திருமந்திரம் திருமூலரின் 3000 வருட தவத்தின் செறிவு; ஆண்டொன்றுக்கு ஒரு பாடல் எழுதினார் என்பது அவருடைய உணர்வு (consciousness) உயர் நிலையை எட்ட அந்த அனுபவத்தைப் பாடலாக எழுதினார் என்று கொள்ள வேண்டும். இந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் நாம் படிக்கும் போது திருமூலர் பெற்ற உணர்வினை நாம் பெறமுடியுமாக இருந்தால் அவர் பாடலாக்கியதன் நோக்கம் நிறைவேறும். இதுவே பாராயணத்தின் இலக்கு.
நேற்றுப் பதிந்த இந்தப்பாடலை விளக்குமாறு சிலர் கேட்டிருந்தனர். திருமூலரின் உயர் உணர்வு நிலைப் பாடலை முழுமையாக விளக்க முடியுமா என்பது தெரியவில்லை! எனினும் பேராசையால் முயன்றுள்ளேன்.
பிண்ட லிங்கம் - பாடல் 01
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.
இந்தப்பாடலை எளிய தமிழிற்கு மொழிபெயர்த்தால்,
மனிதரின் உடல் அமைப்பு
சிவத்தின் குறியீடு
மனிதரின் உடல் அமைப்பு
சிதம்பரத்தின் இரகசியம்
மனிதரின் உடல் அமைப்பு
சதாசிவத்தின் தத்துவ விளக்கம்
மனிதரின் உடல் அமைப்பு
நடராஜரின் திருக்கூத்தின் விளக்கம்
வடிவு என்பதன் அடிச்சொல் வடி என்பதாகும்; வடித்தெடுத்தல் என்று பொருள்; சிவமாகிய எல்லையற்ற பரம்பொருள் தன்னை வடித்தெடுத்துக்கொண்டு பிண்டமாகவும், அண்டமாகவும் ஆக்கிக்கொண்டிருக்கிறது என்று பொருளாகிறது; ஆகவே மனித உடல் என்பது சிவத்தின் தன்மைகளின் இரகசியத்தை அறிந்துகொள்ள வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.
மனித உடல் என்பது சிதம்பர இரகசியத்தினை அறிந்துகொள்ளக்கூடிய வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.
மனித உடல் என்பது சதாசிவ தத்துவத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ளக்கூடிய வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.
மனித உடல் என்பது திருக்கூத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ள வடித்தெடுத்த சுருக்கிய வடிவம்.
ஒரு சாதகன் உண்மையினை புறத்தில் தேடாமல் தனது உடலில் இருந்து சாதனையைச் செய்யவேண்டும் என்ற உண்மை இந்தப் பாடலின் மூலம் பெறப்படுகிறது.
சிவம், சிதம்பரம், சதாசிவம், திருக்கூத்து மிக விரிவாக விளக்க வேண்டியவை! குருவருள் வாய்க்கும் வேறொரு நேரம் இதுபற்றி உரையாடுவோம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.