ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சப்த சதுஷ்டயம் - ௦1


இந்த பதிவுகள் எனது  ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக வாசிப்புகளின் அடிப்படையானது. இயலுமான வரை சொற்பிரயோகங்களை அரவிந்தரின் சொற்களையும் அதற்கு தகுந்த தமிழ் சொற்களையே உபயோகித்துள்ளேன். இந்த புரிதல்கள் மேலும் பட்டை தீட்டப்படவேண்டியவை.  

அரவிந்தரின் பூரண யோகத்தில் சாதகன் அடியவேண்டிய ஏழு நிலைகளை பகுத்து கூறியவை சப்த சதுஷ்டயம் எனப்படும்.

அரவிந்தரின் யோகத்தில் சாதகனின் இலக்கு நான்கு, அவையாவன;
 1. சுத்தி – தூய்மைப்படுத்தல்
 2. முக்தி – விடுதலை அடைதல்
 3. சித்தி – உணர்ந்து செம்மையடைதல்
 4. புக்தி – ஆனந்த அனுபவம்

இவற்றை அடைவதற்கான இலக்குகள் ஏழு நிலை, அந்த ஏழு நிலைகள் ஒவ்வொன்றும் நான்காக விரியும். அந்த சதுஷ்டயம் – ஏழும் வருமாறு;
 1. சாந்தி சதுஷ்டயம்
 2. சக்தி சதுஷ்டயம்
 3. விஞ்ஞான சதுஷ்டயம்
 4. சரீர சதுஷ்டயம்
 5. கர்ம சதுஷ்டயம்
 6. பிரம்ம சதுஷ்டயம்
 7. சித்தி சதுஷ்டயம்

இவற்றின் விபரங்களை ஒவ்வொன்றையும் அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்,

சாந்தி சதுஷ்டயம்
ஒருவன் பூரண சாந்தியினை (அமைதியினை) அடைவதற்கு நான்கு பண்புகள் இருக்க வேண்டும். இந்த நான்கும் அவனது உறுதியான சாதனா பயிற்சியில் இருக்க வேண்டும். 

அந்த நான்லில் முதலாவதான சமந்தா எனப்படும் சமபாவம் பற்றி சுருக்கமாக இந்த பதிவு கூறும்;

சமந்தா – சமபாவம் – மன, பிராண, உடல் இச்சைகளில் இருந்து விடுபடல், அதாவது இந்த இச்சைகள் எம்மை தொல்லைப்படுத்தாமல் இருக்கும் படி உறுதியாதல். இறைசக்தி எம்முள்ளும் வெளியிலும் செயற்படுவதை ஏற்றுக்கொள்ளல். மனம், பிராண, உடலில் எதுவித இச்சை எழுந்தாலும் அவற்றை சமநிலையில் இருந்து கவனிக்கும் பண்பு. வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சமனாக ஏற்றுக்கொள்ளும் மன, உடல் ஆற்றலுக்கு சமந்தா அல்லது சமபாவம் எனப்படும். இதனை பெறுவதற்கு இரண்டு வகையினை கூறுகிறார். முதலாவது நேர் சமநிலை இரண்டாவது மறை சமநிலை.

மறை சமநிலை என்பது எமது தாழ்ந்த புலன் உணர்ச்சிகளில் (எம்மை பரிணாமத்தில் உயர்ந்து செல்லவிடாத புலன் உணர்ச்சிகள்) இருந்து விடுபடும் முறை. இதனை பயிற்சிப்பதற்கு மூன்று வழிமுறைகள் காணப்படுகின்றன.முதலாவது திதிக்ஷா எனப்படும் இச்சாசக்தியால் கட்டுப்படுத்தல். இது சாதகன் தனது புலன்களை தாழ்ந்த உணர்ச்சிகள் ஆட்படுத்தி விடாமலும், இன்ப உணர்ச்சிகள் மயக்கிவிடாமலும் தனது இச்சா சக்தி மூலம் கட்டுப்படுத்துவதாகும். இரண்டாவது உதாசீனதா – இது அறிவால் தெளியும் முறையாகும். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் நிலையானது அல்ல என்பதனை அறிவால் உணர்ந்து அதனை விலக்கும் செயல்முறை. மூன்றாவது நதி எனப்படுவது, இது பக்தி எனப்படும் எல்லாச்செய்கைகளையும் இறைவனின் இச்சா சக்திக்கு சமர்ப்பித்து காரியம் ஆற்றும் நிலையாகும். இந்த மூன்று பயிற்சிக்களாலும் ஆன்மா வெளி உலகங்களின் பற்றுகளில் இருந்து விடுபட்டு  தாழ் உணர்ச்சிகள் வலுவிழந்து உயர்சக்தியினை பெறுவதற்குரிய பண்பினை பெறும்.

நேர் சமநிலை என்பது உயர் இறை சக்தியை எம்மில் செயற்பட செய்யும் முறை. மறை சமநிலையினால் பற்றற்ற நிலையடைந்த ஆன்மா தனது சுய ரூபத்தில் இருந்து அமைதியை ஆனந்தத்தினை அனுபவிக்க தொடங்கும். ஒருதடவை முழுமையான விழிப்புணர்வினை அனுபவித்த சுயம் – ஆன்மா இன்பம், ஆனந்தம், அமைதி, அறிவு, சுயத்தின் இச்சா சக்தியை உணர்தல் என்பவற்றை பெறும். இதுவும் மறை சமநிலை போல் மூன்று வழிகளில் அடையப்படுவது. முதலாவது ரச எனப்படும் மனம் பற்றற நிலையினை அடைவதினால் உண்டாகும் இன்பம், இரண்டாவது எல்லாவித ரச நிலைகளிலும் மனதிற்கு உண்டாகும் இன்பம். மூன்றாவதும் ஆனந்தம் – இது மனதினால் அனுபவிக்கும் இன்பத்தினை விட உயர்ந்தது.

அதாவது மறை சமநிலையினை பயிற்சிப்பதன் மூலம் எமது தாழ்ந்த புலன் உணர்ச்சிகளை வெல்லும் அதேவேளை நேர் சமநிலையினை பயிற்சித்து தெய்வ சக்தியை எம்மில் செயற்பட வைக்க முடியும்.

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு