இன்று ஆடிப்பிறப்பு, ஆடிப்பிறப்பு என்றால் ஆடிக்கூழும் சுவையான ஆடிக்கூழ் பாட்டும் ஞாபகம் வருவது இயல்பானது!
நவாலியூர் சோமசுந்தரப்புலவர், அம்மம்மா வழியில் உறவினரும் கூட! ஆடிப்பிறப்பிற்கு அவர் எழுதிய பாடல்கள் ஆடிக் கூழை விட சுவையானவை! பனையின் மகிமை பற்றி தாலவிலாசம் என்ற அரிய நூல் எழுதியிருக்கிறார். நூலகம் தளத்தில் இருக்கிறது.
இலங்கையின் பழைய பாடத்திட்டத்தில் தமிழ் புத்தகத்தின் கத்தரித்தோட்டத்து மத்தியில் காவல் புரிகின்ற சேவகா என்ற பாடல் அனைவருக்கும் பரீட்சயமானது! பதினையாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளதாக குறிப்பிடுகிறார்கள். அனைத்தும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை!
இவர் மகன் சோ. நடராசனார் பெரும் அறிஞர்; வல்பொல ராகுல தேரரின் நூற்கள், இலங்கை சரித்திரம் ஆகியவற்றை தமிழில் மொழிபெயர்த்தவர்.
சோமசுந்தரப்புலவர் சடாட்சர மந்திர உபதேசம் பெற்று முருகப்பெருமானை உபாசித்த தமிழறிஞர்! தமிழ் முருகனால் அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்ட மொழி என்பது வழக்கு!
ஆடிப்பிறப்பிற்கு சோமசுந்தரப்புலவரின் பாட்டு
********************************************
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.