முக்தா வித்ரு ஹேம நீல
தவளச்சைர் என்று தொடங்கும் காயத்ரி தேவியின் தியான ஸ்லோகத்தின் பொருள்: ஐந்து
முகங்களும், பத்து கைகளும் கொண்ட காயத்ரி தேவியின் உருவத்தின் விளக்கம் வருமாறு “
முத்து, பவளம், தங்கம், நீலம், வெள்ளை நிறங்களில் ஐந்து முகங்கள், மூன்று கண்கள்,
சந்திரன் பதித்த இரத்தின கிரீடம் தரித்த தத்துவ பொருள் கொண்ட எழுத்து வடிவினள்,
வரம் தரும் அபயம், அங்குசம், பாசம், சவுக்கு, கபாலம், கதை, சங்கு, சக்கரம்,
இருதாமரைகள் தாங்கிய பத்துக்கைகளைக் கொண்ட காயத்ரியினை தியானிக்கிறேன்.
இது காயத்ரியின் தியான
வடிவம். இந்து சமயத்தில் இறைவனை பல்வேறு வடிவங்களில் வணக்குவதை பல தெய்வ வழிபாடு
எனக் கருதுகின்றனர். இதற்கு காரணம் உருவவழிபாட்டை தவறெனக் கருத்தும் பிரிவினர்
உருவவழிபாட்டின் உண்மை தத்துவத்தினை அறியாமையேயாகும்.
ஆன்மீக விளக்கத்தில்
கடவுளின் பல்வேறு தெய்வ உருவங்கள் அரூபியான பரம்பொருளின் சில குறித்த தத்துவங்களை
விளக்கும் தத்துவ குறியீடுகளே ஆகும். உருவையே கடவுள் எனக்கருதி கேலி செய்வதோ,
மயங்கி வாதிடுவதோ உண்மை ஞானம் அல்ல! அவ்வுருவம் கூறும் தத்துவத்தினை உணர்ந்து
அதனூடாக பரம்பொருளை அறிவதே எமது முன்னோர்கள் வழிகாட்டி வைத்தனர். இந்த உண்மையினை
அறிந்தால் எந்த வழிபாட்டு முறையினையும் வீணாக கேலி செய்வதோ, தூற்றுவதோ அவசியமற்று
பிணக்குகள் இல்லாது போகும்.
மனிதனுக்கும் மற்ற
உயிர்களுக்கும் தொடர்பில்லாமல் கடவுள் எங்கோ பரலோகத்தில் இருப்பதாக எண்ணுவது
அறியாமையாகும். இப்பிரபஞ்சத்தின் மூலசக்தி, மூலகுணம், மூலப்பொருள், மூல உயிர்
கடவுள் என அறிந்தால் பிரபஞ்சம் எங்கும் கடவுள் இருக்கிறார் என்பதனை அறிந்து கொள்ள
முடியும். அவரின் மூல நிலையுடன் செயல் நிலையினை விளக்கவே தெய்வ உருவங்கள், வழிபாட்டு
தளங்கள் தோன்றின. இந்து சமயத்தில் ஒவ்வொரு தெய்வ உருவத்திற்கும் (இடைக்காலத்தில்
சமய வியாபாரிகளால் ஏற்படுத்தப்பட்ட பொருளற்ற உருவங்கள் தவிர்ந்த) இறைவனின் குணங்களையும்,
செயல்களையும் விளக்கும் குறியீடுகளாகவே ஆக்கப்பட்டிருக்கின்றது. இவை குறித்த தெய்வ
சக்தியை தமது ஆன்ம சாதனையினால் உணர்ந்த ரிஷிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த
உண்மையினை உணர்ந்து குறித்த உருவத்துடன் அதற்குரிய மந்திரத்துடன் சாதனைகளை
செய்யும் போது குறித்த தெய்வ சக்தி எம்மில் உள்ளோ வெளியோ விழிப்படைந்து எம்மை
பரிணாம பாதையில் இட்டுச்செல்லும். (உயர் தெய்வ சக்திகளாக இருந்தால் உயர்
பரிணாமதத்திலும், தாழ் சக்திகளாக இருந்தால் (மோகினி, குறளி, குட்டிச்சாத்தான்)
கீழ் பரிணாமத்திலும் சாதகர்களை வழிநடாத்தும்).
இந்த அடிப்படையில் இந்த
பதிவில் யோகியர்களுக்கும், தபஸ்விகளுக்கும் மிக முக்கியமான சாதனை மந்திர தெய்வமான
காயத்ரி தேவியின் உருவ விளக்கத்திற்கான உண்மைகளை சுருக்கமாக ஆராய்வோம்.
பிரபஞ்சம் எல்லாம் அணுக்களின்
கூட்டுப்பொருட்கள் என விஞ்ஞானம் கூறுகிறது. ஆன்மீகத்தில், சித்தர் தத்துவத்தில்
பிரபஞ்சத்தின் தோற்றம் ஐந்து வகையாக இருந்து, கலந்து தோன்றுகின்றது
எனக்கூறப்படுகிறது. இவைந்தும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற
ஐம்பூதங்களாகும். நிலம் என்றால் கடினப்பொருள், நீர் என்பது திரவநிலை, நெருப்பு
அணுக்களாக திரியும் இயக்க நிலை, காற்று – அணு நிலை, ஆகாயம் – அணு சிதைந்து நிலை,
இந்த ஐந்து நிலைகளே பிரபஞ்சத்தின் எந்தப்போருட்களும். ஐந்து பூதங்களின் விளக்கமே
காயத்ரியின் ஐந்து முகங்கள். மூல பரம்பொருள் இவ் ஐந்து பூதங்களாக அலைக்கழியும்
போது அவ்வலை வேகத்தில் வெளிப்படும் நிறங்களே அவளின் முகச்சாயல்கள்.
இதன் தத்தவம், மூல
பரம்பொருள் (சிவம்) இயக்க நிலைக்கு வரும் போது சக்தியாகிறது, ஆதலாம் அதனை பெண்ணாக
குறிக்கப்படுகிறது. இந்த இயக்க நிலை ஐம்பூதங்களாக திரிந்து இருக்கின்றது, இந்த ஐம்பூதங்கள் பிரபஞ்சத்தினை ஆக்குகின்றன. இதன் வெளிப்பாடே
காயத்ரியின் ஐந்து முகங்கள்.
மனிதனுக்கு பிரபஞ்சத்தினை
அறிவிக்கும் முதன்மை புலன் கண்கள். கண்கள் இல்லாவிடின் அவன் குருடன். ஒளியை
வகிப்பது கண்கள். பிரபஞ்சத்தின் கண்கள் சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்றும்.
எல்லா ஒளிகளும் சூரியனின் திரிபுகள். ஒளிகளில் வெளிப்படும் வெப்பம் அக்கினி,
குளிர்ந்த தன்மை உடையவை சந்திரன். சூரியன் பொருளை உண்டாக்குவது, அக்கினி பொருளினை
உருமாற்றி சிதைப்பது, சந்திரன் பொருளினை இறுக்கி காப்பது, ஆக சூரியன் படைத்தல்,
சந்திரன் காத்தல், அக்கினி அழித்தல் என்ற முத்தொழில்களை செய்வது. இந்த மூன்று
தொழில்களுமே காயத்ரியான பரம்பொருளின் மூன்று கண்கள்.
இதன் தத்துவம்: ஆக்கல்,
அமைத்தல், அழித்தல் ஆகிய மூன்றும் சூரிய, சந்திர, அக்னி வடிவாயிருந்து சாதிப்பவர்
பரம்பொருள். இந்த மூன்றையும் குறிக்கும் குறிகளாக தேவிக்கு முக்கண்கள்
அமைந்துள்ளன.
பிரபஞ்சத்தில் உயிர்களின்
பரிணாமம்
பிரபஞ்சத்தில் உயிர்கள்
ஏன் பிறந்தன? பிறந்தவை ஏன் இறந்தன? பிரபஞ்ச வாழ்க்கையில் இன்பத்தினை
(போலியானதுதான்!) நுகர்வதால், இன்பம் இல்லையானால் இந்த உலகில் யார் வாழவிரும்புவர்?
மண்ணுலக இன்பத்தினை விளக்கும் உயரிய பொருட்கள் இரத்தினங்கள், கிரீடம் அதிகாரத்தின்
அரசுரிமையை குறிக்கும். சந்திரன் இன்பத்தின் சிகரம், குளு குளுவென இன்ப ஒளி
வீசுவது. தேய்ந்து வளரும் இன்பத்தின் இலக்கணம் பிறை!
தத்துவம் : பிரபஞ்சத்தில்
உயிர்களைப் பரிணாமத்தில் உழலச் செய்ய பரம்பொருள் அவைகளின் அனுபவத்திற்கு என இன்பம்
தரும் பொருட்களை படைத்திருக்கிறான். அவ்வின்பங்கள் பிறைபோல் தேய்ந்து வளர்பவை
ஆனாலும் அவையே உயிர்களை ஆட்சி செய்கின்றன.
இனி அவள்
தாங்கியிருக்கும் ஆயுதங்களின் இலக்கணங்களை பார்போம்
அங்குசம்: மதங்கொண்ட
யானையினை அடக்குவது அங்குசம், அறியாமை, ஆணவம், கன்மம் ஆகிய மும்மலங்கள் பீரிடச்
செய்யும் பசுக்களான ஆன்மாக்களை நிலை பிறழ்ந்து விடாமல் அடக்குபவர் பரம்பொருள்,
இந்த தன்மையினை குறிப்பது அங்குசம்.
பாசம்: தனியுயிர்
உலகத்தில் வாழாது, அதற்கு வேறு உயிர்களும் பொருட்களும் தேவை. மயக்கம், மாயை என்பன
உயிர்களின் பாசத்தின் வழியாகத்தான் செயற்படுகின்றன. உலகில் எதன் மேலும் பாசம்
இல்லையாயின் உயிர்கள் உலகத்தில் பிறக்காது. உயிர்கள் மேல் பாசக்கயிற்றை வீசி அதனை
பரிணாமத்திற்கு உடபடுத்தும் பரம்பொருளின் தத்துவத்தை இது குறிக்கிறது.
உயிர்களுக்கு பாசத்தை உண்டாக்கி கட்டுப்படுத்துபவர் பரமன்.
சவுக்கு – ஓடாதவைகளை ஓடவைப்பது,
சவுக்கை ஓங்கியதும் குதிரைகள் வேகமாக ஓடும், அதபோல் பரிணாமத்தில் உயிர்கள்
மந்தமாய், சோர்வாய் இருக்கும்போது அவற்றின் பரிணாமத்தை வேகப்படுத்துபவன் பரமன்
எனும் தத்துவத்தை கூறுகிறது. வாழ்க்கையில் ஞானத்தை தரும் துன்பங்களின் இலக்கணம்
சவுக்கு.
கபாலம்: அறிவின்
குறியீடு, இறைவன் உயிர்களின் அறிவை தன் வசம் வைத்திருப்பவன். பரிணாம முடிவில்
தன்னுள் ஒடுக்கிகொள்கிறான். அறிவை இயக்கி உயிர்களின் பரிணாமத்தினை முடிப்பவன்
இறைவன்.
கதை: தீமைகளை அழிக்கும்
சின்னம். பரிணாம உயர்வின் காரணமாக தன்னை நாடுபவர்களின் தீமைகள், துன்பங்கள்,
பகைமைகள் அறிவின்மையினை அழிப்பவன் இறைவன் என்பதற்கான குறியீடு.
சங்கு; நாதப்பிரம்ம
தத்துவம். இறைவன் நாத வடிவினன். நாதம் என்றால் சப்தம் என்று மட்டும் பொருள் அல்ல.
அலையும் அலைவடிவம் எல்லாம் நாதம். பிரபஞ்சம் ஒரு அலைவடிவிலேயே அலைகழிந்து கொண்டு
உள்ளது. இறைவனும் சக்தி அலைவடிவிலேயே இருக்கிறான்.
சக்கரம்: வட்டமாக
சுழல்வது சக்கரம். பிரபஞ்சத்தில் அணு முதல் அண்டம் வரை அனைத்துமே வட்டமாகத்தான்
சுழல்கிறது. இப்படி பிரபஞ்சத்தை சக்கரமாக சுழல இயக்குபவன் இறைவன். சுழலும் பிரபஞ்சத்தினை
தனது கைகளில் ஏந்தியிருக்கும் பராசக்தி பிரபஞ்சத்தை கட்டுப்படுத்துபவள்.
இருதாமரைகள்: உயிர்கள்
அறியாமையில் உழலும் போது உலக இன்பங்களை மட்டும் அனுபவிக்கும். மெய்ஞானம் பெற்றபின்
ஆன்மீக இன்பங்களை அனுபவிக்கும். இவ்விருவகை இன்பங்களையும் உயிர்களுக்கு கொடுத்து
அருள்பவன் இறைவன். தாமரை பிரபஞ்ச மெய்ஞானம் பெற்றபின் வரும் ஆன்ம இன்பத்தின்
குறியீடு.
வர அபய கரங்கள் : தன்னை
சரணடைந்தவர்களுக்கு எல்லா பயங்களையும் போக்கி அனைத்து சுகங்களையும் அளிப்பவர்
இறைவன், அவற்றின் குறியீடு.
தாமரையில் அமர்தல்: தாமரை
பிரபஞ்சத்தின் குறியீடு, பிரகிருதி கடலில் இருந்து சக்தி காம்பால் வெளிவந்து பலபல
மண்டலங்களாக விரிவது பிரபஞ்ச தாமரை. அதன் மேல் பிரபஞ்சத்தின் நாடு சக்தியாய்
அமர்ந்து பிரபஞ்சத்தினை நடாத்துவிக்கும் பராசக்தி,
இதுவே காயத்ரி தேவியின்
உருவத்தின் ஆன்மீக விளக்கம்.
மண்ணுலகை பொறுத்தவரையில்
மேற்கூறிய அனைத்து செய்கைகளும், தெய்வ சக்திகளும் வருவது சூரியனூடாகவே! சூரியன்
மனிதனுக்கும் தெய்வ சக்திகளுக்கும் இடையில் உள்ள இணைப்பு பாலம். ஆகவே
மேற்குறிப்பிட்ட பரம்பொருளின் தத்துவங்களை தம்மில் உணர்ந்து விழிப்படைய செய்ய ஆன்றோர்கள்
காயத்ரி உபாசனையினை சந்தியோபாசனையாக சூரியனுடன் இணைந்தார்கள்.
காயத்ரி மந்தரத்தால்
சூரிய சக்தியினூடான பிராண சக்தி எமது ஸ்தூல, சூக்ஷ்ம உடலில் அதிகமாக
ஆகர்ஷிக்கப்படுகிறது. காயத்ரி சாதனையால் மனம், உடல்களில் பிராணனின் அலைவேகம்
அதிகரித்து பரிணாமம் உயர்ந்து ஞானம் தோன்றி, மாயை அழிந்து முக்தி கிட்டுகிறது.
ஆகவே காயத்ரி சாதனை
என்பது சாதாரண தன்மை உடையவன் தனது அறிவினை, பிராணனை விழிப்படையச் செய்து ஞானப்பாதையில்
முன்னேறுவதற்குரிய சாதனா மார்க்கம்! இத்தகைய இந்த பலன்களை பெற்ற குருபரம்பரையில்
இருந்து தீக்ஷை (தீக்ஷை என்றால் என்ன? பார்க்கவும்) பெற்று சாதனை புரிவது மட்டுமே
ஞானவழியில் முன்னேற்றும். அல்லாமல் எல்லோரும் ஜெபிக்கும் காயத்ரி மந்திரத்தை
நாமும் ஜெபிப்போம் என்றால் பலன் கிட்டாது, இந்த உண்மை அறியாமல் காயத்ரி மந்திரம் பொய்
என்று வருத்தப்படாதீர்கள்!
குருவுக்கு வணக்கம்
ReplyDeleteநான் சிவ.வள்ளியப்பன் gs 123
காயத்ரி தேவியின் உருவ விளக்கம் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது சாதரன படமாகத்தான் நான் இவ்வளவு காலமாக பார்த்து வந்தேன் ஒவ்வொரு ஆயத்த்திற்கும் தாமரப்பூவல் அமர்ந்திருப்பதற்கும் தாங்கள் கொடுத்த விளக்கம் என்னை தாயின்பால் ஈர்த்து நெகிழ்வடைய வைத்தது எனது மனத்தில்காயத்ரி தேவியின் விளக்கம் நன்கு ஆழமாக பதிந்துவிட்டது
நன்றி
சிவ.வள்ளியப்பன்