எமது வலைத்தளம் இதுவரை
நாம் குருநாதரிடம் கற்றவற்றை பகிரும் தளமாக மட்டுமே இருந்து வந்தது, ஆனால் கடந்த
நவராத்திரியிலிருந்து குருநாதர் அறிவுறுத்தியபடி ஆர்வம் உள்ளவர்களுக்கும், சிரத்தை
உள்ளவர்களுக்கு தகவல்களை மட்டும் வழங்கினால் போதாது, அவர்களை சரியான முறையில்
சாதனை செய்வதற்குரிய வழிமுறையினையும் செய்யவேண்டும் எனப்பணித்தார்கள்! இது எமது
தளத்தினை பார்வையிட்டு எப்படி பயிற்சிகளை கற்றுக்கொள்வது என்று கேட்டு வருபவர்களது
பிரார்த்தனையின் பலனாக இருக்கும் என நம்புகிறோம்!
அதன் பிரகாரம் எமது
தினசரி தியான சாதனை மூலம் எமது தளத்திற்கு
வருகைதந்து பார்வையிடுபவர்களுக்கு குருமண்டலத்தில் அருள் காந்த சக்தி கிடைக்கும்
வண்ணம் சில தியான முறைகள் மூலம் வழி செய்துள்ளோம். அவற்றை எமது வலைத்தளத்தின் தலைப்பு
பகுதியில் தந்துள்ளோம், அதனை சில முறை வாசிப்பதாலும், தரப்பட்ட
குருநாமங்களை சிலதடவைகள் மனதில் உச்சரிப்பதாலும் உங்களது மனதில் தெய்வ காந்த சக்தி பாய்ச்சப்படும்.
இங்கு அந்த பகுதியை வாசிப்பது மட்டுமே உங்கள் முயற்சி! மற்றைய அனைத்து
செய்முறைகளும் உங்களுக்காக குருமண்டலத்தில் இருக்கும் குருமார்கள்
செய்துகொள்வார்கள்! இது எப்படி நடக்கிறது என அறிய நினைப்பவர்கள் எமது முந்தைய
பதிவுகளையும், மனம், சித்தம் எப்படி செயற்படுகிறது என்பதனையும் அறிந்து கொண்டால் விளங்கிகொள்ளலாம்.
இந்த பயிற்சி மிக முக்கியமானது! இதன்முலமே நீங்கள் குருமண்டலத்துடன் தொடர்பு
கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்!
பொதுவாக ஆன்மீகம்
என்றவுடன் இன்றைய காலப்பகுதியில் சாஸ்திரங்களில் குருவின் முக்கியத்துவம்
விபரிக்கப்பட்டுள்ள விதத்தினை சாதகமாக ஆக்கிக்கொண்டு ஆஸ்ரமம் இருந்தால்தான் குரு,
பௌதீகமாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய இடமாக, வியாபார ஸ்தலமாக,
ஆன்மீகம் சந்தைப்படுத்தப்படுகிறது. இவற்றில் எதுவித உண்மையும் இல்லை என்பதனை எமது
வாசகர்கள் உணர வேண்டுகிறோம். ஆன்மீகம் என்பது எமக்கு உள்ளே எம்மில் நடைபெறும்
செய்முறை, இதனை ஆரம்பிப்பதற்கும் முடிப்பதற்கும் மட்டுமே குரு தேவை! மற்றைய பகுதி
எமது பொறுப்பு! எமது குருநாதர் இதனை இப்படிக்கூறுவார் “ஒருவனது தெய்வ சாதனை வெற்றி
90% ஒருவனுடைய சுயமுயற்சி, 10% குருவினுடைய பங்கு! அந்த பத்து சதவீதத்தில் 5% ஆராம்பிப்பதற்கு
5% கடைசிப்படியில்
இறைவனுடன் இரண்டற கலப்பதற்கும்! எனினும் குரு என்பவர் தவிர்க்கமுடியாதவர்” ஆக
ஆரம்பிப்பதற்கும் முடிப்பதற்கும் மட்டுமே குருவின் உதவி தேவை! மற்றையவை எமது பணி! ஆனால்
இன்றைய காலத்தில் குருமார்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை தன்னம்பிக்கை
அற்ற, தம்மை சார்ந்து இருக்க வைக்கும் உத்தியுடன் குருபக்தி என்ற உத்தியினை
பயன்படுத்துகின்றனர். உண்மையில் குரு என்பவர் எம்மை நாம் யார் என அறிய உதவி
செய்பவர்! அதனை தானும் உணர்ந்தவர்! இது உண்மையில் ஒருவித மனித பிம்பமோ! தனிமனித
வணக்கமோ கிடையாது! மனம் ஆன்மா போன்ற சக்திகளின் இணைவு! அதாவது உயர்ந்த சக்தி
ஒன்றுடன் நம்மை இணைத்து நாமும் சக்தி பெற்று அந்த சக்தியினையும் வளர்க்கும் முறை!
இதையே சித்தர்கள் செய்து வைத்துப்போனார்கள்!
இந்த அடிப்படையில் எமது
வலைத்தளத்தை வாசித்து உண்மையில் தெய்வ சாதனை செய்துகொண்டு தமது
உலகவாழ்க்கையினையும், ஆன்ம வாழ்வினையும் பிரகாசப்படுத்த நினைப்பவர்கள் இங்கு
கூறப்பட்ட விடயங்களை தாராளமாக முயற்சிக்கலாம்.
அடுத்து எம்மை
தொடர்புகொள்ளும் அன்பர்கள் பலரிடம் இருந்து நாம் உணர்ந்துகொண்ட ஒருவிடயம்; பலர் குழப்ப
நிலையில் உள்ளார்கள் என்பது! ஆன்மீகம், பௌதிக வாழ்க்கை என்ற இரண்டு வாழ்க்கை
உள்ளதாகவும் ஒன்றினை அடைவதானால் மற்ற ஒன்றை தியாகம் செய்யவேண்டும் எனவும், இறைவனை
வழிபட பல கட்டுப்பாடுகள் உண்டு, தினசரி வேலைகளுடன் எம்மால் செய்ய முடியாது, வயதான
காலத்தில்தான் இறை சாதனை! மனதில் காம எண்ணங்கள் அதிகமாக உள்ளன! இப்படி பல
பிரச்சனையினை மனதில் சுமந்த வண்ணம் தம்மையே தாழ்வாக எண்ணி தமது ஆன்ம பலத்தினை சிதைத்துக்
கொள்கின்றனர். மேற்குறிய எந்தவித எண்ணமோ வேறு எந்த கட்டுப்பாடோ இறை சாதனைக்கு தடை என்று
எண்ணினால் அது முற்றிலும் பிழையான கருத்து! இருக்க வேண்டிய ஒரே தகுதி நாம் அடைய
வேண்டிய நிலையினை அடைவதற்குரிய தகுதியை
விடாமுயற்சியுடன் வளர்த்துக்கொள்ள விரும்பும் தளராத மனம்! இத்தகைய பண்பு ஒன்று
மட்டும் இருக்குமானால் உங்களால் எக்காரியத்தையும் இலகுவாக செய்யமுடியும்!
நாம் உலகத்தில் தான்
இருக்கிறோம், அதலால் உலகவாழ்க்கையினை தவிர்க்க முடியாது, உலக வாழ்க்கையினை தவிர்த்தால்
நாம் உண்மைத்தன்மையினை தவிர்த்து விட்டு கற்பனை வாதத்தில் வாழ்பவர்களாகி விடுவோம்!
தெய்வ சக்தி என்பது தனியாக எங்கோ பரலோகத்தில் இருக்கும் ஒரு வஸ்து அல்ல! எம்மிலே,
எமக்கு உள்ளேயே இரண்டற கலந்து எல்லாமுமாய் இருப்பது! அதனை உணர்வதே ஞானம்! அதனை
சரியாக பயன்படுத்த தெரிந்தால் அது சித்தி! இதற்காக எதையும் விட்டுவிட்டு ஓடத்தேவையில்லை!
போகமும் மோட்சமும் ஒன்றுடன் ஒன்று கலந்தது! அதை பிரித்தறியும் சக்தியே ஞானம்! இதனை
பெறுவதற்கே தெய்வ சாதனைகள்! இதை விடுத்து அதனை விட்டுவிட்டு தூர ஓடுவதால் எதனையும்
பெறமுடியாது! கிணற்று தவளை போல் இதுதான் உலகம் என்று நம்பிக்கொண்டு வாழ்வோம்!
இவற்றை எப்படி
அனுபவத்திற்கு கொண்டு வருவது என்பதுதான் அனைவரது கேள்வியும்! அதற்கான
வழிமுறையினையே இந்த பதிவில் சொல்லப்போகிறோம்!
- முதலில் எம்மில்
உறுதியினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்! இந்த உறுதியினை வெறும் உதடுகளும், வாயும்
சொல்லும் மேலோட்டமானதாக இல்லாமல் ஆழ்மனதில் பதிந்து உள்ள ஒரு பண்பாக மாறவேண்டும்.
இதனை செய்வதற்கு சித்த சாதனை உதவி புரியும், எமது வலைத்தளத்திற்கு இறை சாதனை பற்றி
அறிந்து அதனை பெற்று உலக இன்பங்களும், மோஷ சாதனையும் பெற என்ற எண்ணத்துடன் வருகை
தந்திருப்பீர்களேயானால் இந்த பதிவில் உள்ள சித்த சாதனையுடன் உங்கள் சாதனையினை
தொடங்குங்கள்! உங்கள் வாழ்வில் அற்புதமான இன்பமயமான, மாற்றத்தினை காண்பீர்கள்! தெய்வ
சக்தி உங்களுக்கு எப்போதும் உதவிக்கொண்டிருப்பதை உணர்வீர்கள்! இந்த சாதனை உங்களை
அடிப்படையில் தயார் செய்வதற்கு!
- இரண்டாவது படி எம்மைவிட
எமக்கு உதவக்கூடிய உயர்ந்த சக்தியுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வது! எமது
வலைத்தளத்தினை பார்வையிட வரும் அனைத்து ஆன்மாக்களுக்கும் எமது குருமண்டலத்தின்
குருமார்கள் அனைவரும் உதவி செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்கள்! ஆகவே அவர்களது
உதவியினை பெறுவதற்கு தினமும் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம், ஆகவே
கீழ்வரும் குரு நாமங்களை தினமும் கூறி எம்மை சரியான பாதையில் வழி நடத்தும் படி
வேண்டிக்கொள்ளவேண்டும். மீண்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள், அவர்களது பணி
உங்களுக்கு காரியத்தினை நடாத்தும் சக்தியினை தந்து உதவுவதே! காரியத்தை ஆற்ற
வேண்டியது நீங்கள்! கீழ்வரும் பத்து குருமார்களும் எமது சித்த வித்யா மண்டலத்தினை
வழி நடாத்தும், சக்தியளிக்கும் குருமார்கள்! இவர்களை தினமும் நினைப்பது அவசியம்!
- சித்த வித்யா குருமண்டலம்
:
1. ஓம்
ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குரவே போற்றி!
2. ஓம்
ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ
அகஸ்திய குரவே போற்றி!
3. ஓம்
ஸ்ரீ தத்தாத்திரேய குரவே போற்றி !
4. ஓம்
ஸ்ரீ போக நாத குரவே போற்றி!
5. ஓம்
ஸ்ரீ ஈஸ்வர பட்ட குரவே போற்றி!
6. ஓம்
ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குரவே போற்றி!
7. ஓம்
பரம் தத்வாய நாராயண குரவே போற்றி!
8. ஓம்
ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குரவே போற்றி!
9. ஓம்
ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குரவே போற்றி!
10.ஓம்
ஸ்ரீ ஸோமானந்த நாத ஆத்ம குரவே போற்றி!
இந்த குரு நாமங்களை
தினசரி கூறிவர உங்கள் மனம், சித்தம் அவர்களுடன் தொடர்புகொள்ள தொடங்கும். இதனால்
உங்கள் ஞானம் அதிகரித்து சரியான பாதையில்
முன்னேறிச் செல்வீர்கள்!
4. மேற்கூறிய இரண்டு
படிகளையும் ஒழுங்காக தினசரி செய்தபின்னர் ஆதி பராசக்தியினை நெருங்கும் சாதனையினை
செய்யத்தொடங்க வேண்டும். இதுவே பரிணாமத்தினை உயர்த்தும் வழியாகும். எமது
வலைத்தளத்தினை வாசித்து இவ்வழியில் முன்னேற விரும்புபவர்களுக்கு இருவகையான
பராசக்தி உபாசனையினை குருமண்டல குருமார்கள் பரிந்துரைத்துள்ளனர்.
- காயத்ரி உபாசனை : இதுபற்றிய விரிவாக
எழுதியுள்ளோம், பதிவுகளின் தொகுப்பை எமது வலைத்தளத்தின் உள் காணலாம். காயத்ரி
சாதனை ஒருவனது அறிவினை தூண்டி இறைவழியில் சரியாக நடாத்தி வைக்கும்.
- ஸ்ரீ ஜோதி – ஸ்ரீ வித்யா: இது போகம் மோஷம் ஆகிய
இரண்டையும் வாழ்வில் தரக்கூடியது. இதுபற்றிய மேலதிக விபரங்களை தகுந்த இணைப்புகளில்
காண்க,
நீங்கள் செய்யவேண்டியது
உங்களுக்கு கடைப்பிடிக்க இலகுவான மனதிற்கு பிடித்த ஒரு வழியினை தேர்ந்து எடுத்து
அதனை பயிற்சிப்பது. இதற்கு தீட்சை வேண்டும் என்பது பொது விதி! அதற்கு நீங்கள் ஸ்ரீ
ஜோதி இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை 08.00 – 08.40 மணி அளவில்
உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில்
(receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த
சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள்
சாதனை மெதுவாக பலனளிக்க தொடங்கும்.
தற்கால நிலவரத்திற்கேற்ப,
வாழ்க்கை முறைக்கு ஏற்ப சித்தர்களதும், ரிஷிகளதும் தெய்வ சாதனை முறைகளை அனைவரும்
காடு மேடு என்று அலைந்து கஷ்டப்படாமல் அவரவர் இடத்திலேயே இருந்து கொண்டு செய்தவண்ணம்
உயர்ந்த ஞானத்தினையும், தெய்வ சக்தியினையும் பெறும் எளிய வழிமுறையினை இங்கு
வெளிப்படுத்தியுள்ளோம். இதற்காக நீங்கள் செலுத்தவேண்டிய கட்டணம் உங்கள் ஆர்வமும்,
சிரத்தையும், அன்பும் மட்டுமே! இதில் கூறியுள்ளபடி கடைப்பிடிக்க உங்கள்
இன்பமயமானதாய் மாறும் என்பதனை உறுதி கூறுகிறோம்!
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
என்ற திருமூலரின்
வாக்கிற்கு அமைய இதனை வெளிப்படுத்தியுள்ளோம். தேவையானவர் முயற்சித்து பயன் பெறுக!
Dear Suman,
ReplyDeleteThank u so much for doing this noble job :)
காயத்ரி உபாசனை செய்ய முன் கட்டாயம் தீட்சை பெற்றிருக்க வேண்டுமா ? தீட்சை பெறாது செய்யாதால் பலனளிக்காதா?
ReplyDelete