ஆன்மீகம் என்பதன் பொருள் எமக்குள் இருந்து இயக்கும் ஆன்மாவின் கருவிகளை மீகித்தல் - உயர்த்துதல் என்று பொருள்படுகிறது. அதாவது தனிமனித மேம்பாட்டின் மூலம் சமூக மேம்பாடு.
இன்று ஆன்மாவை உயர்த்துதல் இல்லாமல் வெளிப்பகட்டு ஆன்மீகமாகி மக்களை அலைக்கழித்துக்கொண்டு இருக்கிறது.
கோயில் திருவிழாக்களில் ஆடம்பரமாக்கப்படும் பணம் ஏழைமக்களில் வாழ்வினை உயர்த்தப் பயன்படலாம்! அவனை விட அதிகமாக கோயிலிற்கு செய்து பெரும் புகழ் பெறலாம் என்ற எண்ணம் மாறி என்னிடம் இருக்கும் அதிக பணம் மற்றவனை உயர்த்தப் பயன்படுத்தலாம்! இப்படியான சிந்தனை எமது கோயில் வழிபாடுகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அண்ணன் மல்லியப்புச்சந்தி திலகர் எழுதிய "மாரியம்மனுக்கோர் மனு" என்ற கவிதை மலையக தோட்டப்புற மக்களின் களங்கமற்ற பக்தியைப் படம்பிடித்துக்காட்டி, அந்த பக்திக்கு அர்ப்பணிக்கும் மன நிலையை சுட்டிக்காட்டுகிறார்.
இந்தக் கவிதை விவரிக்கும் சம்பவம் எனக்கு நடந்தது. பெருந்தோட்ட இளைஞர் குழு ஒன்று ஒரு முறை என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். என்ன நோக்கம் என்றால் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நிதி கேட்பதற்காக? அவர்களை அமரவைத்து உரையாடினால் அதில் இருக்கும் 90% ஆனவர்களுக்கு நிரந்தர வருமானம் இல்லை. சரி கும்பாபிஷேகத்திற்கு எவ்வளவு செலவு என்றால் 30 இலட்சம் என்றார்கள்! இந்த முப்பது இலட்சத்திற்கு எல்லோரும் சேர்ந்து தொழில் தொடங்கி அதில் வரும் இலாபத்தை எடுத்து கும்பாபிஷேகம் செய்யலாமே தம்பி! என்றால் மௌனம்.
ஆனால் யதார்த்தத்தில் கும்பாபிஷேகத்திற்கும் பணம் கொடுக்கும் எல்லோரும் அந்த இளைஞர்கள் நாம் தொழில் தொடங்கப்போகிறோம் என்றால் எவரும் பணம் தரமாட்டார்கள் என்பதுதான் சமூகத்தின் மன நிலை!
ஆக கோயில் கட்டி பாவம் போக்கலாம் என்ற சிந்தனை மாறி இன்னொருவன் உயர்ந்தால் நாமும் உயர்வோம், சமூகமும் உயரும் என்ற சிந்தனையுள்ள சமூகம் உருவாகவேண்டும்!
இதன் அர்த்தம் கோயில்கள் தேவையில்லை என்பதல்ல, அவை சமூக கலாச்சாரத்தின் அத்திவாரம்! ஆனால் அந்த அத்திவாரத்தின் மீது எழுப்பப்படும் கட்டிடம் அழகாகவும், சிறப்பாகவும் இருக்க சரியான மூட நம்பிக்கை அற்ற சிந்தனை இருக்க வேண்டும்.
கோயிலின் அநாவசிய செலவுகளைக் குறைத்து மக்களின் கலாச்சார வாழ்வதார மேம்பாட்டினை முன்னெடுக்கும் திட்டங்கள் உருவாக வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.