காயத்ரி ஜெபம் (பகுதி - 01) ரிஷிகேஷத்தின் ரிஷி சுவாமி சிவானந்தர் அருளியது

இந்தப்பதிவு யோக மார்க்கத்தினை உலகறியச் செய்த மஹாயோகியான ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தரது காயத்ரி ஜெபம் கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும். எமது வாசகர்களுக்கும் காயத்ரி சாதனை செய்ய விரும்புபவர்களுக்கும் உந்ததுதலையும் வழிகாட்டக்கூடிய ஒரு கட்டுரையாதலால் இங்கு பதிவிடுகிறோம். 

காயத்ரி தியானம்

ஓம் பூர் புவஹ ஸ்வஹ தத் ஸவிதுர் வரேண்யம்; பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நஹ ப்ரசோதயாத்

சப்த அர்த்தம் (அதாவது சொற்களுடைய பொருள்)
ஓம் - பரப்பிரம்மன், பூர் - பூவுலகம், புவஹ - அந்தரிக்ஷ உலகம், ஸ்வ - சுவர்க்க உலகம், தத் - பரமாத்மா, ஸவிதுர் - சூரிய ஒளியான ஈஸ்வரன், வரேண்யம் - வழிபடுவதற்குரிய தகுதி,  பர்கோ - அறியாமையும் பாவங்க்களையும் அகற்றும்,  தேவஸ்ய - தெய்வ சக்தியுடைய ஞான ஸ்வரூபம், தீமஹி - தியானிப்போமாக, தியோ - புத்தி, யோ - எந்த, நஹ - எங்க்களுடைய, ப்ரசோதயாத் - ஞானமடைய செய்யும்.

பாவ அர்த்தம் (அதாவது தியானிக்க வேண்டிய அர்த்தம்)

எல்லாம் வல்ல பரம்பொருளான ஈஸ்வரனை தியானிப்போமாக; யார் இந்த உலகங்களை சிருஷ்டித்தானோ, யார் வனங்க்குவதற்கு தகுதியானவனோ, யார் எம்முடைய பாவங்களையும் அறியாமையினையும் அகற்றுபவனோ அந்த பேரொளி எமது புத்தியினை நல்வழியில் தூண்டட்டும். 

சாதகன் காயத்ரி மாதாவினை நோக்கி கீழ்வருமாறு பிரார்த்திக்க வேண்டும்; " தாயே, இந்தப் பிறப்பில் நான் பெற்ற இந்த உடலும் மனமும் புத்தியும் அஞ்ஞானமும் நிறைந்து துன்பத்தில் உழல்கின்றேன். என்னுடைய உண்மையான் ஆன்ம ஸ்வரூபத்தினை அறியக்கூடிய ஞானத்தினையும், தூய மனம், புத்தியினையும் ஒளியினையும் எனக்கு தரவேண்டும்" 

இதுவே பிரம்ம காயத்ரி மந்திரம், காயத்ரி வேதங்களின் தாய், வேத மாதா, காயத்ரியினை விட சிறந்த மந்திரம் எதுவுமில்லை, சுத்தப்பிரணவமாகிய "ஓம்" சன்னியாசிகளுக்குரியது, காயத்ரி பிரம்மச்சாரிகளுக்கும் குடும்பஸ்தர்களுக்கும் உரியது. ஓம்கார ஜெபத்தினால் தியானத்தினால் பெறக்கூடிய அத்தனை பலங்களையும் காயத்ரியினை ஜெபிப்பதனால் பெறலாம். ஓம்காரத்தினை சன்னியாசி ஜெபித்து அடையும் பரமஹம்ஸ நிலையினை காயத்ரியினை இடைவிடாது ஜெபிக்கும் கிரஹஸ்தனும் பிரம்மச்சாரியும் அடைகின்றனர்.

சாதனை புரிவதற்கான சில அனுபவ முன்மொழிவுகள்
பிரம்மமுகூர்த்தம் எனப்படும் காலை 04.00 மணிக்கு எழுந்து காயத்ரியினை (தாமரையில் அமர்ந்துள்ள பஞ்ச முக காயத்ரியினை) பத்மாசனம், சித்தாசனம், வீராஸனம் அல்லது சுகாசனத்தில் வ்டக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபத்தினை ஆரம்பிக்கவும். அறையில் வாசனை பத்தி ஒன்றினை ஏறவும், வெயில் காலத்தில் குளித்தபின்னர் ஜெபத்தினை ஆரம்பிக்கலாம், குளிர்காலம் ஆயின் கை, கால் முகம் கழுவி ஆசமனம் செய்தபின்னர் ஆரம்பிக்கலாம். இரண்டு மணித்தியாலங்கள் ஜெபத்தினை தொடரவும். பின்னர் இரவு 07.00 மணிமுதல் 08.00 மணிவரை ஆக ஓரு நாளில் இருதடவை ஜெபம் செய்யவும். ஜெபத்தின் போதும் அந்த நாளின் மற்றைய வேளைகளில் தொடர்ச்சியாக காயத்ரியிடமிருந்து ஒளியினையும், தூய்மையினையும், ஞானத்தினையும் பெறுவதாக பாவிக்கவும். இது மிக முக்கியமான பாவனை. தியானத்தின் போது காயத்ரியின் உருவத்தினை திரிபுடி எனப்படும் புருவ மத்தியில் கண்களை மூடி தியானிக்கவும். அப்படி இல்லாவிடின் இருதயத்தில் தாமரையில் அமர்ந்திருப்பதாக தியானிக்கலாம். இப்படியான தியானத்தினால் காயத்ரியினை நீங்கள் சதரிசிக்கலாம்.


நாளொன்றிற்கு 3000 தொடக்கம் 4000 ஜெபம் செய்வது மிக்க நன்று, இதனால் உங்கள் மனமும் புத்தியும் துரிதமாக சுத்தியடையும், இந்த அளவினை செய்யமுடியாவிட்டால் தினசரி 1008 செய்யலாம். இதை செய்வதும் கஷ்டமாயின் மிகக் குறைந்தது 108 செய்யலாம், அதைக்கூட ஒருதடவையில் செய்ய கஷ்டமாயின் 36 தடவை சூரியோதயத்திலும், 36 தடவை நண்பகலிலும், 36 தடவை சூரிய அஸ்தமன நேரத்திலும் செய்யலாம். இந்த சந்தியாவேளைகளில் ஒரு அபூர்வ தெய்வ காந்த சக்தி பூவுலகில் செயற்படுகிறது, அந்த வேளைகளில் ஜெபிப்பதால் மனம் துரிதமாக சுத்தியடைகிறது. மனம் சத்துவ குணத்தால் நிறைவடையும். மன ஒருமை சக்தி எதுவித முயற்சியும் இல்லாமல் அதிகரிக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் எழும்ப முடியாவிட்டால் சூரியோதயத்திற்கு முன்னர் எழுந்து ஜெபத்தினை தொடங்கவும். யார் சந்தியா வேளையில் காயத்ரியினை ஜெபிக்க தவறுகிறார்களோ அவன் பிரஷ்டன் ஆகின்றான், அதாவது வீழ்ச்சியடைந்த மனிதனாகிறான், அவன் தனது வலிமை, வனப்பு, பிரம்ம தேஜஸினை இழக்கின்றான்.

எப்படி ஜெபம் செய்யவேண்டும்?
காயத்ரி மந்திரம் ஒன்பது பெயர்களை கொண்டிருக்கிறது 1. ஓம் 2. பூர் 3. புவஹ 4. ஸ்வஹ 5. தத் 6. ஸவிதுர் 7. வரேண்யம் 8. பர்கோ 9. தேவஸ்ய, இந்த ஒன்பது பெயர்களும் கடவுளை பணிந்து வேண்டும் நாமங்கள். தீமஹி என்பது கடவுளை வணங்க்குவோம் என்பதை குறைக்கும், தியோ யோ நஹ ப்ரசோதயாத் என்பது பிரார்த்தனை. காயத்ரி மந்திரம் ஐந்து இடங்களில் நிறுத்தி ஜெபிக்க வேண்டும். முதலாவது நிறுத்தல் "ஓம்"; இரண்டாவது நிறுத்தல் "பூர் புவ ஸ்வஹ"; மூன்றாவது நிறுத்தல் "தத் ஸவிதுர்வரேண்யம்"; நான்காவது நிறுத்தல் "பர்கோ தேவஸ்ய தீமஹி"; ஐந்தாவது நிறுத்தல் "தியோ யோ நஹ ப்ரசோதயாத்", காயத்ரியினை ஜெபிக்கும் போது மேற்கூறிய ஒவ்வொரு பதத்திலும் நிறுத்தி ஜெபிக்கவேண்டும்.

காயத்ரி மந்திரத்தின் அதிஷ்டான தெய்வம் ஸவிதா, மந்திரத்தின் வாய் அக்னி ஸ்வரூபம், கண்டறிந்த ரிஷி விஸ்வாமித்திரர், சந்தஸ் (இலக்கண அமைப்பு) காயத்ரி). இது பிரணாயாமத்திற்குரிய மந்திரம். யார் காயத்ரியினை தியானிக்கிறானோ அவன் மஹாவிஷ்ணுவினை தியானித்ததன்  பலனை பெறுகின்றான்.


எந்தவொரு மனிதனும் மானசீகமாக காயத்ரியினை நடக்கும் போதோ, படுத்திருக்கும் போதோ, அமரும் போதோ ஜெபிக்கலாம். இதனால் எந்த பாவங்களும் அவனை அண்டாது. வேதங்களின் அனைவருக்கும் பொதுவான மந்திரமாக குறிக்கப்பட்டிருப்பது காயத்ரி, "சமனோ மந்த்ரஹ", இது இந்துக்கள் அனைவருக்கும் பொதுவான மந்திரம். அனைத்து உபநிஷத்தினதும், நான்கு வேதங்களினதும் சாரம் மூன்று வ்யாஹ்ருதிகளுடன் கூடிய காயத்ரி. யார் காயத்ரியினை ஜெபிக்கிறானோ அவனே உண்மையான பிராமணன், ஜெபிக்காதவன் சூத்திரன், இதுவே வேதகால பிராமண சூத்திரன் என்பதற்கான பாகுபாடு. (இதிலிருந்து யார் ஞானத்தினாலும் அறிவினாலும் சமூகத்தினை வழி நடத்துகிறார்களோ அவர்களே பிராமணர்கள் எனப்பட்டார்கள் அன்றி பிறப்பினால் வருவதில்லை பிராமணத்துவம், அதை அடையும் பக்குவத்தினை தருவது காயத்ரி சாதனை)


Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு