ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 27: நாமங்கள் 68 - 69


சக்ரராஜ-ராதாரூட-ஸர்வாயுத-பரிஷ்க்ருதாயை (68)
ஸ்ரீ சக்கரமான தேரின் மேல் எல்லா ஆயுதங்களும் புடைசூழ விளங்குபவள்

சக்ர ராஜம் என்பது லலிதையின் தேர், அது சகலவிதமான ஆயுதங்களையும் உடையது. ஆயுதங்கள் எனப்படுவது ஸுத்தவித்தையாகிய தூய அறிவினை அடைவதற்கான வழிமுறைகள். இதுவே பிரம்மத்தினை அறிவதற்கான வழிமுறைகள். இந்த தேர் ஒன்பது சில்லுகளை உடையது. சக்ர ராஜத்தினை சூழ மேலும் இரு தேர்களை உடையது. அதுபற்றி அடுத்த நாமங்களில் விபரிக்கப்படும். சக்ர ராஜம் லலிதாம்பிகை வசிக்கும் ஸ்ரீ சக்கரம் எனவே கூறப்படுகிறது. பரிஷ்க்ருத என்றால் அலங்கரிக்கப்பட்ட என்று பொருள்.

இந்த நாமத்தினை விளங்கிக்கொள்ள ஸ்ரீ சக்கரம் பற்றிய சுருக்கமான அறிவு அவசியம், ஸ்ரீ சக்கரம் ஒன்பது ஆவரணங்களையும் ஐந்து சக்தி சக்கரங்களையும், நான் கு சிவசக்கரங்களையும் உடையது. மேல் நோக்கிய முக்கோணங்கள் சிவச்சக்கரம் என்றும், கீழ் நோக்கிய சக்கரங்கள் சக்தி சக்கரங்கள் என்றும் கூறப்படும். இந்த இரண்டு சக்கரங்களும் சேர்ந்து நாற்பத்தி நான் கு முக்கோணங்களையும், நாற்பத்தி மூன்று தெய்வங்களையும் (44வது தெய்வம் லலிதை), எழுபத்தி ஒன்பது யோகினிகளும் வசிக்கின்றனர். ஸ்ரீ சக்கரத்தில் எல்லா தேவதேவியரும் உறைவதாக கூறப்படுவதால்தான் ஒருவன் எந்த தெய்வத்தினை பூஜிப்பதானாலும் ஸ்ரீ சக்கரத்திற்கு பூஜை செய்வது போதுமானது எனக்கூறப்படுகிறது. ஸ்ரீ சக்ரராஜ நிலையாயை எனும் 996 வது நாமம் தேவி ஸ்ரீ சக்கரத்தில் வசிக்கிறால் என்பதனை உறுதிப்படுத்துகிறது.

சக்ரராஜம் என்பது மூலாதாரம் தொடக்கம் ஆக்ஞா வரையிலான ஆறு சக்கரங்களையும் குறிக்கும். ரதா என்றால் அடிப்படை என்று பொருள். அருதா என்றால் கட்டுப்படுத்தல் என்று பொருள். ஸர்வாயுத என்றால் தூய அறிவு என்று பொருள். ஆறு சக்கரங்களும் தூய அறிவினை அடைவதற்கான அடிப்படை, ஆறாவது ஆக்ஞா சக்கரத்தினூடாக மனதினை கட்டுப்படுத்தலாம். முதல் ஐந்து சக்கரங்களும் பஞ்ச பூத அமிசமானவை, ஆக்ஞா சக்கரம் மனதினை குறிக்கும், தூய அறிவினை அடைவதற்கு பஞ்சபூதங்களையும் மனதினையும் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அறிவும் பெறவேண்டும். இந்த சக்கரங்களை கட்டுப்படுத்தும் போது சித்திகள் கிடைக்கின்றன. சுத்த வித்தை பற்றி பேசும் போது சிவ சூத்திரம் என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும். “ஸுத்தவித்யோதயாசக்ரேஸத்வ”, இதன் பொருள் சுத்தவித்தையின் மூலம் மட்டுமே சக்தியினை கட்டுப்படுத்த முடியும். இங்கு சக்தி என்பது சக்கரங்களை குறிக்கும். தூய அறிவின் மூலம் ஒருவன் சிவத்தன்மையினை அடையமுடியும். சிவத்தன்மை என்பது சிவத்துடன் ஒன்றிய நிலை. இந்த நிலையில் சிவத்தை தவிர வேறெதுவும் எஞ்சியிராது. இந்த நிலையில் அனைத்தும், எல்லோரும் சிவமாகவே தெரிவர். இந்த நிலை பிரபஞ்ச உணர்வுடன் ஒன்றிய நிலை எனப்படும். மாயை விலகிய பின்னரே சுத்த வித்தை சாத்தியமாகும். பகவத்கீதையில் கிருஷ்ணன் “ எல்லா தியாகங்களினதும் முடிவு எல்லையற்ற அறிவில் முடியும்” என்கிறார். எல்லையற்ற அறிவு என்பது பிரம்மத்தைப்பற்றிய அறிவு. இதன் விளக்கம் சக்கரங்களையும் மனதினையும் கட்டுப்படுத்தும் ஆற்றலினை பெறுவதன் மூலம் எல்லையற்ற அறிவினை பெறலாம். இதனை தவிர வேறு ஏதும் தேவை சாதகனுக்கு தேவையில்லை.

வாக்தேவிகள் தன்னை அறியும் இந்த உபாயத்தினை இவ்வளவு சூட்சுமமாக இந்த நாமத்தில் கூறியுள்ளார்கள்.

கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிஸேவிதாயை (69)
கேயசக்ரமென்னும் தேரில் வீற்றிருக்கும் மந்த்ரிணீ சக்தியால் சேவிக்கப்பட்டவள்

முந்தைய நாமத்தின் உரையில் சக்ரராஜத்தினை சூழ இரண்டு தேர்கள் உள்ளன எனகூறப்பட்டது, அவற்றும் ஒன்று இந்த நாமத்தில் விபரிக்கப்படுகிறது. அதன் பெயர் கேயச்சக்ரம். இது மந்திரிணி தேவி என அழைக்கப்படும் சியாமளா தேவியின் தேர். இந்த தேவி பற்றி பத்தவது நாமத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. இதன் வார்த்தைப்பொருள் கேயச்சக்கரத்தில் வீற்றிருக்கும் மந்திரிணீயால் வணங்கப்படுபவள் என்பதாகும். மந்திரிணி என்பது லலிதையின் முக்கியமான அமைச்சர்களில் ஒருவர். மந்திரிணி தேவி லலிதையின் மீது மிகுந்த மதிப்பும் அவளை வணங்கவும் செய்கிறாள். வணங்குதல் என்பது மதித்தலைவிட வேறானது.

நாம் முன்னர் ஸ்ரீ சக்கரத்தில் 79 யோகினிகள் இருக்கின்றார்கள் என்று பார்த்தோம். இந்த யோகினிகளும் லலிதையின் வணங்குபவர்கள். இவர்களையும் மந்திரிணி என அழைப்பர். இது சியாமளையினை விட வேறானது. அவர்களை ஸ்ரீ வித்தை பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், சாதகர்களை தேர்ச்சி பெறவைப்பவர்கள். இந்த நாம இவர்களையும் குறிப்பதாக இருக்கலாம். கேயசக்ர என்றால் முக்கியமான சக்கரம் என்றும் பொருள். இது ஸ்ரீ சக்கரத்தினை குறிக்கும். யார் ஸ்ரீ சக்கரத்தினை தியானிப்பவர்கள் மந்திர சித்தியினை அடைவார்கள், அவர்களையும் மந்திரிணி எனப்படுவர். தேவியை பஞ்சதசி மற்றும் சோடஷி மந்திர சித்தியடைந்த உபாசகர்கள் வழிபடுவார்கள். இங்கு ஸ்ரீ சக்கரத்தினை வழிபடுவதம் முக்கியத்துவம் விளங்கப்படுத்தப்படுகிறது. பல நூற்களில் மனித உடல் ஸ்ரீ சக்கரத்துடன் ஒப்பிடப்படுகிறது. ஒன்பது ஆவரணங்களும் மனித உடலின் ஒன்பது பகுதிகளுடன் ஒப்பிடப்படுகிறது. பிரமாந்திரம் எனப்படும் தலை உச்சி சஹஸ்ராரம், நெற்றி ஆக்ஞா சக்கரம், விசுத்தி சக்கரம் கழுத்தில், அநாகத சக்கரம் இருதயத்தில், மணிப்பூரகம் நாபியில், இடுப்பு (சுவாதிஷ்டான மூலாதார சக்கரங்கள்), ஒரு தொடைகளும், கால்களும் ஆக ஒன்பது பகுதிகளை குறிக்கிறது. இந்தக்குறிப்பு தெய்வ சக்தி உடலினூடாக பயணிக்கும் பாதையினை விபரிக்கிறது. சஹஸ்ரார பகுதியில் உள்ள தலையுச்சிப்பகுதியால் உட்புகுந்து எல்லாச் சக்கரங்களிலும் நிறைந்து மேலதிக சக்தி பாதத்தினூடாக வெளியேறும்.

சிவசூத்திரம் (2.3) மந்திரத்தின் இரகசியார்த்தம் பற்றி குறிப்பிடும். அறியாமை அகன்ற “நான்” என்ற உணர்வு எல்லா மந்திரங்களதும் முக்கியமான பகுதி, அதன் சாராம்சம் பிரம்மத்தினை அறிவதற்கான அறிவினை பெறுவது, இதுவே மந்திரத்தின் இரகசியம். ஆதலால் மந்திரங்கள் என்பவை எழுத்துக்களின் கோர்வை மட்டும் அல்ல, அது சக்தியின் வடிவேயாகும். இந்த எழுத்துக்கள் மாத்ரிகா எனப்படும். மாத்ரிகா என்றால் தாயிற்கு சொந்தமானது எனப்பொருள் படும். முதலாவது நாமத்தின் விளக்கத்தினை பார்க்கவும். ஆன்மீக சாதனையின் ஆரம்ப காலத்தில் மந்திர ஜெபம் மிகமுக்கியமான ஒன்றாகும்.

இந்த நாமத்தில் மந்திரத்தின் முக்கியத்துவமும், எமது உடலுடன் ஸ்ரீ சக்கரத்தினை தொடர்பு படுத்தப்பட வேண்டிய முறையும் விபரிக்கப்பட்டுள்ளது. எமது உடலிற்கும் ஸ்ரீ சக்கரமும் வேறானது இல்லை என்று உணர்வதே ஆன்மீகத்தில் தன்னையுணர்தல் எனப்படுகிறது. *****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு