எனக்கு மாத்தளையில் மாரியம்மன் கோவில் தேரைப் பார்கும் போதும், நல்லூர் தேர் எனும் போதும், 07 அடுக்கு 400 தொன் எடையுள்ள திருவாரூர் ஆழித்தேர் எனும் போதும் எப்போதும் கேள்வி வரும்?
இவ்வளவு பெரிய தேர் எதற்காக என்று?
சூழலியல் படித்த பின்னர்தான் விளங்கியது நாம் தனியாக இயங்கவில்லை, எப்போதும் ஒரு தொகுதியாகத்தான் இயங்குகிறோம் என்று! சமூகம் ஒன்று கூடி ஒத்திசைந்து இயங்கத்தான் தேரிழுப்பது என்று!
சூழலில் சூரியனிலிருந்து வரும் ஆற்றலை தாவரம் கவர்ந்து கொள்ள தாவரத்திலிருந்து தாவர உண்ணி கவர்ந்துகொள்ள, தாவ உண்ணியை ஊனுண்ணி கவர்ந்துகொள்ள, இறுதியாக இவை எல்லாம் மண்ணிற்குள் சென்று சக்தி சேமிப்பாக மாறி இந்த பூமியை இயக்கிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொன்றும் மற்றையதில் தங்கியிருக்கிறது. ஒன்றில்லாமல் மற்றயது இல்லை!
ஒரு சூழற்றொகுதி ஒன்றுடன் ஒன்று இணைந்து, ஒன்றுக்கொன்று உதவியாக ஒத்திசைந்தே சூழற்றொகுதிகள் உருவாகின்றன!
மனிதன் வித்தியாசமானவன்! மனம் என்ற கருவியும் இது விரிவடைந்து புத்தி என்ற கருவியும், விகாரமடைந்து "நான்" என்ற அகங்காரத்தையும் உடையவன். மனிதன் தன்னையே சூழற்றொகுதியின் மையமாக நினைப்பவன்! தான் நடப்பதற்கு, வாழ்வதற்கு மரங்கள் இடையூறாக இருக்கிறது என்று காடழிப்பவன்! தான் தொழிற்புரட்சி, தொழில்நுட்ப புரட்சி செய்கிறேன் என்று 300 மில்லியன் வருடங்களாக உருவாகிய நிலத்தடி எண்ணெயை தோண்டி எடுப்பவன். வானமும், பூமியையும் அறிந்து இயற்கைக்கு போட்டியாக அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும், அதை அடக்க வேண்டும் என்று உத்வேகம் கொண்டவன்.
இந்த நான் என்ற இயல்பு இயற்கைக்கு முரணானது! செயற்கையானது! மனிதன் தனது ஆற்றலிற்குள் தன்னை உச்சமாக செயற்படுத்திக்கொள்ள உருவாக்கிக்கொண்ட மையப்புள்ளி இது! எப்போதும் நான் செய்கிறேன், நான் தான் சிறப்பானவன்! நாம் மட்டும்தான்! என்ற உத்வேகத்தால் ஆர்வமாகச் செயற்படத்தொடங்கும் அவன் சிறிதுகாலத்தில் நான் மட்டும்தான் அறிவானவன், நான் மட்டும்தான் சிறப்பானவன் என்ற எண்ணம் உருவாகத்தொடங்க அவன் உருவாக்கிய வலையிலேயே மாட்டிக்கொள்கிறான்.
இந்த ஆணவத்தை உருவாக்கத்தொடங்கும் மனித குழுக்கள் ஒன்றுக்குள் ஒன்று ஒத்திசைந்து வலிமை பெறும் மார்க்கத்தினை இழந்து விடுகிறது! பிரச்சனைகளைத் தீர்க்க நான் என்ற சிந்தனை நாம் என்று குழுவாக மாறி மைய நாட்ட விசையை உண்டாக்க வேண்டும்! பிரச்சனையின் ஒருபகுதி எனக்குப் புரிகிறது; மறுபகுதியைப் புரிந்தவரை இணைத்தால்தான் என்னால் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்ற பரந்த பார்வை வேண்டும்!
இப்படி ஒருவருக்கு ஒருவர் ஒத்திசைந்து, உதவி செய்து குழுவாக வலிமை பெறும் ஆற்றலை விட நான் பெரியவன், எனக்குத்தான் மற்றவர்களை விட அறிவு இருக்கிறது என்ற எண்ணத்தை வளர்க்கும் சமூகத்தில் மைய நீக்க விசை அதிகமாகி அந்த சமூகம் சிதறிப்போகிறது. நீர்த்துப் போகிறது.
ஏக தலைவன் கொண்ட குழுக்கள் அழிந்து போவதற்குரிய காரணம் இயற்கையில் ஆற்றல் ஒரு மையத்தில் குவிக்க முடியாது என்பதுதான்! சூழலியலில் சக்திப் பாய்ச்சலைப் புரிந்துகொண்டால் சக்தி ஒவ்வொரு தளமாக கீழிறங்கி, சூழற்றொகுதி ஒன்றுடன் ஒன்று ஒத்திசைந்து வாழ்வதைப் புரிந்துகொள்வதால்தான்!
ஏன் தேரை பெரிதாகச் செய்து தேரிழுக்க வேண்டும்? ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும் என்ற முடிவிற்கு முற்காலத்தில் வந்திருப்பார்கள் என்பதை இப்படி விளங்கிக்கொள்ளலாம்.
இயற்கை சூழற்றொகுதியைப் பார்த்த புத்திசாலித் தமிழன் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் பலம்! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிந்துகொண்டான்!
ஆனால் " நான்" "எனது சாதி" "எனது ஊர்" என்ற வலிமையான அகங்காரம் எண்ணம் கொண்டவனை ஒன்று சேர்க்க ஒரு வழிமுறை தேவை! அனைவரையும் இழுக்க வைக்க வேண்டுமென்றால் தேர் மிகப்பெரிதாக இருக்க வேண்டும்! ஊரே கூடி தேரிழுக்க வேண்டும். ஒற்றுமையும் ஒத்திசைவும் வேண்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.