந்த நிலத்திலேயே நீர் பாய்வது போல், அழுத்தம் குறைந்த இடத்திற்கே சக்தி பாய்வதை போல், பணிவும் தாகமும் இருக்கும் பக்குவப்பட்ட ஆன்மாவிற்கே குருவின் அருளும் பாயும்.” - என்கிறார் சுமனன்.
குருவின் அவசியம், தேவை என்பதற்கான பாடல்களின் விளக்கங்கள் குருவின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாய் மட்டுமல்லாமல், “குரு இல்லா வித்தை பாழ்” என்ற உண்மையையும் உறுதிப்படுத்துகின்றன. அகத்திய குரு வழிபாடு, அந்த வழிபாட்டிற்கான மூலகுரு மந்திரம், இந்த நூலை வாசிக்கும் முறைகள் பற்றி ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தி விடுகிறார். அது நூலைத் தொடர்ந்து அம்முறையில் வாசிப்பதற்கு வழிகோலுகிறது.
நூலின் முக்கியமான சில செய்திகளைக் கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.
1) பரிபாஷை, பரிபாஷை என்று சொல்கிறார்களே, அதன் பொருள் என்னவென்று தெரியுமா? நான் கூட அதை சித்தர்கள் தங்களுக்குள் ‘பரிமாறி’க் கொள்ளும் ரகசிய மொழி என்பதாகவே இதுநாள் வரை அறிந்திருந்தேன். ஆனால், ‘பரி’ என்பதன் பொருள் என்ன, அது அதைக் குறிக்கிறது என்பதற்கான விளக்கங்கள் வியப்பைத் தருகின்றன.
2) பன்னிரண்டு வருட குருகுல வாசம் ஏன் அவசியம் என்பதுபற்றிக் கூறப்பட்டுள்ள விளக்கம் சிந்திக்கத் தகுந்த ஒன்று.
3) சித்தர்கள் குறிக்கும் ‘கலை’ என்பதன் உண்மைப் பொருள், ‘விந்து’ என்று அவர்கள் எதனைக் குறித்துள்ளார்கள், ‘விந்து கட்டுதல்’ என்றால் என்ன என்பதெல்லாம் மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவத்தில் குறிப்பிடப்படும் ‘விந்தைக் கட்டுதல்’ என்பதற்கும், யோக மார்க்கத்தில் கூறப்படும் ‘விந்தைக் கட்டுதல்’ என்பதற்கும் உள்ள வேறுபாட்டினை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார் ஸ்ரீ சுமனன்.
4) வாசி, வாலை, ஓரெழுத்து, எட்டெழுத்து, இரண்டெழுத்து மந்திரங்கள், அவற்றின் தாத்பரியம், யோகத்தில் அவை பயின்று வரும் விதம், நாடி பற்றிய விளக்கக் குறிப்புகள் யோக சாதகர்களுக்கு நல்லதோர் திறப்பு
5) உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ‘தீர்க்க சுவாசம்’ பற்றிய விளக்கம் சிறப்பு. (இதை மட்டுமே நான் -அதுவும்- எப்போதாவது செய்வேன்)
6) ரேசகம், பூரகம், கும்பகம் ஆகியவற்றின் விளக்கமும், அவற்றுடன் பூமி சுழற்சிக்கான தொடர்பும், அதனால் பிராணனை ஈர்க்கும் விதமும், மகா பிராணன் உடலிலும் சித்தத்திலும் செயல்படும் விதமும் விளக்கமாகச் சுட்டப்பட்டுள்ள விதம் பிரமிப்பைத் தருகிறது.
7) முறையாகப் பிராண சாதனை செய்வது எப்படி, அதனால் கிடைக்கும் சித்தியான ‘வகார மாறல்’ என்பதின் பயன் என்ன என்பது யோகத்தில் அனுபவம் பெற்றார்கள் மட்டுமே விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
8) வாமபூசை என்றால் என்ன என்பதன் விளக்கம் எனக்கு உண்மையாகவே ஒரு திறப்புத் தான்.
9) நமது மனது, அது செயல்படும் விதம், அதற்கும் சூரிய, சந்திரர்களுக்குமான தொடர்பு, அதனோடு இயைந்து நாடிகள் செயல்படும் விதம், எண்ணம் தோன்றும், ஒடுங்கும் செயல்பாடுகள் என்பது பற்றி இருக்கும் விளக்கங்கள் புதுமை.
10) ஞான யோக வழியில் செல்லும் சாதகனுக்கு இருக்க வேண்டிய குணநலன்கள், அவன் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை எல்லாம் தெளிவாக, விளக்கமாகப் பல பாடல்கள் மூலம் சொல்லியிருக்கிறார் சுமனன்.
சுருக்கமாகச் சொன்னால் சிந்தர்களின் சூட்சும மந்திரங்கள், (நங், மங், சிங், வங், யங் போன்றன) அவற்றின் சூட்சுமப் பொருள், அவற்றைத் தன்னுடலில் ஈர்க்கும் விதம், ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களின் இயல்புகள், போகாப்புனல், சாகாக்கால், வேகாத்தலை என்பதன் விளக்கம், ஆயிரம் இதழ் தாமரைப்பூ, நாத ஒலி, அமிர்தத்தை கிரகித்துக் கொள்ளும் வழிமுறைகள் என்று யோகக் கலையின் சூட்சும அம்சங்களை மிகத் தெளிவாக, எளிமையாக விளக்கியிருக்கிறார் சுமனன்.
“மனதில் எழும் சந்தேகத்தை சித்தத்தில் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு, பெறப்படும் ஞானத்தை உள்வாங்கிக் கொள்வதில் தான் ஒருவனின் புரிதல் வளர்ச்சி உள்ளது. இப்படி சித்தத்தையும் கட்டுப்படுத்தி மனதையும் கட்டுப்படுத்தி புத்தியை வலுப்படுத்த தகுந்த பிராண பலம் வேண்டும். இப்படிச் செய்ய முடியாதவர்கள் எப்போதும் கேள்வி கேட்பவர்களாகவும், அதற்கான தகுந்த விடைகளைப் புரிய முடியாதவர்களாகவும் இருப்பார்கள்” - என்கிறார் சுமனன் நூலின் முன்னுரையில். இக்கருத்து அனைவரும் சிந்திக்கத் தகுந்த ஒன்று.
யோக சித்தியில் ஆர்வமுள்ள ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் “அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்.” ஏற்கனவே யோகத்தில் தேர்ந்தவர்களுக்கும் கூட இந்நூல் புதிய வெளிச்சம் பாய்ச்சும் தன்மையில் உள்ளது என்று சொன்னால் மிகையில்லை.
பல்வேறு குருமார்களின் அருள் பெற்று, குருமார்கள் வழி நின்று சாதனைகள் செய்து அனுபவம் பெற்று இந்நூலைத் தந்திருக்கிறார்
Sri Sakthi Sumanan. இந்த நூலை உருவாக்க அவர் கடுமையாக உழைத்திருக்க வேண்டும்; சிந்தித்திருக்க வேண்டும். சொல்லப்போனால் ஒரு வித தியான, தெய்வீக நிலையிலேயே பல சமயங்களில் இருந்திருத்தல் வேண்டும். அப்போதுதான் இவ்வளவு செறிவான, தெளிவான விளக்கங்கள் உடைய, எளிமையான நூல் என்பது சாத்தியம். நூலாசிரியர் டாக்டர் ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், அகத்தியர் யோகம் பற்றிய நல்லதொரு நூலைத் தந்தமைக்காக எனது வணக்கங்களும்.
அன்புடன்
அரவிந்த் சுவாமிநாதன்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.